கேப்டன் மில்லர் விமர்சனம் – (4.25/5);

தனுஷ், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், விஜி சந்திரசேகர், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன், காளிவெங்கட் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”.

கேப்டன் மில்லர் டிரெய்லரில் பார்த்ததை போலவே படம் முழுக்க துப்பாக்கி சத்தங்கள் ஆங்கிலேயர்களை துளைத்து எடுக்கும் காட்சிகள் என அதிகம் இருந்தாலும், இந்த படமும் அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போராகவே உருவாகி உள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன், சந்தீப் கிஷன், ஜெய பிரகாஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1930 காலக்கட்டத்தில் நடக்கும் போராட்ட படமாக உருவாகி உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

நான் லீனியர் எடிட்டிங் மற்றும் விக்ரம் வேதா படத்தை போல ஒவ்வொரு பிரிவாக கதை சொல்லும் விதம் என ஆரம்பமே அதிரடியாக ஆரம்பிக்கிறது. ஹாலிவுட்டில் வெளியாகி உள்ள போர் படங்களுக்கு இணையாக ஒரு தமிழ் படத்தை உருவாக்க வேண்டும் என்கிற தாகம் அருண் மாதேஸ்வரனுக்கு இருந்தது திரையில் தனுஷ் மூலமாக வெளிப்படுத்தி நிறைவு செய்துக் கொண்டார். மேக்கிங் சிறப்பாக இருந்தாலும், படத்தின் கதை அழுத்தமாக உள்ளதா? இந்த படத்தின் ப்ரீக்வெல் மற்றும் சீக்வெல் என அடுத்தடுத்த பாகங்கள் வந்தால் தான் முழு கதையும் தெரியும் என்கிற நிலையில், கேப்டன் மில்லருக்கு என்ன ஆனது? என்ன செய்யப் போகிறார் என ஏகப்பட்ட கேள்விகளுடன் முதல் பாகத்தை முடித்து விட்டனர். ஒட்டுமொத்தமாக படத்தில் என்ன என்ன நிறைகள் மற்றும் என்ன என்ன குறைகள் உள்ளன என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்த்து விடலாம் வாங்க..

கோயிலுக்கு அருகில் இருக்கும் குடிசைகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என அந்த பகுதி ராஜாவான ஜெயபிரகாஷ் அதிகாரம் செலுத்தி வருகிறார். ஆனால், அவரும் அவர் மகனுமான ஜான் கொக்கன் இருவரும் வெள்ளையர்களுக்கு அடிமைகளாக உள்ளனர். அந்த பெரிய வீட்டில் வளர்ப்பு மகளாக இருக்கும் வேல்மதி (பிரியங்கா மோகன்) போராளிகளின் இயக்கத்தில் சேர்ந்து விடுகிறார். அவரை கொல்ல ஜெயபிரகாஷ் ஆட்கள் வரும் போது தனுஷ் அவரை காப்பாற்றி அனுப்புகிறார்.

அனல் ஈசன் எனும் கதாபாத்திரத்தில் தனுஷும் அவரது அண்ணனாக செங்கோலன் எனும் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமாரும் நடித்துள்ளனர். போராட்ட இயக்கத்தில் செங்கோலன் செயல்பட்டு வரும் நிலையில், தனது தம்பியையும் தனது இயக்கத்திற்கு வர அழைக்கிறார். ஆனால், சுதந்திரத்தை வாங்கி இந்த ராஜாவுக்குத் தானே கொடுக்கப் போற அவனுங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். நான் பட்டாளத்துல போய் சேரப்போறேன் என ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார்.

பின்னர் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபடும் தனது மக்களையே சுட்டு வீழ்த்த வேண்டிய சூழல் வரும் போது தனுஷின் அண்ணன் செங்கோலன், பிரியங்கா மோகனின் கணவர் உள்ளிட்டோரை தனுஷ் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பழி உணர்ச்சியில் இருந்து மீள கொள்ளைக் கூட்டத்தில் சேரும் தனுஷ் செய்யும் ஒரு காரியத்தால் அந்த ஊரையே ஆங்கிலேயர்கள் அழிக்க வருகின்றனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து தனது ஊரை தனுஷ் காப்பாற்றினாரா? கோயில்களுக்கு மக்கள் சென்றார்களா? அராஜகம் செய்த ராஜாவின் குடும்பத்தினர் என்ன ஆனர்கள்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

துப்பாக்கியில் இருந்து குண்டு பாயும் காட்சி, ஆங்கிலேயர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் தங்கள் அதிகாரத்துக்கு என காட்டப்படும் இடங்கள் என படம் முழுக்கவே தெறிக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே அனல் ஈசன் எப்படி கேப்டன் மில்லராக மாறுகிறான். அவனை பற்றிய கதையை எப்படி இளங்கோ குமரவேல் ஆரம்பிக்கிறார். கதையை சொல்லிக் கொண்டே கதைக்குள் செல்லும் விதம் என இயக்குநர் ரைட்டிங்கிலும் அதே போல படத்தின் எடிட்டர் நாகூரான் ராமசந்திரனின் கட்ஸ் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் தனுஷ் மட்டுமே ஒட்டுமொத்த படத்தையும் தாங்குகிறார் என்று சொன்னாலும், ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நல்லாவே நடிக்கவும் செய்துள்ளனர். பிரியங்கா மோகன் கையில் துப்பாக்கி என்பதை டிரெய்லரில் பார்த்து செட் ஆகுமா? என சிரித்தவர்கள் எல்லாம் படத்தில் அவரது நடிப்பையும் கிளைமேக்ஸில் அந்த துப்பாக்கியால் அவர் யாரை சுடுகிறார் என்பதை பார்த்து மிரண்டே போய் விட்டனர். தனுஷை தொடர்ந்து இளங்கோ குமரவேல் மற்றும் நிவேதா சதீஷின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். சிவராஜ்குமாருக்கு இந்த படத்தில் எக்ஸ்டன்டட் கேமியோ ரோல் போலத்தான் கதாபாத்திரம். அடுத்தடுத்த பாகத்தில் தான் அவர்களுக்கான கதை விரியும் என தெரிகிறது. சந்தீப் கிஷன் உள்ளிட்ட அனைவரும் கொடுத்த கதாபத்திரத்திற்கு நீதி செய்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர் தனுஷ் இந்த படத்துக்காக தன்னுடைய ஒட்டுமொத்த நடிப்பையும் கொட்டித் தீர்த்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளைக்காரன் படையில் இருந்துக் கொண்டே ஜெனரல் ஒருவரை சுட்டு விட்டு அவரும் சுட்டுத் தற்கொலை செய்துக் கொள்ள பார்க்கும் இடங்கள் எல்லாம் டாப் நாட்ச். கேப்டன் மில்லர் படத்திற்கு இன்னொரு பலம் என்றால் படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி தான். ஒவ்வொரு ஃபிரேமிலும் தனுஷ் வரும் காட்சிகள் எல்லாமே கூஸ்பம்ப்ஸ் காட்சிகளாக மாற்றிக் கொடுத்திருக்கிறார். கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி எல்லாம் வேறலெவல் கேமரா ஒர்க். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடித்து நிற்பது ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான். அசுரன் படத்திற்கு பிறகு தனுஷுக்கு மீண்டும் மிகப்பெரிய சம்பவத்தை ஜி.வி. பிரகாஷ் செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *