செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி நாளை வெளியாகவிருக்கும் படம் “நானே வருவேன்”. இப்படத்தில், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ். தனுஷ்-செல்வா-யுவன் என்ற கூட்டணியை கேட்டதுமே அலாதியான சந்தோஷத்தில் ரசிகர்கள் மிதந்த இப்பத்திற்கு வரவேற்பு குறைவாகவே உள்ளது.
அவ்வப்போது, சர்ச்சைக்குள் இப்படம் சிக்கிவந்தது அனைவரும் அறிந்ததே. தனுஷ் இப்படத்தின் இயக்கத்தில் தலையிடுகிறார் என்று பல தகவல்கள் வெளியான போதும் படக்குழு அதனை கண்டுகொள்ளவில்லை.
தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணுவின் அழைப்புகளை ஏற்காத தனுஷ்,
இதுவரை, “நானே வருவேன்” படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்போ, இசை வெளியீட்டு விழாவோ நிகழ்த்தப்படவில்லை என்பது சற்று ஆச்சர்யமான விஷயமாக உள்ளது. இது குறித்து தாணுவிடம் சிலர் வினவிய போது, என் அழைப்புக்களை தனுஷ் ஏற்கவில்லை! என்று வருத்தம் தெரிவித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மேலும், இந்த தேதியில் தான் “நானே வருவேன்” படம் ரிலீஸ் செய்யவேண்டும் என தாணுவிடம் தனுஷ் அழுத்தம் தந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்த்தப்படாததன் காரணம் என்னவாக இருக்கும்?!
சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் தன் மனைவியை பிரிந்து விட்டதாக அறிவித்தார். அன்று முதல் பத்திரிகையாளர்களை சந்திக்க அச்சம் கொள்கிறார் தனுஷ் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
அது மட்டுமின்றி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடத்திய “திருச்சிற்றம்பலம்” படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பத்திரிகையாளர்கள் யாரையும் அழைக்க கூடாது என்று தனுஷ் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
ஆமை வேகத்தில் செய்யப்பட்ட ப்ரமோஷன்கள்,
நானே வருவேன் திரைப்படம் வெளியாக இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கும் நிலையில், எவ்வித விளம்பரங்களும் இல்லாதது படத்தின் வரவேற்பை மந்தமடைய செய்யும் என்பதை கலைப்புலி.S.தாணு அவர்கள் நன்கு அறிந்தபோதும் அவர் ப்ரோமோஷன் செய்யாதிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டாரோ? என்ற கேள்வியை எழுப்புகிறது.
காலியாக இருக்கும் திரையரங்குகள்,
தனுஷ் படம் என்றாலே அமோக வரவேற்புள்ள போதும் இப்படத்தின் முன்பதிவு மிக மோசமான நிலையிலே இருக்கிறது. திரையரங்குகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கிறது. 190 திரையரங்கில் மட்டுமே வெளியாகும் இப்படம் நல்ல விமர்சனத்தை பெறாவிட்டால் தாணுவின் தயாரிப்பில் மோசமான தோல்வியை தழுவிய முதல் படமாக “நானே வருவேன்” இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
மேலும், பொன்னியின் செல்வன் – 1 வெளியாகும் சமயத்தில் இப்படத்தையும் வெளியிடுவது சரியல்ல என்பது அனைவரின் கருத்தாகவும் உள்ளது.
விஜய் நடித்த ‘சச்சின்’ படம் நன்றாக ஓடி இருக்க வேண்டிய படம். ஆனால், ‘சந்திரமுகி’யுடன் வெளியானதால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது. அதேபோல், ‘துப்பாக்கி’யுடன் ‘போடா போடி’ படம் வெளியானதால் அப்படமும் தோல்வி அடைந்தது. அந்த வரிசையில் நானே வருவேன் படமும் இணைந்து விடுமோ என்ற எண்ணம் ரசிகர்களிடையேயும் இருக்கிறது.