எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், ஷாந்தினி நடிப்பில், இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “பொம்மை”.
கதைப்படி,
சென்னையில் தனியாக வாழ்ந்து வரும் எஸ்.ஜே.சூர்யா பொம்மைகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இவர் அதற்காக பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். இப்படி இவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
அப்போது அவர் வேலை செய்யும் இடத்தில் தாடையில் சிறிய தழும்புடன் பொம்மை ஒன்று வருகிறது. தனது கடந்த கால காதலியை நினைவூட்டுவது போன்று இருக்கும் இந்த பொம்மையை தனது காதலியாக நினைத்து வாழ ஆரம்பிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஒரு கட்டத்தில் இந்த பொம்மை ஏற்றுமதி செய்யப்பட்டு கைமாறுகிறது. இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் காதல் என்ன ஆனது? ஏற்றுமதி செய்யப்பட்ட பொம்மை மீண்டும் அவரிடம் வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை…
ஒருவர் காதலுக்காக எவ்வளவு ஆழத்திற்கும் செல்வார் என்பதை தனது நடிப்பு மூலம் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
பயம், பதட்டம், மகிழ்ச்சி என ஒவ்வொரு காட்சிகளிலும் கூடிக்கொண்டே போகும் அவரின் நடிப்பு கவனம் பெறுகிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் வெவ்வேறு எமோஷன்களை முகத்தில் காட்டி மிரட்டியிருக்கிறார்.
பொம்மையாக வரும் பிரியா பவானி சங்கர் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
சாந்தினி தனக்கான கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். வித்தியாசமான கதையை இயக்க நினைத்துள்ளார் இயக்குனர் ராதா மோகன்.
அழுத்தமான காதல் கதையை கொண்டிருந்தாலும் அதை தவிர்த்து பார்த்தால் சுவாரஸ்யமற்ற திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துகிறது.
வழக்கமான பிளாஷ்பேக், எளிதில் கணிக்கக்கூடிய கிளைமேக்ஸ் போன்ற காட்சிகள் படத்திற்கு அழுத்தம் சேர்க்கவில்லை.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
பொம்மை – உயிர் கொடுத்திருக்கலாம்.