சூர்யா தயாரிப்பில் நடிப்பில், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ் நடிப்பில், சீயன் ரோல்டன் இசையில், S R கதிர் ஒளிப்பதிவில், தா செ ஞானவேல் இயக்கத்தில் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவரும் படம் ‘ஜெய் பீம்’.
பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், போலி வழக்கு போடும் காவல்துறையினரால் எப்படி பாதிக்கப்படுகிறது? மேலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி அவர்களுக்கான சட்டங்கள் அனைத்தையும் பேசும் படியாக ஒரு உண்மைச் சம்பவத்தை படமாகியிருக்கிறார்கள்.
முதற் கட்சியிலே பழங்குடியினர்களின் தொழிலையும் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் அருமையான ஒளிப்பதிவுடன் சொல்லிவிட்டு, ஒரு மாபெரும் மனித உரிமை வழக்கை வாதாடி ஜெயிக்கும் வலுவான வக்கீலையும்(சூர்யா), மக்களுக்காக அவர் சாலையில் இறங்கி போராடும் காட்சியையும் காட்ட படம் தொடங்குகிறது.
அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்கும் ஒரு பழங்குடியினர்களில் உள்ள ஒருவரை(ராஜா கண்ணு) போலீஸ் தேடுகிறது. அவர் ஊரில் இல்லாத காரணத்தினால் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தாரை பிடித்து செம வெளு வெளுக்கின்றனர். அந்த சில காட்சிகள் மிகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் காட்டியதற்கு பாராட்டுக்கள்.
பின்னர் ராஜா கண்ணு மாட்டிக் கொள்ள செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ள சொல்லி மேலிடத்தின் பிரஷர் தாங்காமல் மிருகத்தனமாக அடிக்கின்றனர். அன்று இரவு ராஜா கண்ணு மற்றும் அவருடன் இருந்த இருவர் தப்பித்து செல்ல கதை சூடு பிடிக்கிறது.
அவர்கள் என்ன ஆனார்கள் ராஜா கண்ணு அவரின் மனைவி செங்கனி (லிஜோ மோல் ஜோஸ்) வழக்கறிஞர் சூர்யாவின் உதவியுடன் கண்டுபிடித்தாரா? அவர்களுக்கான நீதி வழங்கப்பட்டதா? என்பது மீதி கதை.
உலகத்தில் மோசமானவர்கள் போலீஸ் தான் என நினைக்கும் வக்கீல் மற்றும் வக்கீல்கள் தான் மிக மோசமானவர்கள் என நினைக்கும் போலீஸ் (பிரகாஷ் ராஜ்) இணைந்து தேடும் காட்சிகளும் வசனங்களும் சுவாரஸ்யமாய் இருக்கும்.
1995ல் நடக்கும் இந்த சம்பவத்தை மிகவும் அழகாக அன்று இருந்தது போல் காட்டுவதற்காக சிரமப்பட்டு அதை சாதித்திருக்கிறார்கள். அன்று இருந்த உயர் அதிகாரிகளின் பெயரை குறிப்பிடும் அளவிற்கு தகவல்கள் சேமித்து எடுத்திருக்கிறார்கள்.
வழக்கம் போல் நடிப்புக்கு பஞ்சம் இல்லை சூர்யா அசத்தியுள்ளார். ரஜிஷா விஜயனுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்றாலும் வந்த காட்சிகளில் சொதப்பல் இல்லை.
குறிப்பாக பேச பட வேண்டிய கதாபாத்திரம் செங்கனி படத்தை முற்றிலும் சுமக்கும் கதாபாத்திரம். அதை மிகவும் இயல்பாக ரசிக்கும் வகையிலும், கதைக்குள் நம்மை இழுத்து செய்யும் வகையிலும் நடித்திருப்பது ஆச்சர்யம்.
ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டனும் எந்த குறையும் வைக்கவில்லை.
போலீஸ், உறவினர்கள், அரசு தரப்பு வக்கீல் (குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ்), ஜட்ஜ் என அனைவரும் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள்.
கதைக்கேற்ற வரிகளுடன் பாடல்களை எழுதியுள்ளனர் யுகபாரதி, அறிவு.
எங்கும் பிசிறு தட்டவில்லை பிலோமின் ராஜ்-ன் படத் தொகுப்பு.
ஆழமான ஆராய்ச்சி, அழுத்தமான வசனம், சுவாரஸ்யமான திரைக்கதை, தேவைப்பட்ட இடங்களில் ட்விஸ்ட் என ஆடியன்ஸை ஏமாற்றவில்லை தா.செ.ஞானவேல் அவரின் இயக்கம்.
ஜெய் பீம் – உண்மைக் கரு கலையவில்லை