அரசு மருத்துவக் கல்லூரியை தனியாருக்கு விடப் போவதாக அரசு அறிவிக்கிறது. சமூக அக்கறை உள்ள மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர். இன்னொரு புறம் அஞ்சனா கீர்த்தி பெற்றோரின் எதிர்ப்பை மீறி அரசியல் மாற்றத்திற்காக அரசியலில் இறங்கி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடம் போராட்டத்தில் ஈடுபடுகிறார். இவர்கள் இருவரையும் ஆளும் அரசு தனது கட்சி அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி தடுக்க முயற்சி செய்கிறார். இறுதியில் யார் வென்றார்கள் என்பதே படத்தின் மீதி கதை.
ஆச்சி மாற்றம் வேண்டாம் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற வசனம் படத்தின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உள்ளூர், வெளியூர், தமிழ்நாடு, அண்டை மாநிலம் தொடங்கி இந்தியாவில் உள்ள அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் உலகத்தில் உள்ள பெரும் தலைவர்கள் அனைவரையும் குறிப்பிட்டு அவர்கள் கூறிய கருத்துக்களை முன்வைத்து படம் முழுக்க வசனம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் விளக்கத்தால் நீள்கிறது. வசனங்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் காதுகள் தொய்வடைகிறது. இடையில் வரும் பாடல்கள் மட்டுமே ஆறுதல். மேடை நாடகமும் மற்றும் பேச்சுப் போட்டியும் பார்த்த உணர்வு வருகிறது.
அரசியல் குறித்த விழிப்புணர்வுக்காக படம் முழுக்க பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர் பாலு எஸ் வைத்தியநாதன். அவரே நாயகனாகவும் நடித்திருக்கிறார். அஞ்சனா கீர்த்தி தனக்கு கொடுத்த வசனத்தை முழு சிரத்தையுடன் அள்ளித் தெளித்திருக்கிறார்.
ஸ்ரீ காந்த் தேவாவின் இசையில் அமைந்த பாடல்கள் மனதை வருடுகிறது. பாடல் வரிகளும் நன்றாக இருக்கிறது, பாராட்டுகள்.
அறம் செய் – வசனங்களால் அசதியடைய வைக்கிறது