இஷான், ப்ரணாலி கோகரே, டேனியல் பாலாஜி, சத்யன், சுப்பிரமணி, நிஷ்மா மற்றும் பலர் நடிப்பில் MGP மாஸ் மீடியா நிறுவனம் தயாரிப்பில், மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் உருவான படம் “அரியவன்”.
கதைப்படி,
நம் மனதை பெரிதாக பாதித்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு கதை இது.
பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை பாலியல் தொழிலாளர்களாகி பணம் சம்பாதிப்பது தான் அவரின் தொழில். அவர் பிரபல தாதாவும் கூட. அவர் செய்யும் தவறுகள் ஒருபக்கம் நமக்கு காண்பிக்கப்பட்ட.
மறுபக்கம், இஷான் மற்றும் ப்ராணலி இருவரும் காதலர்கள். திடீரென ஒரு நாள், ப்ராணலியின் தோழியான நிஷ்மா தற்கொலைக்கு முயற்சி செய்ய. ப்ராணலி தடுத்துவிடுகிறார். அப்போது, அவரின் இந்த முடிவுக்கு காரணம் அவரை காதலிப்பதாக சொல்லி ஒருவர் அவரை ஏமாற்றி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை ப்ராணலியிடம் கூறுகிறார்.
அதன் பின் அந்த வீடியோவை டெலீட் செய்ய வேண்டும் என ப்ராணலி அவரிடம் கூற சண்டை வருகிறது. அந்த சண்டையில் எதிர்பாராத விதமாக அவரின் கையை துண்டித்துவிடுகிறார் இஷான்.
ஆனால், அவருக்கு தெரியாது இது ஒரு பெரிய நெட்வர்க் என்று. கை துண்டிக்க பட்ட நபர் யாரென்று பார்த்தால் அவர் டேனியல் பாலாஜியின் தம்பி. எனவே, தனது தம்பியின் கையை வெட்டியா இஷானை கொலை செய்ய வேண்டுமென வெறியோடு கிளம்புகிறார் டேனியல் பாலாஜி.
டேனியல் பாலாஜி என்ன ஆனார்? இஷான் எப்படி மற்ற பெண்களை மீளச்செய்தார்? பாலியல் குற்றங்களுக்கான தீர்வு என்ன? பெண்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்ற பல கேள்விகளுக்கு விடை தான் படத்தின் இரண்டாம் பாதி.
அறிமுக நாயகன் இஷான், ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமாக அறிமுக நடிகர்கள் ஹீரோவை மையமாக கொண்ட கதையில் நடிப்பது தான் வழக்கம். அதற்கு மாறாக, பீமேல் ஓரியன்டேட் கதையில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இஷான்.
இதிலிருந்தே அவர் கதைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. நடிப்பில் அமெசூராக இருந்தாலும் ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார் இஷான். ஹீரோவை விட, நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் இவரின் மவுசு அதிகரிக்கும். உயரம் மற்றும் குரல் இவரின் பலமாக அமைந்துள்ளது. மேக் அப்பில் சிறிது கவனம் தேவை.
பல படங்களில் சப்போர்டிங் கதாபாத்திரத்தில் வந்து செல்லும் ப்ராணலி இப்படத்தில் கதாநாயகியாக கலக்கியுள்ளார். நிஷ்மா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் இப்படத்தில் குறைவு தான்.
உடன் நடித்த ரமா, சூப்பர் குட் சுப்ரமணி, சத்யன் என அனைவரும் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துவிட்டனர்.
சமூக பொறுப்புடன் ஒரு தீர்வை சுட்டிக்காட்டி கதை எழுதிய எஸ்.யூ.மாரிசெல்வன் அவர்களுக்கு தனி பாராட்டுக்கள்.
108 நிமிட கதை, தேவையான காட்சிகள் படத்தின் முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்த விதம் என சரியான திட்டமிடலோடு இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர் ஜவஹர். தொய்வு இல்லாத திரைக்கதை ஓட்டம் படத்திற்கு பலம். படத்தின் இறுதியில், பாலியல் கொடுமைகளுக்கு என்ன தீர்வு என்பதை மக்கள் கருத்தாக பதிவு செய்து தீர்வை சொல்லியது “மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு” என்ற வாசகத்தை நினைவு படுத்துகிறது.
கிரிநந்த், வேத் ஷங்கர், ஜேம்ஸ் வசந்தன் என மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தும் படத்தின் பாடல்கள் நம்மை ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் பின்னிவிட்டார்கள் இசையமைப்பாளர்கள். விஷ்ணு ஷிர் ஒளிப்பதிவு சிறப்பு.
அரியவன் – சமூக போராளி.