பிஎஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கட்சிக்காரன் ‘. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது,
” இங்கே பொன்னாடை என்று போர்த்துகிறார்கள். இந்த பொன்னாடையால் என்ன பயன் இருக்கிறது? எந்தப் பயனும் கிடையாது. இது முழுக்க முழுக்க வீணான ஆடம்பரம் .அதனால் நம் தமிழ்நாட்டிற்கும் தமிழருக்கும் எந்தப் பயனும் இல்லை.எங்கிருந்தோ ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களில் இருந்து வருகிறது. அங்கேயும் யாரோ ஒருவர்தான் அதைச் செய்கிறார்கள்.அதைவிட தமிழ்நாட்டையும் கவனிக்க வேண்டும் அல்லவா? தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர்கள் சேலம், திருப்பூர் போன்ற இடங்களில் நமது தமிழர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே கைத்தறி ஆடைகளை மேடைகளில் அணிவிக்கலாம். ஒன்றுக்கும் உதவாத இந்தப் பொன்னாடை தேவையில்லை.
காதியை வரவேற்போம் ஆதரிப்போம்.இன்று ஜிஎஸ்டி என்று அக்கிரமமாக வசூல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் இப்படி வசூலாகிறது.எதற்கெடுத்தாலும் ஜிஎஸ்டி என்று இலக்கு வைத்து கொண்டு வசூலிக்கிறார்கள்.கட்சிக்காரன் என்று ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். அதை எடுக்க இங்கே புதியவர்கள் வந்திருக்கிறார்கள் .
இது அரசியல் படம் என்று தெரிகிறது.படம் எடுங்கள் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அதேநேரம் தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்.தவறுகளைச் சுட்டிக் காட்டாதவன் மனிதனே கிடையாது. இதுதான் இயக்குநர்களுக்கு என் வேண்டுகோள். நம் நாட்டில் தொண்டர்கள் தலைவர்களிடம் அடிமையாக இருக்கிறார்கள் .தலைவர் மாறினாலும் தொண்டர்கள் மாறாமல் இருக்கிறார்கள்.ஜோக்கர் என்றொரு படம் வந்தது அதில் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் நடிக்கவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் அநியாயங்களை, தவறுகளைச் சுட்டிக்காட்டியது. அந்தப் படம் மிகப் பிரமாதமாக ஓடியது.இந்தப் படத்தைக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்துள்ளார்கள்.
அப்போதெல்லாம் ராமநாராயணன் நிறைய படங்கள் எடுத்தார். குறுகிய காலத்தில் படம் எடுத்து வெற்றி கண்ட அவர், 28 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடித்துவிடுவார்.படத்தின் வசனங்கள் பகுதியை 18 நாட்களும் ,பாடல்களுக்கு 6 நாட்களும், சண்டைக் காட்சிகளுக்கு 2 அல்லது 3 நாட்களும் என்று திட்டமிட்டு முடித்து விடுவார்.இதுதான்அவரது கணக்கு .ஒரு படம் வெளியாகும் போது அடுத்த படம் தொடங்கி விடும்.அவர் இயக்கியதில் எண்பது சதவிகிதமான படங்கள் வெற்றிப் படங்கள் தான்.
அவர் விலங்குகளை வைத்து படம் எடுத்தார் .அதிலும் பெரிய வெற்றி கண்டார்.இங்கே ஓர் எழுத்தாளர் இயக்குநர் வந்துள்ளார் .அவரது பெயர் சம்பந்தம்.ஏராளமான விலங்குகள் சம்பந்தப்பட்ட கதையை உருவாக்கியவர். பஞ்ச கல்யாணி என்ற படம் கழுதையை வைத்து எடுத்தார்.இப்போதும் அவர் கையில் நிறைய கதைகள் உள்ளன.
கதையின் தேவை உள்ளவர்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இப்போது கதை இல்லாமல் படம் எடுக்கிறார்கள் ,அல்லது அடுத்தவன் கதையைத் தன் கதை என்று போட்டுக் கொள்கிறார்கள்.கட்சிக்காரன் படம் அரசியல் வாதிகளை விமர்சிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு என்ன சொல்ல வேண்டும்? ஊழல் செய்ய வேண்டாம். அது பாவம். அரசியல்வாதிகளே ஊழல் செய்யாதீர்கள் . நீங்கள் எதைச் சேர்த்து வைத்தாலும் பாவத்தைச் சேர்க்காதீர்கள். அது உங்கள் சந்ததியைப் பாதித்து உங்கள் தலைமுறையையே அழித்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.அரசியல்வாதிகளே ஊழல் செய்ய வேண்டாம் “என்று கூறி படக் குழுவினரை
வாழ்த்தினார்.
விழாவில் இயக்குநர்கள் எத்தன் சுரேஷ், கேந்திரன் முனியசாமி, மதுராஜ், தொழிலதிபர் தூத்துக்குடி பால்ராஜ்,படத்தின் இணைத் தயாரிப்பாளர் மலர்க்கொடி முருகன், இசையமைப்பாளர்கள் ரோஷன் ஜோசப்,மகேந்திரன், பாடல் எழுதிய நா. ராசா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கதை நாயகனாக நடித்துள்ள விஜித் சரவணன் பேசும்போது,
” இது எனக்கு முதல் மேடை.இது போன்றதொரு மேடை முன்பே அமைந்திருக்க வேண்டியது. சரியாக நேரம் அமையாததால் தள்ளிப் போய் இப்போதுதான் இந்த வாய்ப்பு வந்திருக்கிறது.இந்தப் படத்தின் இயக்குநர் ஐயப்பன் எனது இனிய நண்பர். அவர் ‘டோனி கபடிக் குழு ‘என்ற படம் எடுத்தார். அதில் எனக்கு வில்லன் வாய்ப்பு கொடுத்தார். இதில் கதையின் நாயகனாக நல்லதொரு கதாபாத்திரம் கொடுத்துள்ளார்.இந்தப் படத்திற்கு எது தேவையோ அதைக் கேட்டு வாங்கினார்.எது தேவை எது தேவையில்லை என்பதில் தெளிவாக இருந்தார்.அண்ணன் அப்புக்குட்டி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.தேசிய விருது வாங்கிய அவருடன் நடித்தது எனக்குப் பெருமை.இந்தப் படத்திற்காக எட்டு கிலோ நான் எடையைக் கூட்டி யிருக்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.நான் 2000 சினிமா கம்பெனிகளுக்கு என்னுடைய போட்டோக்களை எடுத்துக் கொண்டு ஏறி இறங்கி இருக்கிறேன். எந்த கம்பெனியில் சென்று பார்த்தாலும் என்னுடைய போட்டோக்கள் இருக்கும். இப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது.சினிமா மீது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. நான் ஒரு கதை என்ன கேட்கிறதோ அப்படியே நடிப்பேன்.நான் ஒரு நடிகன் அவ்வளவுதான். பாசிட்டிவ் நெகடிவ் என்ற பேதமெல்லாம் எனக்குக் கிடையாது” என்றார்.
படத்தின் நாயகி ஸ்வேதா டாரதி பேசும்போது,
” இந்தப் பட வாய்ப்பு வந்தபோது அரசியல் சார்ந்த கதை என்றதும் முதலில் நான் யோசித்தேன். நடிப்பதற்குத் தயக்கமாக இருந்தது .பிறகு என் கதாபாத்திரத்தைக் கேட்டபோது பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன். நான் அரக்கோணத்தைச் சேர்ந்தவள் .சினிமாவில் நடிப்பதற்காக என்னுடைய குடும்பமே சென்னை வந்தது. அந்த அளவுக்கு எனது பெற்றோர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்த படம் எனக்கு நல்லதொருவாய்ப்பு. வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன்.அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.