மதுரையைச் சேர்ந்த விவேகானந்தன் என்கிற விவேக் பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்தார். பின்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் மற்றும் எம்.காம் படிப்பை முடித்தார். சில காலம் டெலிபோன் ஆபரேட்டராக இருந்திருக்கிறார்.
தொடர்ந்து டி.என்.பி.சி தேர்வு சென்னை எழுதி, தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். 1987-ல் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் இயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் நடிகராக அறிமுகப் படுத்தப்பட்டார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சீடராக, அவரது விருப்பப்படி தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்ற லட்சியம் கொண்டு, 33 லட்சத்து 23 ஆயிரம் மரங்களை இதுவரை நட்டிருக்கிறார். நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் கதாபாத்திரங்களில் பிரகாசித்தார். தமிழக ரசிகர்களால் “சின்னக் கலைவாணர்” என்று கொண்டாடப்பட்ட நடிகர் விவேக் மத்திய அரசின் விருதான “பத்மஸ்ரீ” விருதினைப் பெற்றார்.
வாழ்வின் ஒவ்வொரு துளியையும் அர்த்தமுள்ளதாகக் கழிக்க வேண்டும் என்பார் நடிகர் விவேக். பல்லாயிரக் கணக்கான கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல், நிலத்தடிநீர், வன அபிவிருத்தி, வேளாண்மை, மனிதவளம் குறித்து உரையாற்றியிருக்கிறார். எம்.ஆர்.ராதாவுக்குப் பிறகு திரைக்களம் மூலம் மூட நம்பிக்கை விழிப்புணர்வை நகைச்சுவையாக எடுத்துரைத்தார். இயற்கையை காதலித்த “சின்னக் கலைவாணர்” விவேக், தான் விரும்பியபடி இயற்கையில் சங்கமித்திருக்கிறார்.