ஐபிஎல் 2021 பற்றிய ஓர் அலசல்

2021ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் இன்று (09.04.2021) முதல் தொடங்க உள்ளன. இன்று நடைபெறும் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணி, விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக
மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவிவரும் இவ்வேளையில் திட்டமிட்டபடி ஐபில் போட்டிகள் தொடங்குமா? அல்லது சென்ற வருடம் போல தள்ளி போகுமா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் இருந்து வந்தது. ஒருவழியாக பி.சி.சி.ஐ-இன் தீவிர முயற்சியாலும், ஆற்றாலாலும், பல கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கவுள்ளது ஐபில் திருவிழா. பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் மிக முக்கியமாக பார்க்கப்படும் கட்டுப்பாடுகள் எவை என்று மட்டும் பார்க்கலாம்.

1. போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது என்பது மிக முக்கியமான கட்டுப்பாடு.

2. நான்கு கட்டமாக பிரிக்கப்பட்ட போட்டி அட்டவணையின்படி, முதல் கட்டமாக 9 ஏப்ரல் முதல் 25 ஏப்ரல் வரை நடக்கும் போட்டிகள் அனைத்தும் சென்னை மற்றும் மும்பையிலும், இரண்டாம் கட்டமாக நடக்கும் போட்டிகள் அனைத்தும் 26 ஏப்ரல் முதல் மே 8 வரை அஹமதாபாத் மற்றும் டெல்லியிலும், 3ஆம் கட்ட போட்டிகள் அனைத்தும் 9 மே முதல் 21 மே வரை கொல்கத்தா மற்றும் பெங்களுருவில், இறுதி கட்டமாக நடைபெறும் பிலேஆஃப் போட்டிகளும், இறுதி போட்டியும் அஹமதாபாத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மைதானமான நரேந்திர மோடி அரங்கில் நடைபெறவுள்ளது.

3. எப்போதும் சொந்த மண்ணில் 7 போட்டிகளையும் , எதிரணியின் சொந்த மண்ணில் மற்ற 7 போட்டிகளையும் ஒவ்வொரு அணியும் எதிர்கொள்ளும். இந்த முறை 6 மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் எந்த அணியும் தனது சொந்த மைதானத்தில் விளையாடாதவாறு போட்டி அட்டவணை போடப்பட்டுள்ளது.

ஐபில் தொடர் – முன்னோட்டம்:

தோனி தலைமையிலான இந்திய அணி, 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய பிறகு, டி20 போட்டி வடிவம் இனி வரும் காலங்களில் கிரிக்கெட் ரசிகர்களை குதூகளிக்கும் கிரிக்கெட் வடிவமாக இருக்கும் என்று பி.சி.சி.இ கண்டுகொண்டது. அதனை வளர்க்கும் பொருட்டும், வீரர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும் பட்சத்திலும் ஒரு லீக் தொடர் நடத்தலாம் என்று லலித் மோடி தலைமையிலான குழு தீர்மானித்து வடிவமைக்கப்பட்டு 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.பி.ல். தொடர்.
வழக்கம் போல் எட்டு அணிகள் மோதும் இந்த ஐபில் திருவிழாவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியை 2 முறை எதிர்கொள்ளும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெரும் அணி 2 புள்ளிகள் பெரும். புள்ளிகள் அடிப்படியில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் பிலேஆஃவ் சுற்றுக்கு தகுதி பெறும். முதல் போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேராக இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும். தோல்வியடையும் அணிக்கு மற்றுமொரு வாய்ப்பு இருக்கும். 3வது மற்றும் 4வது இடங்கள் பிடித்த அணிகள் 2வது போட்டியில் விளையாடும். இதில் தோல்வியடைந்த அணி 4வது இடத்தை பிடித்து வெளியேறும். வெற்றிபெற்ற அணி முதல் பிலேஆஃப் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் விளையாடும். இந்த போட்டியில் வெற்றியடைந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடைந்த அணி 3வது இடம் பெற்று வெளியேறும். இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் ஆகும்.
இப்போது இந்த வருட போட்டியில் பங்குபெறும் அணிகளை பற்றி ஒரு சிறிய அலசல்.

1. மும்பை இந்தியன்ஸ்:

நடப்பு சாம்பியனாகவும், தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டம் வென்றும், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்று பல சிறப்புகளுடனும், சென்ற முறைக்கு சற்றும் குறையாத பலம் பொருந்திய ஜாம்பவான் அணியாக இம்முறையும் சாம்பியன் பட்டம் வெல்ல முன் நிற்கும் அணியாக மும்பை ஐபில் 2021 போட்டிகளில் களம் காண்கிறது. அனைத்து அணியை விடவும் அணியின் சமன்பாடு மிகவும் சரியாக அமைத்து கொண்ட அணி மும்பை என்பதை எவராலும் மறுக்க இயலாது. ஆடும் 11 வீரர்களும் ஒற்றை ஆளாக போட்டியை வெல்லும் பலம் கொண்டவர்கள். ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், பாண்டியா சகோதர்கள், பொல்லார்ட் என்று மிரட்டும் பேட்டிங் ஒருபுறம் என்றால், பும்ரா, போல்ட், ராகுல் சஹர், பட்டின்சன் என்று பௌலிங்கிலும் மிரட்டுவார்கள்.
சரியாய் சொல்ல வேண்டுமானால் 70-80கள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் 2000ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா அணியை போல அனைத்து தேவைகளும் பூர்த்தியான ஒரு முழு அணியாக இருக்கிறது மும்பை. இவர்களை வெல்வது எந்த அணிக்கும் பெரிய குதிரை கொம்பாக தான் இருக்கும். எனவே, கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்த வருடமும் மும்பை அணியே முன்னிலையில் உள்ளது.

2. டெல்லி கேபிட்டல்ஸ்:

ஐபில் தொடங்கும் முன்பே பேரிடியாக வந்தது அந்த செய்தி. ஆம். சென்ற வருடம் சிறப்பாக வழிநடத்திய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபில் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை உருவானது. அடுத்த கேப்டனாக இந்திய அணியின் இளம் புயல் ரிஷப் பாண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்றபின் சென்ற ஆண்டு இறுதி போட்டி வரை சென்று மும்பையிடம் கோப்பையை நழுவவிட்டது என்றாலும், அணியின் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த முறை ஷ்ரேயஸ் ஐயர் இடத்தை ஆஸ்திரேலியா ஸ்டார் பேட்ஸ்மேன் ஸ்மித் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவான், ப்ரித்வி ஷா, ஸ்மித், பாண்ட், ரஹானே என்று பேட்டிங் வரிசை சிறந்து விளங்குகிறது. பௌலிங் பொறுத்தவரை சென்ற வருடம் பர்புல் கேப் வென்ற ரபாடா, இந்திய அணியின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இஷாந்த் சர்மா, அக்சார் படேல் என்று நல்ல சமன்பாட்டுடன் திகழ்கிறது.
T20 போட்டிகள் இளைஞர்களுக்கானது என்ற கூற்று உண்மையானால் அதை பெறும் முழு தகுதியும், சரியான சமன்பாடும் உடைய அணியாக டெல்லி திகழ்கிறது. நமது கணிப்பின் அடிப்படையில் கோப்பை வெல்ல வாய்ப்புள்ள பலமான அணியில் டெல்லி 2ஆம் இடத்தில் இருக்கிறது.

3. சன்ரைசேர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர் தலைமையிலான இந்த அணி பலம் வாய்ந்த அணிகளில் நமது கணிப்பில் 3வது அணியாக திகழ்கிறது. ஐபில் போட்டிகளில் வார்னர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு சன்ரைசர்ஸ் அணி வெற்றி விகிதம் அபார வளர்ச்சி கண்டுள்ளது என்பதை மறுக்க இயலாது. ஜானி பைர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் தொடக்க ஆட்டம் அபாரமாக அமையும் பட்சத்தில் இந்த அணியை வெற்றிகொள்வது மிக கடினம். இந்த அணியின் பெரிய பலமே இந்த அணியின் பந்து வீச்சாளர்கள் தான். புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், நடராஜன், ஷாபாஸ் நதீம் என்று டி20 போட்டிகளில் உலகின் மிக சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. இந்த அணியால் மிக குறைந்த ஸ்கோரை வைத்து கொண்டும் பந்துவீச்சில் சோபித்து வெற்றியை தன்பக்கம் இழுத்து கொள்ளும் திறமை மிக்க அபாரமான பந்துவீச்சாளர்களை பெற்றுள்ளது. போட்டியிடும் 8 அணிகளில் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள அணியாக இந்த அணியை எளிதில் சொல்லமுடியும். இந்த அணியின் பிரச்னை மிடில் ஆர்டர் பேட்டிங். வில்லியம்சன், மனிஷ் பாண்டே என்ற இருவரை மட்டுமே சுற்றி இவர்களது மிடில் ஆர்டர் சுழன்று வருகிறது. வில்லியம்சனை அணியில் சேர்த்து கொள்வது அணியின் சமன்பாட்டை பாதிக்காதவாறு பார்த்து கொள்ளவேண்டிய கட்டாயமும் உள்ளது.
இந்த சவாலை சரியாக கையாளும் பட்சத்தில் இந்த அணி வெற்றி பெற்று கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

4. சென்னை சூப்பர் கிங்ஸ் :

நமது கணிப்பின்படி இந்த தொடரை வெல்வதற்கான சாத்தியமும், பலமும் கொண்ட அணிகளில் 4வதாக திகழ்வது நமது தல தோனியின் தலைமையில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகும். சென்ற தொடரில் சரியாக விளையாடாமல் பிலேஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிய நிலையில் இந்த வருட தொடரை வெல்ல முனைப்போடு களம் காண்கிறது சென்னை அணி. ஐபில் போட்டிகளில் சென்னை அணிக்கு அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரும், சின்ன தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் மீண்டும் அணியில் சேர்ந்துள்ளது அனைவரது நம்பிக்கையும் மேம்படுத்தியுள்ளது. ஷனே வாட்சன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், ருதுராஜ் கைக்கவாட் அவரது தொடக்க ஆட்டக்காரர் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைக்கவாட், டூ பிளெஸ்ஸிஸ், ரெய்னா, ராயுடு டாப் ஆர்டர் பலமாகவே உள்ளது. சாம் கரன் ஆல் ரவுண்டு திறமை பெரும் பலமாக அமைந்தது சென்ற வருடம். இந்த வருடமும் அவரது திறமை பெரிய பலமாக அமையும் என்று உறுதியாக கூறலாம். இந்த அணியின் பிரச்னை மிடில் ஓவர்களில் ரன் எடுக்க தடுமாறுவது என்றே கூறலாம். இதில் முக்கியமாக தடுமாறுவது தோனி அவர்கள். முன்பு போல வந்தவுடன் அதிரடி காட்டும் திறன் அவரிடம் குறைந்துள்ளது பெரும் பின்னடைவாக அமைந்தது சென்ற வருடம்.
காயத்தில் இருந்து மீண்டு வரும் ஜடேஜாவின் செயல்பாடு, மற்ற சூழற்பந்துவீச்சாளர்களை எப்படி கையாள்வர் தோனி என்பதை பொறுத்தும், இந்த வருடம் தன்னை மேலும் தகவமைத்துக் கொண்டு பழைய அதிரடி காட்டி சோர்ந்துள்ள மிடில் ஆர்டர் பேட்டிங்கை மீட்க்கும் பட்சத்தில் மீண்டும் கோப்பை அடித்து சிங்கம் எப்போதும் சிங்கம் தான் என்று கெத்தாக கோப்பையுடன் நிற்பார் என்ற ரசிகர்களின் கனவு நிறைவேற வாய்ப்பு நிறையவே உள்ளது.

5. கிங்ஸ் X1 பஞ்சாப்:

சென்ற வருடத்தின் ஆரஞ்சு கேப் வென்ற வீரர் கே.ல்.ராகுல் தலைமையில் இறங்கும் பஞ்சாப் அணி நமது கணிப்பில் 5வது பலம் பொருந்திய அணியாக திகழ்கிறது. ராகுல், கேல், மாயங் என்று இவர்களது பேட்டிங் சென்ற வருடம் பட்டையை கிளப்பியது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இவர்களது பௌலிங் அமையாததும் போட்டியின் மிக முக்கியமான தருணங்களை வெல்ல முடியாமால் போனதும் இவர்களது பிலேஆஃப் செல்லும் வாய்ப்பை பாதித்தது. உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் டேவிட் மலன் இந்த வருடம் பெரும் பங்காற்றி இவர்களது மிடில் ஆர்டர் மேலும் பலப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். பௌலிங் பொறுத்தவரையில் முகமத் ஷமி இவர்களது அதிமுக்கிய பௌலர். அவரை சுற்றி மற்ற பௌலர்களான ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரவி பிஷ்ணோய் ஆகியோரை சிறப்பாக செயல்பட வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
முக்கிய தருணங்களை வெல்லும் ஆற்றலை மேம்படுத்தலும், பௌலர்கள் சரியாக செயல்படும் பட்சத்திலும் கோப்பையை வெல்ல நீண்ட காலமாக ஏங்கி வரும் பஞ்சாப் அணி வீரர்கள், ரசிகர்கள், அதன் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவின் கனவும் நிறைவேற வாய்ப்புள்ளது.

6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

சென்ற வருடம் பிலேஆஃப் தகுதி பெறாமல் வெளியேறிய அணி என்றாலும் இந்த வருடம் சென்ற வருடத்தை விட சற்றே பலம் பொருந்திய அணியாக திகழ்கிறது. முதலில் இருந்தே மோர்கன் தலைமையேற்பது மிகப் பெரிய பலம். இவர்களது பெரும் பிரச்சனையாக அமைந்தது இவர்களது சீரற்ற பேட்டிங். ஒரு போட்டியில் பெரிதாக விளையாடுவதும், அடுத்த போட்டியிலே சொதப்புவதுமாக ஆடினர். இதுவே அவர்களது தோல்விக்கு வித்திட்டது. ஷுபஹ்மான் கில், மோர்கன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல் என்று இவர்களது பேட்டிங் வரிசை சமன்பாட்டுடன் இருந்தாலும் சொதப்பாமல் செயல்படவேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது. சாகிப் அல் ஹசன் அவர்களின் வருகை அணிக்கு மேலும் பலம். பிரசித்த கிருஷ்ணா, நரின், வருண் சக்ரவர்த்தி, நாகர்கோடி, மாவி என்று பௌலிங்கிலும் ஓரளவு சிறந்த அணியாகவே திகழ்கிறது.
“கன்சிஸ்டெண்சி இஸ் தி கி”. சீராக நன்கு விளையாடுவதே இவர்களது வெற்றிப் பாதையை தீர்மானிக்கும். உலகின் மிகச் சிறந்த கேப்டன் மோர்கன் தலைமையில் இறங்கும் இந்த அணியை வெற்றி பாதையில் நடத்திச் சென்று 3வது முறையாக கோப்பை தட்டி வருவார் என்று கொல்கத்தா ரசிகர்களும், அதன் உரிமையாளர் ஷாருக்கான் அவர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

உலகின் மிகப்பெரிய பேட்டிங் ஜாம்பவான்கள், இந்த நூற்றாண்டு மட்டுமல்லாது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் சகாபத்தின் 2 பெரும் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி மற்றும் ஏ.பி.டி.வில்லெர்ஸ். இந்த அணியின் தூண்கள். ஐபில் சரித்திரத்தில் இவர்கள் இருவரும் தங்கள் அணியின் வெற்றிக்கு பங்காற்றியது போல வேறெவரும் இல்லையெனவும் கூறலாம். ஐபில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள், அதிக பார்ட்னெர்ஷிப் ரன்கள் குவித்த வீரர்கள் என இவர்கள் இருவரது பெயர்களும் பேட்டிங் சார்ந்த அனைத்து இடங்களிலும் இருக்கும். இருபெரும் வீரர்கள் இருந்தும் ஒரு முறை கூட கோப்பை வெல்லாதது மிகப்பெரிய ஆச்சரியமாக தெரியலாம். கிரிக்கெட் என்பது அணி சார்ந்த விளையாட்டு. மொத்த அணியும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மட்டுமே கோப்பை வெல்ல முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த அணியே. எந்தளவு இவர்கள் இருவரும் இந்த அணியின் பலமோ, அதேயளவு இவர்களை தாண்டி வேறு எவரும் இவர்கள் அளவில் பாதியளவு கூட வெற்றிக்கு பங்காற்றியது இல்லை. 2 முறை இறுதி போட்டிவரை தகுதி பெற்றிருந்தாலும், சென்ற முறை பிலேஆஃப் வரை தகுதி பெற்றிருந்தாலும் பல போட்டிகள் வெல்ல இவர்கள் இருவர் மட்டுமே பெரும் பங்காற்றி இருப்பர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஆண்டின் அணி தான் சற்று சமன்பாட்டுடன் அமைந்தது எனலாம். தேவதூத் படிக்கல், விராட் கோலி , டி.வில்லேர்ஸ், என்று டாப் ஆர்டர் மிக பலம் வாய்ந்ததாக இருந்தாலும் மிடில் ஆர்டர் ரன்கள் சேர்க்க கஷ்டப்படுவது, இறுதியில் கோஹ்லி, டி.வில்லேர்ஸ் இல்லாத பட்சத்தில் அதிரடி காட்ட ஆள் இல்லாதது இவர்களுக்கு பெரும் குறையாக இருந்தது. இந்த முறை கிளென் மேக்ஸ்வெல், ஜஹய் ரிச்சர்ட்சன் உள்ளே வந்திருப்பது அந்த குறையை போக்குமா அல்லது சென்ற வருடம் போல் இவர்களும் சொதப்புவார்களா என்பதை பொறுத்து இவர்களது பேட்டிங் ஆதிக்கம் தீர்மானிக்கப்படும். பல வருடங்களாக தடுமாறி வந்த பௌலிங் வரிசை சென்ற வருடம் முதல் சற்று ஊக்கமளிப்பதை மறுக்க இயலாது. சிராஜ், சைனி, சாஹல் என்று ஓரளவு சமன்பாடு பெற்றுள்ளது. ரிச்சர்ட்சன் வருகை கூடுதல் பலம்.
தோல்விகள், மோசமான தோல்விகள், படுமோசமான தோல்விகள், பிரம்மாண்டமான வெற்றிகள் என இந்த அணி எப்படி பெர்ஃபார்ம் செய்தாலும் இந்த அணியின் ரசிகர்களும், கோஹ்லியின் ரசிகர்களும் சற்றும் துவண்டு போகாதவர்கள். ஒரு முறைகூட கோப்பை வெல்லாமல் பெரிய ரசிகர் படை உள்ள ஒரே அணி இதுவாக தான் இருக்கும். மிடில் ஆர்டர் அதிரடி, பௌலிங்கில் அதிக ரன்கள் விடாமல் கட்டுப்படுதல், விராட் மற்றும் டி.வில்லேர்ஸ் தொடர்ந்து நன்றாக செயல்படுவது என்று அனைத்தும் ஒன்றுகூடி நடைபெறும் பட்சத்தில் “ஈ சாலா கப் நம்தெ”. நமது கணிப்பின் அடிப்படியில் இந்த அணியும் 6வது இடத்தில உள்ளது.

8. ராஜஸ்தான் ராயல்ஸ்:

வழக்கம் போல இந்த முறையும் அண்டர்டாக்ஸ் ஆகவே தனது பயணத்தை ராஜஸ்தான் அணி ஆரம்பிக்கிறது. ஸ்மித்தை விட்டு கொடுத்தது மிக தைரியமான முடிவாக பார்க்கப்படுகிறது. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ராகுல் டெவடியா, டேவிட் மில்லர் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சம் இல்லை தான் என்றாலும் தொடர்ந்து சீராக நன்கு விளையாடாதது இவர்களது பின்னடைவிற்கு காரணம். பௌலிங் பொறுத்தவரையில் ஜோபிரா ஆர்ச்சர், முதல் கட்ட போட்டிகளில் இவர் பங்கேற்க மாட்டார் என்பது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு தான். இவரை தவிர்த்தும் ஷ்ரேயஸ் கோபால் தவிர்த்தும் மற்றவர்கள் பெரிதாக இன்னும் சோபிக்கவில்லை. கிறிஸ் மோரிஸ் வருகை இவர்களுக்கு பெரும்பலம். சீரான வகையில் பேட்டிங்கில் நன்கு விளையாடுவது, பௌலிங் பொறுத்தமட்டில் மேலும் 2 பௌலர்களும் நன்கு பந்து வீசுவது என்பது அமைந்தால் 2008 நடந்தது போல எவரும் எதிர்பாரா வகையில் ராஜஸ்தான் அணி சாம்பியன் ஆகும் வாய்ப்புள்ளது.
காத்திருந்து பார்ப்போம் எவர் இவரை வெல்கிறார்கள் என்றும், எவர் கோப்பையை தட்டி செல்கிறார்கள் என்றும். எப்படி இருந்தாலும் அடுத்த 2 மாதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்பதை மட்டும் மறுக்க இயலாது.

உங்கள்
லேமேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *