விமானம் விமர்சனம் – (3.5/5);

இயக்குனர் சிவபிரசாத் யனாலா இயக்கத்தில் சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், அனுசுயா பரத்வாஜ், தன்ராஜ், ராகுல் ராமகிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் விமானம்.

கதைப்படி,

ஒரு கால் நடக்க முடியாத ஊனமுற்றவராக வருகிறார் சமுத்திரக்கனி. மூன்று சக்கர வாகனத்தில் வந்து, தெருவோரம் கட்டண கழிப்பிடம் ஒன்றை நடத்தி அதில் பிழைப்பு நடத்தி வருகிறார். மனைவியை இழந்த இவருக்கு பத்து வயதில் மகனாக வருகிறார் மாஸ்டர் துருவன்.

சிறு வயதில் இருந்தே ஆகாய விமானம் என்றால் அதீத பிரியம் துருவனுக்கு. படிப்பில் சிறந்த மாணவனாக இருக்கும் துருவனுக்கு வேறு ஒரு பெரிய பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சந்தோஷத்தில் மிதந்திருந்த சமுத்திரக்கனிக்கு பேரிடியாய் விழுந்தது அந்த செய்தி.

துருவனுக்கு கேன்சர் என்றும் அவரை காப்பாற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி விடுகின்றனர். இதனால், உடைந்து போகும் சமுத்திரக்கனி, தன் மகன் ஆசைப்பட்டதை செய்து கொடுக்க எண்ணுகிறார்.

துருவனின் மிகப்பெரும் ஆசையாக இருப்பது விமானத்தில் செல்வது மட்டுமே. அந்த ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார் சமுத்திரக்கனி. அதற்காக பணம் திரட்டுகிறார். அந்த பணத்தை அடைந்து மகனை விமானத்தில் ஏற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை..

கால்களை இழந்த ஏழை தந்தையாக சமுத்திரகனி அற்புதமாக நடித்துள்ளார். தனது குழந்தையின் ஆசையை நிறைவேற்ற போராடும் இடங்களில் கண்கலங்க வைத்துள்ளார். மேலும், மகனின் கேன்சர் நோய், வருமானத்திற்கு வழியாக இருந்த கழிவறையை இழக்கும் இடம் என வலி நிறைந்த ஒரு பாத்திரத்தில் அசதியுள்ளர் சமுத்திரக்கனி.

ஆனால், வழக்கம் போல் கருத்து ஊசி போடுவதை இப்படத்திலும் ஃபாலோ செய்துள்ளார் சமுத்திரக்கனி.

குழந்தையாக நடித்திருக்கும் துருவன் நடிப்பில் கைத்தட்டல் பெறுகிறார்.

உடன் நடித்துள்ள மீரா ஜாஸ்மின், அனசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது.

மகனுக்கும் தந்தைக்கும் உள்ள உணர்வுகளை அழகாக பதிவு செய்ய முயற்சித்துள்ளார் இயக்குனர் சிவா பிரசாத் யென்னாலா.

தந்தைபடும் கஷ்டங்களை புரிந்துக் கொண்டு அவருக்காக தனது ஆசையை கைவிட நினைக்கும் இடங்களை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளார். கதையில் விறுவிறுப்பு இல்லாததால் சற்று தொய்வாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சி அனைத்தையும் மறக்க செய்கிறது.

ஒளிப்பதிவாளர் விவேக் கலேபு அவர்களின் ஒளிப்பதிவு சிறப்பு. சரண் அர்ஜுனின் இசை ஓகே.

விமானம் – மனதில் நிற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *