நீலம் புரொடக்ஷன் பா.ரஞ்சித், அபையனாத் சிங், பியூஷ் சிங், அதிதி ஆனந்த், இனைந்து தயாரித்து, சமுத்திரக்கனி, இனியா, கவிதா பாரதி, திலீபன், மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, சுப்ரமணிய சிவா, ஹரி கிருஷ்ணன், லிசி ஆண்டனி, மகேஸ்வரி, G.M.சுந்தர் நடிப்பில், கோவிந்த் வசந்தா இசையில், பிராங்க்ளின் ஜேகப் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் ரைட்டர்.
திருச்சி அருகே இருக்கும் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் எழுத்தாளராக பணியாற்றி வரும் தங்கராஜ்(சமுத்திரக்கனி), உயர் அதிகாரிகளுக்கு உள்ளது போல் எழுத்தாளர்களுக்கும் யூனியன் வேண்டும் என வழக்கு தொடுத்து வரும் நிலையில், இந்த யூனியன் பிரச்சனையின் காரணமாக மேலிடத்திலிருந்து அதிகப்படியான அழுத்தம் வர, தங்கராஜை சென்னைக்கு பணி மாறுதல் செய்து விடுகின்றனர்.
அங்கு, கல்லூரியில் படித்து வரும் மாணவன் தேவகுமார்(ஐ) போலீஸார் கைது செய்து லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர். உயரதிகாரி (DC) இந்த மாணவன் வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேவகுமார் மீது போலீஸார் பொய்யான வழக்கை தொடுக்க ஆயத்தமாகும் வேளையில், எதேச்சயாக தங்கராஜ் கொடுத்த ப்ளானில் மாணவன் வசமாக வழக்கில் சிக்கிக் கொள்கிறார்.
எந்த ஒரு தவறும் செய்யாத பி.ஹச்.டி செய்யும் கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டதற்கு தானும் ஒரு காரணம் என நினைத்து, குற்றஉணர்ச்சியால் அவனை காப்பாற்ற நினைக்கிறார் தங்கராஜ்.
தேவ குமாரை காப்பாற்றினாரா? தேவ குமாரை கைது செய்த காரனம் என்ன? அவர் நினைத்த படி யூனியன் அமைத்தாரா? என்பது மீதி கதை.
பா.ரஞ்சித் இயக்கும் படமாக இருக்கட்டும், தயாரிக்கும் படமாக இருக்கட்டும் அது ஒரு சமுதாய மக்களுக்கான குரலாக, ஒரு சமுதாயத்தின் அரசியல் படமாகவே இருக்கும். அது போல் ரைட்டர் ஒரு சமுதாயத்தின் குரல்.
பிராங்க்ளின் ஜேகப் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர், படமும் அவரின் சாயலில் தான் இயக்கியுள்ளார், கதைக்காக அவர் செய்திருக்கும் ஆராய்ச்சி மிக வலுவாக கதையை தாங்கி பிடித்திருக்கிறது. கதையில் ஒரு புதுமையும் எதார்தத்தையும் அழகாக இயக்கியிருக்கிறார்.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவில் கதாபாத்திரத்தின் வலியையும், கதையின் சுவாரஸ்யத்தையும் காட்டியிருக்கிறார்.
இசையில் ட்ரைலரின் தாக்கம் அளவிற்கு படத்தில் இல்லை பின்னணியில் கோவிந்த் வசந்தா சிறிது ஏமாற்றினார், பாடல்கள் கச்சிதம்.
சண்டை காட்சிகள் அனைத்தும் முழுமையான எதார்த்தம் மட்டுமே, கதையின் போக்கை சிறிது உயர்த்திவிட்டார் சுதேஷ்.
ஒரு சில காட்சியில் வந்தாலும் ஸ்டைலாக, மாஸாக வந்து சென்றார் இனியா.
வழக்கம் போல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி. அவரின் தோற்றம், நடை, பாவனை அனைத்தும் ரசிக்கும் வகையில் இருந்தது.
சமுத்திரகனிக்கு மனைவிகளாக நடித்த லிசி ஆன்டனி, மகேஸ்வரி, ஹரி கிருஷ்ணனுக்கு அண்ணனாக நடித்த சுப்ரமணிய சிவா, இன்ஸ்பெக்டராக நடித்த கவிதா பாரதி, வக்கீலாக நடித்த சுந்தர், மற்றும் காவலர்களாக நடித்த திலீபன், லேமுவேல் அனைவரும் அவர்களின் பாத்திரத்தை நன்றாக செய்திருந்தனர்.
ரைட்டர் – பலர் அறியா உன்’மை’(ஐ) எழுதிய படம்