எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றியை பரிசளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதற்கான பிரத்தியேகமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், நடிகர்கள் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், மணிகண்டன், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாகா, கௌசல்யா நடராஜன், உமா, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன், கலை இயக்குனர் ஸ்ரீகாந்த், படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், விநியோகஸ்தர் சக்தி வேலன், கிரியேட்டிவ் புரொடியூசர் எஸ். பி. சக்திவேல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், ” இப்படத்திற்கு முதலில் விமர்சனம் செய்து மக்களிடம் குட் நைட் படத்தை பற்றிய அபிப்பிராயத்தை உருவாக்கியதற்காக பத்திரிக்கையாளர்களான உங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக தூங்காது தற்போது வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளரை சந்தித்து, ஒரு முறை எங்களை எல்லாம் நம்பி படமெடுக்குறீர்களே… பயமில்லையா? என கேட்டேன். அதற்கு அவர்,‘ படத்தின் வெற்றி தோல்வியை கடந்து மனதிற்கு நிறைவை தரும் கதையை படமாக தயாரித்திருக்கிறேன். இந்த மகிழ்ச்சி எனக்கு படப்பிடிப்பு தளத்திலேயே கிடைத்திருக்கிறது’ என்றார். இதற்காக அவருக்கு பிரத்யேக நன்றியினை பதிவு செய்து கொள்கிறேன்.
இப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அறிமுகமான ‘வாய்மூடி பேசவும்’ என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய இசையமைப்பில் தயாரான இந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைத்து ஒரு காட்சியில் நடித்திருந்தாலும்.. அந்த காட்சியை பின்னணியிசை தான் மேம்படுத்தி, ரசிகர்களிடம் எங்களது திறமையை சேர்ப்பிக்கும்.
இயக்குநர் விநாயக் என்னுடைய மனதில் இருந்த சில விசயங்களை நுட்பமாக கண்காணித்து, எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை வழங்கினார். அவர் இதற்கு முன் ஒரு குறும்படத்திற்காக என்னை அணுகி கதை சொல்லி இருந்தார். அந்த கதை கேட்ட போது உண்மையிலேயே வியந்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக அதைவிட வலிமையான கதாபாத்திரத்தை இப்படத்தில் வழங்கினார்.
பெண்கள் மட்டுமல்ல… ஆண்களும் அழலாம். அழுவதில் பாலின கட்டுப்பாடு இல்லை. படத்தில் மோகனின் அம்மா, மோகனின் மனைவியிடம் திருமணமான பிறகு ‘ஏதாவது விசேஷம் இல்லையா?’ என கேட்பார். அதற்கு நாயகி பதிலளிப்பது பொருத்தமாக இருந்தது. இந்த இடத்தில் இயக்குநர் விநாயக்கின் எழுத்து- சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. ஏனெனில் என்னுடைய வாழ்க்கையிலும் இதனை கடந்திருக்கிறேன். இது போன்ற நல்ல வாய்ப்பை வழங்கிய இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் மணிகண்டன் பேசுகையில், ” இப்படத்தின் வெற்றி பத்திரிக்கையாளர்களாகிய உங்களின் நேர் நிலையான விமர்சனங்களுக்கு பிறகு தான் தீர்மானிக்கப்பட்டது. நல்ல திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம் என்பது மட்டும் மனநிறைவு உண்டாகாது. அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை எந்த வகையில் பெறுகிறது என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவான ‘சில்லு கருப்பட்டி’ படத்தை அதன் தரத்தை உணர்ந்து திரையரங்கில் வெளியிட்டு சாதித்தார் விநியோகஸ்தர் சக்திவேலன். அவர் இந்த திரைப்படத்திற்கும் பணியாற்றி வெற்றி பெற வைத்திருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
இயக்குநரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் நிறுத்திவிட்டு, இந்த இடத்தில் இந்த இசை இடம் பெறும் என்பார். அதன் பிறகு இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மீதமுள்ள கதையை விவரிப்பார். பிறகு இசையை நிறுத்திவிட்டு, வேறொரு காட்சியில் இருந்து கதையை சொல்லத் தொடங்குவார். இவர் கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது.
இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்த கதை மீதும், மணிகண்டன் மீதும், இந்த பட குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார். எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கை இல்லாத போது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்திற்காக இயக்குநர் விநாயக்குடன் இணைந்து திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறேன். அதன் போதே இப்படத்தின் தொகுப்பாளரான பரத் விக்கிரமனின் பங்களிப்பு இருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
எனக்கும், ரமேஷ் திலக்கிற்கும் இருக்கும் நட்பு வித்தியாசமானது. எனக்கு விஜய் சேதுபதி எப்படி ஒரு அண்ணனாக ..வழிகாட்டியாக.. இருக்கிறாரோ.. அதேபோல் தான் ரமேஷ் திலக்கும் என் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறார். அவரால்தான் இந்த படக் குழுவினர் எனக்கு அறிமுகமானார்கள். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். அந்த அனுபவம் மறக்க இயலாது.
இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு தான், இது ஒரு திரைப்படம் என்றே பலரும் ஏற்றுக் கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்” என்றார்.