ஐபிஎல் : முதல் போட்டி விமர்சனம் – நூலிழையில் வென்ற ஆர்சிபி

பரபரப்பான முதல் போட்டியில் நூலிழையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – ஹர்ஷல் படேல் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம்:

ஸ்கோர் கார்டு விவரங்கள்:
டாஸ் : பெங்களூரு, பௌலிங் தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் : 159/9 (20 ஓவர்),

கிறிஸ் லின் – 49(35), ஹர்ஷல் படேல் – 4ஓ-27ர-5வி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங் :

160/8 (20 ஓவர்), ஏ.பி.டி.வில்லேர்ஸ் – 48(27), ஜஸ்பிரிட் பும்ராஹ் – 4ஓ -28ர-2வி,
ஆட்டநாயகன் : ஹர்ஷல் படேல்

முதல் போட்டி:

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐபில் 2021 நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை கடைசி பந்தில் வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை பெங்களூரு அணி தொடங்கியது.

டாஸ் மற்றும் அணி தேர்வு விவரங்கள்:

முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோஹ்லி முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

பெங்களூரு அணியில் கிளென் மாக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டின், ராஜாட் படிதார், கயில் ஜேமிசன், ஹர்ஷல் படேல், ஆகிய 5 வீரர்கள் பெங்களூரு அணிக்காக தங்கள் முதல் போட்டியில் களம் இறங்க, இது தவிர கேப்டன் கோஹ்லி, ஏ.பி.டி.வில்லேர்ஸ், வாஷிங்டன் சுந்தர், முகமத் சிராஜ், ஷ்ஹபாஸ் அஹ்மத், யுஸ்வேந்திர சஹால் ஆகிய பெங்களூரு அணிக்காக ஏற்கனவே களம்கண்ட வீரர்கள் என்று பெங்களூரு அணி பார்ப்பதற்கு சற்று புத்துணர்ச்சியுடன் களம் இறங்கியது.

மும்பையை பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றம் இல்லை. மார்கோ ஜான்சென் என்ற தென்-ஆப்பிரிக்கா வீரருக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது தவிர கிறிஸ் லின் தொடக்கவீரராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். இவர்களை தவிர மும்பை அணியின் அனைத்து முக்கிய வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ஹிரான் பொல்லார்ட், ஜஸ்பிரிட் பும்ராஹ், ட்ரெண்ட் போல்ட், ராகுல் சஹர் என்று தன் முழுபலத்துடன் இறங்கியது.

மும்பை பேட்டிங்கும் பெங்களூரு பௌலிங்கும்:

பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் ரோஹித் சர்மா, கிறிஸ் லின் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர். முதல் ரெண்டு ஓவர்கள் மட்டும் கவனித்து ஆடிவிட்டு சாஹல் பௌலிங் வந்த உடன் ரோஹித் அடித்து ஆட தொடங்கினார். பெரிதாக ரன் குவிப்பார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், கிறிஸ் லின் இன் தவறான ரன் அழைப்பில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் ரோஹித் சர்மா. எனினும் அதன் பிறகு வந்த சூரியகுமார் யாதவ் அதிரடியை குறைக்காமல் ஆட மறுபுறம் கிறிஸ் லின்ம் அடித்து ஆட 70 ரன்கள் பார்ட்னெர்ஷிப் சேர்த்தனர். சூரியகுமார் யாதவ் 23 பந்துகளில் 31 ரன்கள் அடித்து கயில் ஜேமிசன் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, கிறிஸ் லின்னும் 35 பந்துகளில் 49 ரன்கள் அடித்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆக மும்பை அணி 12.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு என்ற ஸ்கோருடன் 180 மேல் நிச்சயம் அடிக்கும் என்ற நிலையில் இருந்தது.

பெங்களூரு அணி பௌலிங்கில் சிராஜ் மற்றும் ஜேமிசன் ஆகியோர் ஆரம்பம் முதலே மிகவும் நன்றாக பந்துவீசி ரன்களை கட்டுக்குள் வைத்து இருக்க பெருதும் உதவியாய் இருந்தனர். அனால் மறுபுறம் சஹால், ஷ்ஹபாஸ் அஹ்மத், டேனியல் கிறிஸ்டின், ஆகியோரது பந்துவீச்சில் எளிதாக ஸ்கோர் செய்து கொண்டு இருந்தனர் மும்பை அணி. வாஷிங்டன் சுந்தரை சரியாக பயன்படுத்துவதில்லை கோஹ்லி என்ற விமர்சனம் சில காலமாக இருந்து வருவதற்கேற்ப நேற்றய போட்டியிலும் அவரை 13வது ஓவரில் தான் அறிமுகப்படுத்தினார் கோஹ்லி. அந்த ஓவரில் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் சுந்தர். கிறிஸ் லின் விக்கெட்டை வீழ்த்தி முக்கியமான நேரத்தில் இரண்டு புறமும் புதிய பேட்ஸ்மேன் வருவதற்கு வழி வகுத்தது.

அதன் பிறகும் இஷான் கிஷன், ஹர்டிக் பாண்டியா வழக்கம் போல் அதிரடி ஆட்டம் ஆட, 16வது ஒவரின் கடைசி பந்தில் ஸ்லொவ் பால் போட்டு பாண்டியா விக்கெட்டை ஹர்ஷல் படேல் வீழ்த்தினார். 17வது வரை சிராஜ் கட்டுக்கோப்புடன் வீசி 7 ரன்கள் மட்டுமே விட, மும்பை பக்கம் பதற்றம் திரும்பியது. 18வது வரை வீசிய ஹர்ஷல் படேல் நன்றாக ஆடிவந்த இஷான் கிஷன் விக்கெட்டை 4வது பந்தில் அருமையான யார்க்கர் வீசி ல்.பி.டேபிளு முறையில் வெளியேற்ற, 19வது வரை வீசிய ஜேமிசன் 12 ரன்கள் கொடுக்க, 158/5 விக்கெட் என்று இருத்தது. கடைசி ஓவர் வீச வந்த ஹர்ஷல் படேல் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார் அது ஐ.பி.எல். வரலாற்றில் வீசிய சிறந்த கடைசி ஓவர்களில் ஒன்றாக இருக்கும் என்று. கடைசி ஒவேரில் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா விக்கெட்களை முதல் ரெண்டு பந்துகளில் அடுத்து அடுத்து வீழ்த்தியவர், 4 வது பந்தில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். கடைசி ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 159ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழந்து இருந்தது மும்பை அணி. ஒரு கட்டத்தில் 180 ரன் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணியை ஹர்ஷல் படேல், சிராஜ், ஜேமிசன், சுந்தர் ஆகியோரின் கடைசி ஓவர்கள் 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
இந்திய வீரர்களும் ட்ராப் கேட்ச்களும்:
சமீபகாலமாக கேட்ச்கள் நிறைய தவறவிடும் இந்தியா வீரர்கள் இந்த இன்னிங்சிலும் மூன்று கேட்ச்களை தவறவிட்டனர். இந்த போட்டியில் மட்டும் சிராஜ், கோஹ்லி இருவரும் மிக எளிதான கேட்சை தவறவிட்டனர். சிறந்த பிஎல்ட்டிங் செய்பவர் என்ற பெயர் பெற்ற கோஹ்லி சென்ற ஐ.பி.எல். ஆரம்பித்ததிலிருந்து அவ்வப்போது கேட்ச்களை தவறவிட்டு வருகிறார். இந்த போட்டியிலும் க்ருனால் கொடுத்த வாய்ப்பை மிட் ஆப் பொசிஷனில் தவறவிட்டார். அவர் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களில் இதையும் சேர்த்துக்கொண்டு கவனம் செலுத்தி மேம்படுத்திக்கொள்ளவேண்டும். டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நேரத்தில் இதுபோன்ற கைக்கு வரும் கேட்ச்களை தவறவிட்டால் முக்கியமான போட்டிகளில் அது பெரும் தாக்கத்தை உண்டு செய்யும்.

பெங்களூரு அணியின் சேசிங்:

160 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய பெங்களூரு அணி கேப்டன் தன்னுடன் தொடக்காட்டக்காரராக வாஷிங்டன் சுந்தரை களம் இறக்கினார். இரண்டாவது பந்தில் ஸ்லிப்பில் கொடுத்த கேட்சை மும்பை அணியினர் தவறவிட்டபோதும் சுந்தரால் இந்த போட்டியில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. 16 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த இறங்கிய ராஜட் படிதாரும் போல்ட் பந்தில் இன்சைட் எட்ஜ்ல் பௌலெட் ஆகி வெளியேற கோஹ்லியுடன் வந்து சேர்ந்தார் மாக்ஸ்வெல். மறுபுறம் கோஹ்லி வழக்கம் போல ஒரு பக்கம் ஸ்திரமான ஆட்டம் ஆடி வர அடுத்து களம் இறங்கிய கிளென் மாக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடினார். சென்ற வருடம் சரியாக விளையாடாத மாக்ஸ்வெல் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது ஒரு சவாலான முடிவாகவே பார்க்கப்பட்டது. அவரை போன்ற வீரர் பெங்களூரு அணிக்கு நிச்சய தேவை. ஆனால் அவரும் சொதப்பினால் அவருக்கு ஏலம் எடுத்த தொகை வீண்போகும். முதல் ஆட்டத்தில் தன்னால் என்ன செய்ய முடியும் இந்த அணிக்கு என்பதை ஒரு முன்னோட்டம் மட்டும் காட்டியுள்ளார் என்று சொல்லலாம். அதிலும் அவர் அடித்த 100 மீட்டர் சிக்ஸர் அபாரம். இந்த ஜோடி 52 ரன்கள் சேர்க்க சற்றே வெற்றியை நோக்கி செல்வதற்கான சூழல் உருவானது.

சாம்பியன் அணி அவ்ளோ எளிதாக எந்த போட்டியையும் விடுவதில்லை அதனால் தானே அவர்கள் ரெண்டு வருடமாக சாம்பியன்ஸ். ஸ்திரமாக ஆடி வந்த கோஹ்லியின் விக்கெட்டை பும்ராஹ் வை மீண்டும் 13வது ஓவரில் கொண்டு வந்து சாய்த்தனர். 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து கோஹ்லி வெளியேற, 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த மாக்ஸ்வெல்லும் அடுத்து சிறிது நேரத்தில் வெளியேற மும்பை போட்டியை தன்வசம் மீண்டும் இழுத்தது. மும்பைக்கும் வெற்றிக்கும் இடையே இருந்த ஒரே ஆள் ஏ.பி.டி.வில்லேர்ஸ் மட்டுமே.

பெங்களூரு அணி தன்னை வெற்றிக்கு அழைத்து செல்ல மீண்டும் வில்லேர்ஸ் பேட்டிங்கை மட்டும் நம்பி இருக்கும் நிலைக்கு வந்தது. டேனியல் கிறிஸ்டின், ஜேமிசன், ஷ்ஹபாஸ் ஆகியோர் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடியாக ஆடிய ஏ.பி.டி.வில்லேர்ஸ் 29 பந்துகளில் 48 ரன்கள் குவித்து வெற்றிக்கு 2 ரன்கள் வேண்டிய நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். பும்ரா, மேக்ரோ ஜான்சேன் இருவரும் இறுதி கட்டத்தில் மிரட்டலான பந்துவீச மற்ற அனைவரும் திணற வில்லேர்ஸ் மட்டும் வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்று அவுட் ஆகி வெளியேற. 2 பந்துகளில் 2 ரன் தேவை என்று இருக்கையில். கடைசி இரண்டு பந்தில் 1 லெக் பை ஓட்டமும், 1 ரன் ஓடி எடுத்தும் பெங்களூரு அணி வெற்றியுடன் தன் பயணத்தை தொடங்கியது.

இறுதியாக உற்று நோக்கினால் ஹர்ஷல் படேல் வீசிய 20வது ஓவர் தான் ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்த ஓவராக இருந்தது. 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்கள் விழுந்த அந்த ஓவர் காரணமாகவே 159 ரன்களுக்கு மும்பையை கட்டுப்படுத்தி பெங்களூருவால் வெற்றிபெற முடிந்தது. 4 ஓவர் வீசி 27 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்திய ஹர்ஷல் படேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மும்பை அணி சாம்பியன் ஆன அனைத்து முறையும் முதல் போட்டியை தோல்வியில் இருந்து தான் துவக்கியது என்பது கூடுதல் தகவல்.

எழுத்து

– லேமேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *