இங்க நான் தான் கிங்கு விமர்சனம் -(3.5/5);

இங்க நான் தான் கிங்கு விமர்சனம் -(3.5/5)

நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா என பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரித்துள்ளார்.

கதைப்படி,

திருமணம் நடக்க சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி தவிக்கும் சந்தானம், அந்த கடனை எப்படி அதே திருமணம் மூலம் அடைக்கிறார் என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும்.

மேட்ரிமோனியில் வேலை பார்க்கும் சந்தானம், தனக்கு இருக்கும் ரூ.25 லட்சம் கடனை அடைக்க முன்வரும் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கிறார். அவருக்கு ஒருவழியாக ஜமீன் குடும்பத்தில் இருக்கும் ஹீரோயினுடன் திருமணம் நடக்கிறது. ஆனால் இதில் மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்படுகிறது. இதற்கிடையில் தனக்கு கடன் கொடுத்த மேனேஜருடன் ஏற்படும் பிரச்சினையில், சந்தானம் குடும்பத்தால் அவர் கொல்லப்படுகிறார். ஒருவழியாக இந்த கொலையை மறைத்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் அதே மேனேஜர் சந்தானம் வீட்டில் உயிருடன் இருக்கிறார். அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? .. சந்தானத்தின் கடன் பிர்ச்சினை எப்படி தீர்ந்தது? என்ற கேள்விகளுக்கு விடை படத்தின் இரண்டாம் பாதியில்.

படத்தில் ஏகப்பட்ட காமெடி கேரக்டர்கள் தங்களின் வழக்கமான கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். அதேபோல் சில படங்களை நினைவூட்டும் வகையில் காட்சிகளை வைத்திருக்கிறார்கள்.

சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன் கூட்டணி அல்டிமேட் காம்போவாக அமைந்துள்ளது. காமெடி, டான்ஸில் மாஸ் காட்டியிருக்கிறார் சந்தானம். ஹீரோயின் பிரயாலயாவுக்கு இன்னும் நடிப்பதற்கான காட்சிகளை வழங்கியிருக்கலாம்.

பொதுவாக சந்தானம் படம் என்றால் சமீபகாலமாக காமெடிக்கு பஞ்சமாக இருந்த நிலையில் அதை சற்று மேம்படுத்தியது “வடக்குபட்டி ராமசாமி” படம் தான். அதனை தொடர்ந்து இப்படத்தின் திரைக்கதையும் காமெடியும் நகைச்சுவையாக அமைந்தவண்ணம் உள்ளது.

படம் முழுக்க அவர் வாங்கிய கடன் வழியாக பயணிப்பதால் காட்சிக்கு காட்சி நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை ஒர்க் அவுட் ஆகியுள்ளது. குறிப்பாக தம்பி ராமையா, பால சரவணன், கூல் சுரேஷ், முனீஸ்காந்த் ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு சந்தானம் படும்பாடு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அதேசமயம் படத்தில் முதலில் சீரியஸாக சொல்லப்படும் விஷயத்தை கடைசியில் காமெடியாக கொண்டு செல்ல முயன்று சொதப்பியிருக்கிறார்கள். இதனால் முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் சற்று குறைந்துள்ளது.

இமானின் இசையில் “மாயோனே” பாடல் ரசிக்க வைப்பதோடு, “மாலு மாலு” பாடல் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பாணியை கையாண்டிருக்கிறார் இமான்.

இங்க நான் தான் கிங்கு – காமெடி என்டர்டெயினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *