பாடும் நிலா படுத்து உறங்குகிறது; எஸ்.பி.பி மறைவிற்கு இந்திய ஹஜ் தலைவர் இரங்கல்

இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்து வெற்றிக் கொடி நாட்டிய நல்ல நண்பர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். உலகின் பல மொழிகளில் தன் இசை மொழியால், வசீகர குரல் கொண்டு வசியம் செய்தவர். மொழிகளை, இனங்களைக் கடந்து இசையால் அனைத்து இதயங்களையும் ஒன்றிணைத்த ஒரு இதயம் இன்று மௌன கீதம் இசைக்கிறது. குழந்தைச் சிரிப்பும், குதூகலமும் காண்போரை எல்லாம் ஈர்த்து இழுக்கும் வல்லமை கொண்ட இசை வாலிபனை இழந்து நிற்கிறோம்.

25 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பயணித்து அனைத்து விஷேசங்களிலும் பங்கேற்றவர். அவரது இழப்பால் இசையை மட்டுமல்ல நல்ல நட்பையும் இழந்து நிற்கிறேன். பாடும் நிலா இன்று படுத்து உறங்குகிறது, பாட்டுடைத்தலைவன் பாடல் மறந்து இன்னொரு உலகில் பயணிக்கிறார். இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்பது எஸ்பிபியின் வெறும் குரலாக மட்டுமல்ல, குறளாகவும் எதிரொலிக்கிறது. இந்த உலகம் உள்ளவரை, இசை உள்ளவரை ராஜ தீபம் ஏற்றி வைத்த எஸ்பிபி எனும் தீபம் அணைவதில்லை. அவரை இழந்து வாடும் ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

இப்படிக்கு,
பிரசிடெண்ட் அபூபக்கர்,
தலைவர்,
இந்திய ஹஜ் அசோசியேஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *