மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், விமல், பாலசரவணன், அனிதா சம்பத், தீபா ஷங்கர், பாண்டிராஜ், “கிச்சா” ரவி, வேல ராமமூர்த்தி, “ஆடுகளம்” நரேன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “தெய்வ மச்சான்”.
கதைப்படி,
விமலின் தங்கையான அனிதா சம்பத்தை தம்பிக்காக பெண் பார்க்க வருகிறார் ஜமீன் “ஆடுகளம்” நரேன். அவரின் தம்பி வயதோ எப்படியும் 50 இருக்கும். அதனால் வீட்டிலிருந்து விரட்டியடிக்கிறார் நாயகன் விமல்.
அதனால், ஆத்திரமடையும் “ஆடுகளம்” நரேன், விமலின் குடும்ப கௌரவத்தை குலைத்து. அனிதா சம்பத்தை தன் தம்பிக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அதை எப்படி சமாளிக்கிறார் விமல்? என்பது ஒருபுறமும்.
தன் கனவில் வரும் வேல.ராமமூர்த்தி, விமலின் வாழ்க்கையில் இருக்கும் ஒருவர் எப்போது இறக்கிறார் என்பதை தெரிவிக்கிறார். அப்படியிருக்க, யார் இறக்க போவதாக வேல.ராமமூர்த்தி தெரிவித்தார்? அந்த நபரை காப்பாற்றினாரா விமல்? என்பது மீதிக்கதை.
கமெர்சியல் ஹிட்டுக்காக சில ஆண்டுகள் காத்திருந்த விமலுக்கு இப்படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக அமைந்து, விமலுக்கு கம்பேக் கொடுத்துள்ளது. விமலின் நடிப்பும் ரியாக்ஷனும் நம்மை ரசிக்க வைத்துள்ளது.
“ஆடுகளம்” நரேன் வில்லனாக இருந்தாலும் அவர் தான் படத்தின் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரம்.
படத்தின் இரு தூண்கள் என்றால், பால சரவணன், மற்றும் அனிதா சம்பதின் கணவனாக வரும் இருவரும் தான்.
அனிதா சம்பத் நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும். கேமரா முன் அவர் வரும் காட்சி அனைத்திலும் செய்தி வாசிப்பாளராகவே வருகிறார்.
தீபா ஷங்கர், “கிச்சா” ரவி என இருவர் வரும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவை தான். குறிப்பாக, க்ளைமாக்சில் வரும் சண்டை காட்சிகள் சிறப்பு.
சிறப்பான படத்தொகுப்பில் சிறப்பு சேர்த்துள்ளார் இளையராஜா. அவரின் ஷார்ப்பான காட்ஸ் படத்திற்கு பலம்.
காட்வினின் பின்னணி சிரிக்கும் ர(ரா)கம். பாடல்கள் கேட்கும் ரகம்.
புதிய முயற்சியை தைரியமாக கையில் எடுத்துள்ளார் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமாரின். புதுமையான திரைக்கதை, நகைச்சுவையான கதை என இரண்டிலும் பாஸ் ஆகிவிட்டார் இயக்குனர் மார்டின்.
உண்மையை சொன்னால், சொதப்பலான முதல் பாதி. செம்மையான இரண்டாம் பாதி. முதல் பாதியை இயக்கிய இவரா, இரண்டாம் பாதியையும் இயக்கியுள்ளார் என்று சந்தேகமே எழும். ஆனால், எப்படியோ படத்தை முடித்துவிட்டு வரும் போது நமக்கு இருந்த ஸ்ட்ரெஸ் பாதியாக குறைந்திருக்கும்.
தெய்வ மச்சான் – சிரிக்க வச்சான்.