சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார்.
கதைப்படி,
அமேசான் காட்டுப்பகுதியில், அழிந்து போகும் ஒரு பழங்குடி இனத்தில் பிறந்தவர் சந்தானம். அப்பகுதியில், காட்டுத்தீ பிடித்ததன் காரணமாக அங்குள்ள மக்கள் வெளியேறுகின்றனர். இவர்களை சற்றும் ஏற்காத சாமானியர்கள் அம்மக்களை விரட்ட தாய் தந்தையரை இழந்து நாடோடியாக நாடு நாடாக சுற்றித் திரிகிறார் சந்தானம். பல மொழிகளை கற்றுக் கொள்கிறார். இறுதியாக தமிழையும் கற்றுக் கொண்டு தமிழ்நாட்டிலேயே தங்கி விடுகிறார். உதவி என்று யார் கேட்டாலும் ஓடி ஓடிச் சென்று செய்து தரும் பண்புடையவர் சந்தானம்.
அப்படியாக நண்பன் ஒருவனை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்று விடுகிறது. தன் நண்பனை கண்டுபிடித்துத் தருமாறு சந்தானத்திடம் வருகிறார்கள் மூன்று பேர்.
இதற்க்கு முன்னதாக ஒருவருக்கு உதவி செய்யும் விதமாக போலீஸ் காரரை அடிக்கிறார் சந்தானம். மேலும், வில்லனின் தம்பியை கொலை செய்த பழியும் இவர் மேல் வர. அந்த சிக்கல்களை சமாளித்தாரா? கடத்தப்பட்ட நபரை மீட்டாரா? என்பது மீதிக்கதை.
மேயாத மான், மற்றும் ஆடை எடுத்த இயக்குனரிடம் முந்தைய படங்கள் போல் வித்யாசத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே. சந்தானத்தின் முதல் காமெடியே நம் அனைவர்க்கும் தெரிந்த காமெடி என்பதால் சற்று சலிப்பு தட்டும். வழக்கமான சந்தானத்தின் காமெடியை எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றம் தான். அதற்கு மாறாக, எமோஷனல் சந்தானத்தை காண ஆசைப்படுவோர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும்.
படத்தில் முழுக்க முழுக்க எமோஷனலாக வரும் சந்தானம் அவரின் கதாபாத்திர வலியையும் வேதனையையும் நமக்கு உணர்த்தும் அளவிற்கு நடிப்பில் அசத்தியிருப்பார்.
இயக்குனர் ரத்னகுமார் கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது.
சமீபகாலமாக வெளியாகும் படங்கள் அனைத்தும் டார்க் காமெடி கொண்ட படங்களாகவே இருக்கிறது. இந்த படத்திலும் டார்க் காமெடி எங்கும் எடுபடவில்லை.
அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஜார்ஜ் மர்யன், சைனீஸ் உள்ளிட்டவர்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். பல இடங்களில் இயக்குனரின் வசனங்கள் முத்திரை பதித்து கைதட்டல் பெறுகிறது. ஆனால், முதல் பாதியில் நீட்டை ஆதரித்தும் இரண்டாம் பாதியில் நீட்டை ஆதரிப்பது போல் எதிர்க்கும் வசனங்கள் அந்த இடத்தில் தேவை தானா? எதற்காக அந்த வசனத்தை திணித்தார்கள் என்பது சற்று சர்ச்சைக்குட்பட்டுள்ளது.
SANA – SANTA என்ற கெமிஸ்ட்ரி அனைத்து படத்திலும் ஒர்க் அவுட் ஆனது போல். இப்படத்திலும் தன் கைவரிசையை காட்டி படத்திற்கு முக்கிய பலமாக அமையும் விதத்தில் இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
தமிழ் சினிமாவில் புதிதாக செய்யப்பட்ட முயற்சி தான் இப்படம். மொழி பற்றை அதிகம் பேசும் படம். ஒரு இனத்தின் வலியை உணர்த்தும் படம். சந்தானத்தின் வழக்கத்தை எதிர்பார்க்காமல் படம் பார்ப்போருக்கு இப்படம் பிடிக்கும்.
குலு குலு – சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் படம்.