மழை பிடிக்காத மனிதன் – புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடிக்கிறாரா?

ஒளிப்பதிவாளராக 37 படங்கள் இயக்குநராக 8 படங்கள் என, திரைத்துறையில் ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் விஜய் மில்டன். இயக்கமாக இருந்தாலும், ஒளிப்பதிவாக இருந்தாலும் அவரது திறமை தனித்து கொண்டாடப்படும். தன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படைப்பாக நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கி வருகிறார்.

INFINITI FILM VENTURES வழங்க,
விஜய் ஆண்டனி நடிக்கும், இப்படத்தில்
“மழை பிடிக்காத மனிதன்” படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். புரட்சி கலைஞர் விஜயகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் பரப்பரப்பான படப்பிடிப்பில் இருக்கும் “மழை பிடிக்காத மனிதன்” படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறியதாவது…
நானும் விஜய் ஆண்டனியும் நீண்ட வருடங்களாகவே நெருங்கிய நண்பர்கள், நான் இயக்குநராக முயற்சித்த போது, அவர் நடிகராக முயற்சித்தார். சமீபத்தில் அவரை சந்தித்த போது அவரிடம் இந்த கதையை சொன்னேன், அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஆரம்பித்து விட்டோம். இப்படம் ஒரு உணர்ச்சிகரமான ஆக்சன் படமாக இருக்கும். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் எந்த சொந்தமும் இல்லாமல் ஒரு புதிய இடத்திற்கு வருபவனுக்கு வாழ்க்கை அம்மா, தங்கை என எல்லாவற்றையும் கொடுக்கிறது. எதுவும் இல்லாத ஒருவனை, எல்லாம் இருக்கும் ஒருவன் என்னவேண்டுமானலும் செய்யலாம் என நினைக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்தப்படத்தின் மையம், நான் ஆரம்ப காலத்தில் பார்த்த விஜய் ஆண்டனி இப்போது இல்லை, நடிப்பில் அவர் நிறைய தேறிவிட்டார். இந்தப்படம் அவருக்கு ஒரு புது அடையாளம் தரும். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார். சரத்குமார் என் நண்பர் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் மிடுக்காக வருகிறார். விஜயகாந்த் இதில் நடிக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்ட செய்தியும் உண்மைதான், அவருக்கு ஒரு பெரிய மனிதர் பாத்திரம், அவரை திரையில் பார்க்க எனக்கு ரொம்பவும் ஆசை, அவரிடம் கதை சொல்லிவிட்டேன், நடிக்கிறேன் என கூறியிருக்கிறார், காலமும் அவர் உடல் நிலையும் ஒத்துழைத்தால், அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார். ஒரு அழகான காதலியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். மிக திறமையான பெண் இப்படம் அவர் திறமைக்கு சான்றாக இருக்கும். ரசிகர்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இருக்கிறது. மனதை அசைத்து பார்க்கும் ஒரு அழகான அனுபவத்தை இந்தப் படம் தரும் என்றார்.

இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்குவதுடன் , ஒளிப்பதிவும் செய்யும் “மழை பிடிக்காத மனிதன்” படத்தை INFINITI FILM VENTURES சார்பில் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B, பங்கஜ் போஹ்ரா மற்றும் S. விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *