வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் “விடுதலை”. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
சூட்டிங் ஓவர், ரீலீஸ் டேட்:
கிட்ட தட்ட 1 வருடம் நடத்தப்பட்ட விடுதலை படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில். இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும் வெற்றிமாறன் முடித்துள்ளதாகவும். ஜனவரி 26ம் தேதி “விடுதலை – 1” ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன்-இளையராஜா கூட்டணி:
வெற்றிமாறன் எப்போதுமே ஜிவி பிரகாஷுடன் மட்டுமே கூட்டணி வைப்பது வழக்கம். ஆனால், வடசென்னை படத்தில் தனுஷின் விருப்பத்திற்காக சந்தோஷ் நாராயணனுடன் இணைந்தார் வெற்றிமாறன். அந்த நேரத்தில் ஜிவி பிரகாஷுக்கும் தனுஷுக்கும் இடையே ஏதோ மனவருத்தம் இருந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், தற்போது விடுதலை படத்திற்காக முதன்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி வைத்துள்ளார் வெற்றிமாறன். விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடுதலை ஆடியோ வெளியீட்டு விழா ஜனவரி 17ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
விடுதலை படத்தின் பாடல்களுடன், இளையராஜாவின் மற்ற ஹிட் பாடல்களும் அந்த மேடையில் இசைக்கப்பட உள்ளதாம். விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, சூரி உட்பட விடுதலை படக்குழுவினருடன் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.