‘விருஷபா’ படத்தில் மோகன்லாலுக்கு மகனாக நடிக்க நடிகர் ரோஷன் மேகா தேர்வு

விருஷபா – பன்மொழியில் தயாராகும் காவிய ஆக்சன் என்டர்டெய்னர். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அவரது மகனின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் விருஷபாவில் மோகன்லாலின் மகனாக நடிக்க தெலுங்கு நடிகர் ரோஷன் மேகா தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக கருதப்படும் விருஷபா – ஒரு தந்தைக்கும், அவரது மகனுக்கும் இடையேயான அதி தீவிரமான வியத்தகு காவிய கதையை விவரிக்கிறது. மேலும் இந்த படத்தில் நட்சத்திர நடிகர்களும், அதிநவீன விஎஃப் எக்ஸ் மற்றும் உயர்தரமான அதிரடி சண்டை காட்சிகளும் ரசிகர்களை கவரும் வகையில் இடம்பெறுகிறது என படக் குழு உறுதியளிக்கிறது.

இது தொடர்பாக ஏ வி எஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் வியாஸ் பேசுகையில், ” உலகெங்கும் உள்ள ரசிகர்கள் இந்த அற்புதமான படத்தை ரசிக்க வேண்டும் என்பதனை மனதில் வைத்து படத்திற்கான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோஷன் மிகவும் திறமையானவர். மேலும் அவரது கதாபாத்திரத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துகிறார். இந்த கதாபாத்திரத்தில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் என நாங்கள் உறுதியாக உணர்கிறோம். படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியமானது. இந்த பயணத்தில் அவர் இணைந்திருப்பதால், நாங்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனைய நடிகர்களின் விவரங்களை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.

இயக்குநர் நந்த கிஷோர் பேசுகையில், ” மோகன்லாலின் மகனாக நடிக்க ரோஷன் பொருத்தமானவர் என்பதனை அவரை சந்தித்த உடன் கண்டுபிடித்தேன். அவரது முந்தைய படைப்புகளையும் பார்வையிட்டேன். அவரது நடிப்புத் திறமையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ரோஷன் இந்த படத்திற்கு பெரும் பலமாக இருப்பார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *