மீண்டும் முழங்கிய ஜெய் ஹிந்த் – அதிர்ந்த சட்டப்பேரவை

இந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைத்துக் கட்சியினராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம், தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை படித்து முடிக்கும்போது ஜெய் ஹிந்த் அதாவது, வெல்க இந்தியா!
என்று முழக்கமிடுவாரா? என்பதுதான்!

மறந்த பன்வாரிலால்

ஏனென்றால் கடந்த ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு ஜூன் 21-ம் தேதி அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பித்தது.

அதன் பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரான ஈஸ்வரன் எம்எல்ஏ, “ஆளுநரின் இந்த உரையை படித்தவுடனேயே தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என்பதை புரிந்து கொண்டேன். ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், சென்ற ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே, நன்றி, வணக்கம், ஜெய் ஹிந்த் என்று போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் சொன்னதை இந்த அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என்ற அந்த நம்பிக்கை இன்று வந்திருக்கிறது” என்று உற்சாகமாய் குறிப்பிட்டார்.

அவர் இப்படிப் பேசிய பிறகுதான் ஆளுநர் உரையில் அதுவரை வழக்கமாக இடம்பெறும் ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

ஆளுநர் மாற்றம்

பொதுவாக ஆளுநர்கள், தங்களது உரையை நிறைவு செய்யும்போது பாரதத் தாயை போற்றும் விதமாக “ஜெய் ஹிந்த்!” என்ற முழக்கத்துடன் முடிப்பதுதான் வழக்கம். ஆனால் திமுக அரசு தயாரித்துக் கொடுத்த அந்த உரையில் ஜெய் ஹிந்த் என்ற வாசகம் இல்லை! அதனால் ஆளுநர் ஜெய்ஹிந்த் கூறவில்லை என்று அப்போது இதற்கு காரணம் சொல்லப்பட்டது.

இருந்தாலும் இது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழக சட்டப்பேரவையில் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் இருந்தும் இதற்கு ஏன் உடனே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், 18 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களா?… என்றும் பொதுவெளியில் தேசியவாதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் டெல்லி பாஜக மேலிடம் வரை கொண்டுசெல்லப்பட்டது. இந்த நிலையில்தான் திடீரென பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்து வந்த ஆர்.என்.ரவி செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

எனவேதான் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில், ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது, ஜெய்ஹிந்த் முழக்கம் இடம் பெறுமா?… இடம் பெறாதா?… என்ற பெரிய கேள்வி எழுந்தது. ஒருவேளை உரையில் ஜெய்ஹிந்த் இடம் பெறவில்லை என்றால் ஆளுநர் என்ன செய்வார்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

ஆனால் தற்போதும் திமுக அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் காணப்படவில்லை. சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும்,
செய்தியாளர்களுக்கும் வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில நகல்கள் இரண்டிலுமே அந்த முழக்கம் விடுபட்டு இருந்தது.

அதேநேரம் அந்த முழக்கத்தை ஈடுசெய்யும் விதமாக

“வாழிய செந்தமிழ்!
வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

என்றபோதிலும் தனது தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஆளுநர் ரவி உரையை நிறைவு செய்தபோது ஜெய்ஹிந்த் என்று முழக்கமிட்டார்.

இது தமிழக பாஜக, காங்கிரஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி தேசியவாதிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆளும் கட்சிக்கு பதிலடி

இதுகுறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது, “கடந்த ஆண்டு திமுக அரசின் முதல் கூட்டத் தொடரின்போது சட்டப்பேரவையில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜெய்ஹிந்த் கூறாதது வருத்தம் தரும் நிகழ்வாக இருந்தது.

ஏனென்றால் அச்சொல் தமிழரும், சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவருமான செண்பகராமன் பிள்ளை முதன்முதலில் முழங்கியது. நேதாஜியால் அகில இந்திய அளவில் புகழ்பெறச் செய்யப்பட்ட இந்த வார்த்தை, இப்போதும் ராணுவத்தில் அதிகாரிகள் மத்தியில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது, தேசப்பற்றையும் நினைவுபடுத்துகிறது. அதை ஏன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கேலி செய்வதுபோல் பேசினார் என்பதுதான் புரியவில்லை.

இதனால் அவர் பிரிவினைவாதம் பேசுகிறாரோ என்று கூட விவாதங்களும் எழுந்தன.
திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவையும் ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இடம்பெறாதது, சரியான நடவடிக்கைதான். இதில் எந்த தவறும் இல்லை ஈஸ்வரனுக்கு ஆதரவாக நின்றன.

இப்போது தமிழக ஆளுநர் ரவி, தனது தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக ஜெய்ஹிந்த் முழக்கத்துடன் தனது உரையை முடித்து இருக்கிறார்.

ஆளுநர் உரையில்

“வாழிய செந்தமிழ்!
வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு” என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட, நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில், ஒற்றைச் சொல்லில் உச்சரிக்கும் ஜெய் ஹிந்த்! என்ற முழக்கத்தை கேட்கும்போதுதான் மனதில் உணர்ச்சிப் பெருக்கு மிகுதியாக ஏற்படும்.

பொதுவாக ஆளுநர் உரை என்று கூறப்பட்டாலும் கூட அது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி தயாரித்து கொடுப்பதுதான். அதில் இல்லாத ஒரு வாசகத்தை ஆளுநர் ஏன் சொன்னார், எதற்காக சொன்னார்? என்றெல்லாம் யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

ஏனென்றால் ஆளுநர் உரையின் கடைசி சொல் அவருடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதால் அது தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமை யாருக்கும் கிடையாது.

திமுகவை எதிர்க்கும் விசிக

திமுக அரசு கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி சட்டப் பேரவையின் இரண்டாம் கூட்டத்தொடரில் நிறைவேற்றிய நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்டமசோதா மீது ஆளுநர் ரவி முடிவெடுக்காமல் இருப்பதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். வழக்கமாக இதுபோன்ற நேரங்களில் எதிர்க்கட்சிகள்தான் வெளிநடப்பு செய்யும். அந்த வகையில் திமுக அரசின் 8 மாத செயல்பாடுகளை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஆனால் திமுகவின் கூட்டணி கட்சியான விசிக எம்எல்ஏக்கள், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, ஆளுநர் உரையை புறக்கணிக்கும் விதமாக அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டே வெளிநடப்பு செய்ததுதான் வேடிக்கையாக இருக்கிறது. அது ஆளுநருக்கு எதிரான கோபம் என்றாலும் கூட, திமுக அரசின் கொள்கை நிலைப்பாட்டை மறைமுகமாக எதிர்ப்பதற்கு சமமான ஒன்றாகத்தான் பார்க்கப்படும்.

மொத்தத்தில் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை திமுக அரசு கடைபிடிக்கும் என்பதையே இந்த ஆளுநர் உரை மறைமுகமாக உணர்த்துகிறது” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *