”நான் சென்னை பையன்”- ‘விரூபாக்‌ஷா’ நாயகன் சாய் தரம் தேஜ்;

தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘விரூபாக்‌ஷா’. இந்த திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.

ஏப்ரல் 21ஆம் தேதியன்று தெலுங்கில் வெளியான இந்த திரைப்படம், வெளியான ஒரு வாரத்திற்குள் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் பி. வி. எஸ். என். பிரசாத், இயக்குநர் கார்த்திக் வர்மா, நடிகை சம்யுக்தா, படத்தின் நாயகனான சாய் தரம் தேஜ் கலந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாயகன் சாய் தரம் தேஜ் பேசுகையில்,” நான் சாதாரண சென்னை தி. நகர் பையன் தான். 91ல் அடையாறில் உள்ள பள்ளியில் தான் படித்தேன். தெலுங்கில் நாயகனாக அறிமுகமாகி, பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் தமிழில் நாயகனாக வெற்றி பெற வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். அந்தக் கனவு ‘விரூபாக்‌ஷா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது.

இந்தத் திரைப்படம் தெலுங்கில் வெற்றியை பெற்றது போல், தமிழிலும் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். தமிழில் உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பார்த்து, எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்ததற்கு ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன்.

அவர் நடித்த ‘சந்திரமுகி’ படம், கதையின் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். அதே போல் இந்த படத்திலும் கதையின் நாயகிக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு வித்தியாசமான கதையும், சுகுமாரின் விறுவிறுப்பான திரைக்கதையும் தான் காரணம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *