ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், ஒரு சாமானிய மனிதனுக்கும் இடையில் எப்படிப்பட்ட ஒரு நீதி கிடைக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கும் படம்.
சென்னையில் ஒரு கட்டிடத்தில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பவர் கருணாஸ். அவரது மனைவி ரித்விகா குழந்தை பெற்ற நிலையில் திடீரென காணாமல் போகிறார். மனைவியைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அது பற்றி விசாரிக்கும் காவல் துறையினர் ரித்விகா அவரது முன்னாள் காதலருடன் ஓடிப் போய்விட்டார் என கருணாஸிடம் சொல்கிறார்கள். அதை நம்ப மறுக்கிறார் கருணாஸ். ஆனால் நடந்ததோ வேறு, அது என்ன என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.
“அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள்” படங்களை இயக்கிய ராம்நாத் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். முதல் இரண்டு படங்களை கமர்ஷியல் படமாகக் கொடுத்தவர் தனது மூன்றாவது படமான ‘ஆதார்’ படத்தை ஒரு மாறுபட்ட படமாகக் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார். சாதாரண மக்கள் காவல் நிலையத்தில் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கான மதிப்பும், மரியாதையும் என்ன என்பதை உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார். அதே சமயம், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் அதிகாரத்தைத் தன் பக்கம் திருப்பி தனக்கு என்ன தேவையோ அதைப் பெற்றுக் கொள்கிறது என்பதை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துடன் சொல்லியிருக்கிறார்.
ஒரு அழுக்கு லுங்கி, சட்டை, முகத்தில் தாடி, கையில் கைக் குழந்தை, முகம் நிறைய சோகம் என ஆரம்பக் காட்சியிலேயே நெகிழ வைக்கிறார் கருணாஸ். ஒரு ஏழை அன்புக் கணவனின், ஒரு அப்பாவின் பாசப் போராட்டத்தை காட்சிக்குக் காட்சி இயல்பாய் நடித்து உணர்த்துகிறார். காவல் துறையின் கட்டுப்பாட்டிற்கும் மிரட்டலுக்கும் முன்னால் ஒரு சாமானியன் எதுவுமே செய்ய முடியாது என்பது கருணாஸ் கதாபாத்திரத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். படம் பார்க்கும் போது ‘தூத்துக்குடி காவல் நிலைய மரணங்கள்’ ஞாபகம் வந்து போகிறது.
கருணாஸ் தவிர்த்து காவல் துறையைச் சேர்ந்தவர்களாக டெபுடி கமிஷனராக உமா ரியாஸ், இன்ஸ்பெக்டராக பாகுபலி பிரபாகர், காவலராக அருண் பாண்டியன் ஆகியோரும் படம் முழுவதும் வருகிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு உமா ரியாஸ், பிரபாகர் கதாபாத்திரங்கள் உதாரணம். காவல் துறையிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அருண் பாண்டியன் கதாபாத்திரம் ஒரு உதாரணம். உமா ரியாஸ் கடைசியில் ‘பணம்’ பற்றிப் பேசும் அந்த வசனம் நிதர்சனம்.
கருணாஸ் மனைவி ரித்விகா காணாமல் போனதில் திரைக்கதையை வேறு பக்கம் நகர்த்த வேண்டும் என்பதற்காக மேஸ்திரி தேனப்பன் மற்றும் ஆட்டோ டிரைவர் திலீபக் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. கருணாஸ் மனைவியாக ரித்விகா சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘தேன் மிட்டாய்’ பாடல் உருக வைக்கிறது. பின்னணி இசையிலும் ரசிகர்கள் எந்த அளவிற்கு நெகிழ முடியுமோ அந்த அளவிற்குக் கொடுத்திருக்கிறார்.
சென்னையிலும் ஏழை மக்களின் வாழ்வில் சொல்லப்படாத விஷயங்கள், கதைகள் எவ்வளவோ இருக்கிறது என்பதை இந்தப் படம் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராம்நாத். இரண்டு மணி நேரப் படம்தான் என்றாலும் காட்சிகள் மெதுவாய் நகர்வது படத்தில் குறையாக உள்ளது. இந்தக் காலத்தில் இவ்வளவு சோகத்தையும் தாங்கிக் கொண்டு மக்கள் படம் பார்க்க வந்தால் இந்தப் படமும் பேசப்படும்.