தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் இன்று நேரலை செய்யப்படவுள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது.
இதனையடுத்து,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று மற்றும் நாளை விவாதம் நடக்கிறது என்றும்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் 7-ஆம் தேதி பதிலுரை அளிக்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு தெரிவித்தது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும்.சட்டப்பேரவையில் கேள்வி நேரம்,முதல்வர் பதிலுரை நேரலை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் இன்று நேரலை செய்யப்பட்டு வருகிறது. இந்த கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு துறை ரீதியாக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக,காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியவுடன் முன்னாள் கவர்னர் ரோசைய்யா மற்றும் முப்படைத்தளபதி பிபின் ராவத் உட்பட குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதே போல மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.