விடுதலை – 1 விமர்சனம் – (4.5/5)

விஜய் சேதுபதி, சேத்தன், கவுதம் மேனன், பவானி ஸ்ரீ நடிப்பில் சூரி நயகனாக அறிமுகமாகும் படம் “விடுதலை – 1”. வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கதைப்படி,

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மூலக்கதையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் “விடுதலை – 1”.

அருமபுரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் கனிம வள சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடுகிறது அரசு.

அரசு உத்தேசிக்கும் இந்தத் திட்டத்திற்கு அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறது.

தமிழர் மக்கள் படையை கைது செய்ய முயற்சிக்கும் அரசு போலீஸாரைக் கொண்டும், மலை கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி மக்கள் படை இயக்கத்தை கூண்டோடு அழிக்க முயற்சிக்கிறது. இதில் இரண்டு தரப்பிலும், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.

இந்தப் போராட்டத்தில் மக்கள் படை வென்றதா? மக்கள் படையை காவல் துறை கைது செய்கிறதா? இல்லையா? என்பது மீதிக்கதை…

காமெடி கதாபாத்திரம், பிரண்ட், தம்பி, அண்ணன் என பல கேரக்டரில் காமெடி ரோலில் மட்டுமே வளம் வந்த சூரிக்கு இப்படம் ஒரு பிரேக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தவறு செய்யாமல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கும் காட்சி, லவ் காட்சி, சண்டை, மேலதிகாரி தண்டனை கொடுக்கும் காட்சி, காதலிக்காக போராடும் காட்சி, ஊர் மக்களிடம் பழகும் காட்சி என அனைத்திலும் வெகுளியாகவும், கோபமாகவும், யதார்த்தமாகவும் நடித்திருக்கிறார் சூரி.

சூரிக்கு நடிப்பு வருமா? நாயகனாக நடிக்கும் சவால்களை கடந்துவிடுவாரா? என்று பலருக்கும் இருந்த சந்தேகங்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அவர் நடிப்பிற்காக “தேசிய விருது” வாங்கினால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒரு காரணமும் இல்லை.

வழக்கமாக காமெடி கதாபத்திரத்தில் தான் சேத்தன் அவர்கள் நடித்தும் பார்த்திருப்போம், ஆனால் இப்படத்தில் “OC” என்ற உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். “குருதி புனல்” படத்தில் வரும் நாசர் கதாபாத்திரத்தை சேத்தனின் கதாபாத்திரத்துடன் பொருத்தி பார்க்கும் அளவிற்கு கதாபாத்திர வலு.

நாயகியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, காதல் காட்சிகளில் அழகியாகவும், போலீஸிடம் விசாரணைக்கு செல்லும் காட்சிகளில் தைரியமான ஒரு குரலாகவும் ஒளித்திருக்கிறார் பவானி ஸ்ரீ.

கவுதம் மேனன் எப்பவும் போல் அதே நடிப்பு தான், வார்த்தையை நிறுத்தி நிறுத்தி உச்சரிக்க வேண்டியது, இல்லையென்றால் ஒரே ஓட்டமாக கடகடவென பேச வேண்டியது. சார் நடிப்பு ஓகே சார், கொஞ்சம் அந்த ஸ்லாங்க மாத்துனா நல்லாருக்கும்.

இதற்கு முன் நாவலை இயக்கி வெற்றி கண்டவர் வெற்றி மாறன். இப்போது ஒரு சிறுகதை, அதை இரண்டு பாகங்களாக ஒரே நேரத்தில் இயக்கி முதல் பாகத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

வெற்றிமாறனுக்கு தன் நம்பிக்கை மிகவும் அதிகம் தான். இல்லையென்றால் சவாலான இடத்திற்கு சென்று, பெரும் பட்டாளத்தை ஒரே பிரேமில் காட்சி படுத்த முடியுமா? ஒவ்வொரு காட்சியும் நடிகர்களும், படக்குழுவும் சந்தித்த சவால்களை வெளிக்காட்டியது.

கடின உழைப்புக்கு எத்தனை விருதுகள் கிடைத்தாலும் போதாது. வெற்றிமாறனால் இதற்கு மேல் என்ன முடியும் என்று யோசித்தால். “LTT” கதையை அவரால் மட்டும் தான் இயக்க முடியும் என்ற பதில் கிடைத்தது.

இசைஞானி இளையராஜா படத்திற்கும், காட்சிக்கும் தேவையான இசையமைத்து பல இடங்களில் திகிலூட்டியும், நமது எமோஷனை தூண்டிவிட்டும் படத்திற்கு தூணாக அமைந்துள்ளார்.

விஜய் சேதுபதி க்ளைமாக்சில் தான் வருகிறார். இரண்டாம் பாகத்தை முழுமக்கியாக தன்வசம் அமைக்க காத்திருக்கிறார்.

வேல்ராஜின் ஒளிபதிவு கைதட்டல்களை பெறுகிறது. மலைப்பகுதிகளை காட்சி படுத்தியது ஒருவிதம். இருட்டிற்குள், அடர்ந்த காட்டிற்குள் லைட்டிங் அமைத்து தெளிவாக காட்சி படுத்தியது ஒருவிதம்.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், சூரி வேலைக்கு சேர்ந்தவுடன் காட்டிற்குள் நடந்து செல்வார். அப்போது, ட்ரோன் ஷாட் மூலம் முழு மலையையும் காட்டி வியப்படைய செய்திருப்பார்.

அதற்கு முன் படத்தின் ஆரம்பத்தில் வரும் 10 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி. மிகவும் சவாலான ஒரு காட்சியை எளிமையாக நமக்கு திரையில் விருந்தாக கொடுத்திருப்பார் வேல்ராஜ்.

விடுதலை – சர்வாதிகாரமும் போராட்டமும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *