சாய் பல்லவி நடிப்பில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தை 2D என்டர்டைன்மெண்ட் வழங்க, சக்தி பிலிம் பேக்டரி விநியோகம் செய்தது.
இந்தப் படத்தில் சாய் பல்லவி பள்ளி ஆசிரியராக வருகிறார். அவரின் தந்தை ஒரு அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டி பணி புரிகிறார். அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிறுமி, 4 வட மாநிலத்தவர்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளக்கப்படுகிறாள். அதில் 5-வதாக சாய் பல்லவியின் தந்தையும் கைது செய்யப்படுகிறார். தன் தந்தை அப்பாவி, அவரை வெளியே எடுக்க வேண்டும் என்று கார்கி (சாய் பல்லவி) படும் இன்னல்களும் துயரங்களும் தான் இப்படம்.
தந்தை கைது செய்யப்பட்டதால், சாய் பல்லவி வேலையில் இருந்து நீக்கப்படுகிறார். கையில் பணம் இல்லை, தனக்கு ஆதரவாக வாதாட துவங்கிய பிரபல வழக்கறிஞரும் கைவிரித்துவிட. தந்தையை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் எப்படி போராடினார், தந்தையை மீட்டாரா? என்பது தான் மீதிக்கதை…
இந்தப் படத்தில் வரும் காட்சிகள் பார்ப்பவர்களை அதனுடனே பயணிக்க வைக்கின்றன. அந்த குற்றத்தை யார் செய்திருப்பார்? இவரா? அவரா? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டே திரைக்கதை நகர்கிறது. அது படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
கார்கியில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் படத்திற்கு தேவையானதாகவே அமைந்துள்ளது. இந்தப் படத்தில் சாய் பல்லவியின் வழக்கறிஞராக வரும் காளி வெங்கட் நடித்துள்ளார். அவரின் நடிப்பும் படத்திற்கு உறுதுணையாக வலு சேர்க்கிறது. அதேபோல் நீதிபதியாக வரும் திருநங்கையின் கதாபாத்திரமும் சிறப்பு.
மிக முக்கியமாக திருநங்கை கதாபாத்திரத்தை வழக்கறிஞர் ஒருவர் “நீங்கள் ஒரு பாலினத்தவராக இருந்திருந்தால் இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கும்” என கூற. அதற்கு பதிலளிக்கும் விதமாக “ஒரு ஆணுக்கு எங்கு திமிர் இருக்கும் என்றும் தெறியும். பெண்ணுக்கு எங்கு வலி இருக்கும் என்றும் தெறியும்” என்ற வசனம் மனதை உருக்குகிறது.
இது போன்ற பல வசனங்கள் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து.
சைல்ட் அபியுஸ், கிரைம் திரில்லர் வகையில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடக்கின்றன. அதற்கு ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் ஒன்றிணைந்து பயணிக்க வைக்கிறது.
கார்கி சற்று நீளமாகவும், மெதுவாகவும் நகர்வது போல் சில இடங்களில் தோன்ற வைக்கலாம். இது போல சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், படம் நிச்சயம் சோர்வை ஏற்படுத்தாது.
படம்பார்பவர்கள் மனதில் இதுதான் நடந்திருக்கும் என்ற எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதை தாண்டிய ஒரு விஷயம் படத்தின் இறுதிக்காட்சிகளில் இருக்கும். அதுவே இயக்குநரின் வெற்றி. இந்தப் படத்தை பெண் குழந்தைகள் கொண்ட குடும்பம்மட்டுமல்ல, அனைவரும் பார்க்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது.
சமூகத்தில் பெண்ணாக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை கார்கி வெளிகொண்டு வருகிறாள். குறிப்பாக அந்த இறுதி காட்சியில் இடம்பெறும் சாய் பல்லவியின் ஒரு ஷாட் அத்தனை முக்கியத்துவம் பெறுகிறது.
கார்கி – பெண்ணின் சாபத்தை விளக்கும் படம்