பாபி சிம்ஹா, கஷ்மீரா பர்தேசி, ஆர்யா மற்றும் சிலர் நடித்துள்ள படம் “வசந்த முல்லை”. இப்படத்தை, ரமணன் புருஷோதமா இயக்கியிருக்கிறார். ரேஷ்மி சிம்ஹா இப்படத்தை தயாரித்துள்ளார்.
கதைப்படி,
ஒரு ஐடி நிறுவனத்தில் பாபி சிம்ஹா புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறார். இவரது கம்பெனிக்கு ஒரு மிகப்பெரிய புராஜெக்ட் வருகிறது. இதை குறைந்த நாட்களில் முடித்து தருமாறு கேட்கின்றனர். இதற்கான பொறுப்பை பாபி சிம்ஹா ஏற்றுக் கொண்டு வேலை செய்கிறார்.
குறைந்த நாட்களில் முடிக்க வேண்டிய வேலை என்பதால் பாபி சிம்ஹா தூக்கமே இல்லாமல் இதற்காக கடினமாக உழைக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த தூக்கமின்மை அவருக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து இவரை பரிசோதித்த மருத்துவர் கண்டிப்பாக ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.
இதனால் காதலி கஷ்மீரா பர்தேசி, பாபி சிம்ஹாவை வற்புறுத்தி வெளியூர் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்குகிறார்கள். அப்பொழுது கஷ்மீரா பர்தேசிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட பாபி சிம்ஹா மருந்து வாங்குவதற்காக வெளியே செல்கிறார்.
திரும்பி வந்து பார்க்கும் பொழுது அவர்கள் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லை. இதனால் பாபி சிம்ஹா செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார். இறுதியில் ஏன் இவ்வாறு நடக்கிறது? கஷ்மீரா என்ன ஆனார்? காதலியை பாபி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனான பாபி சிம்ஹா வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். மிடுக்கான உடல் வாக்குடன், முழு ஹீரோவாகவே நடித்திருக்கிறார் பாபி. சண்டை காட்சிகளில் மிரட்டியும், ரோமன்ஸ் காட்சிகளில் நேர்த்தியாகவும் நடித்துள்ளார் பாபி சிம்ஹா.
கஷ்மீரா பர்தேசி காதல் காட்சிகளில் கவனிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிறப்பு தோற்றத்தில் வரும் ஆர்யா தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
அறிமுக இயக்குனரான ரமணன் புருஷோத்தமா தனது முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்துள்ளார். படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி வரை, ஹாலிவுட் படம் பார்த்த ஒரு பீலை கொடுத்துள்ளார் இயக்குனர் ரமணன்.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு சிறப்பு. ராஜேஷ் முருகேசன் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
வசந்த முல்லை – பூத்தது.