குடும்ப கஷ்டத்திற்காக வெளிநாடு செல்லும் ராகவா லாரன்ஸ். தனது, அம்மாவான பூர்ணிமா பாக்யராஜை தனியாக விட்டு செல்கிறார். அப்போது, அவரை சரத்குமார் தலைமையிலான கேங் கொலை செய்கிறது. அதற்கு பழி தீர்க்க வருகிறார் ராகவா லாரன்ஸ். எதற்காக சரத் குமார் கொலை செய்கிறார் என்பது தான் படத்தின் கருத்தும் கதையும்.
ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுக்கும் கதை எப்போதுமே செண்டிமெண்ட் மற்றும் குடும்பங்களுக்கான ஒரு படமாக தான் இருக்கும். அதில் ஒரு நல்ல கருத்தும் இருக்கும். அப்படி பட்ட ஒரு கருத்தை கொண்டுள்ள படமாக இருந்தாலும். அந்த கருத்தை கேட்கும் அளவிற்கான ஒரு படமாக “ருத்ரன்” இருக்கிறதா? என்று கேட்டால் கேள்வி குறி தான்.
காரணம், ஆரம்பம் முதல் ஒரு “க்ரிஞ்” திரைக்கதையுடன் தான் படம் நகர்கிறது. மேலும், படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்த பின்னும் ஒரு அரை மணி நேர கருத்தை பதிவு செய்கிறார் அறிமுக இயக்குனரான “கதிரேசன்”.
தயாரிப்பாளரான இவர், 25 ஆண்டுகள் சினிமா துறையில் பிரபலமாக வலம் வந்து. தற்போது இயக்கி தயாரித்துள்ள முதல் படம் இது.
கொரோனா காலகட்டத்தில், பல மொழி படங்களை பார்த்து. யதார்த்த சினிமாவை விரும்பவும், அதை ஏற்கும் மனமும் தமிழ் ஆடியன்ஸுக்கு வந்து விட்டது.
அப்படியான சூழ்நிலையில், 1990களில் வெளியாக வேண்டிய ஒரு படத்தை… அல்லது 2010க்கு முன்னாள் ஃபாலோ செய்து வந்த ஒரு திரைக்கதையை அமைத்து நம்மை வாட்டி எடுத்துள்ளார் இயக்குனர் கதிரேசன்.
மேலும், அதிகப்படியான சண்டை காட்சிகளை வைத்து… ஒவ்வொரு முறை ராகவா லாரன்ஸ் யாரையாவது வெட்டும் பொது, பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருப்பவரின் தலையும், நம் தலையும் பத்திரமாக உள்ளதா? என்று கவனித்துக் கொண்டே இருக்கவேண்டியுள்ளது.
நல்ல கருத்தை, தற்போதுள்ள சினிமா பாணியில் படம் எடுத்து சொன்னால் மக்கள் அதை கொண்டாடுவார்கள் என்பதை படக்குழு புரிந்துகொள்ள வேண்டும்.