சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பார் வசூலில் இருந்து கரூர் டீம் ஒதுங்கியது. இதற்கு மாறாக கரூர் டீமை மிஞ்சும் வகையில் அடாவடி மாமூல் வசூலில் திருச்சி டீம் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
திமுக ஆட்சியில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டவுடன் பார் மாமுல் வசூலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது.
இதற்கென்று கரூர் டீம் என்று பெயரிடப்பட்டு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பார்களில் மாமூல் வசூல் செய்யப்பட்டது. குறிப்பாக டாஸ்மாக் நிறுவனத்திற்கு பார் உரிமையாளர்கள் மாதந்தோறும் செலுத்தும் டிடி அடிப்படையில் மாமூல் வசூல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பார் உரிமையாளர்கள் செலுத்தும் டிடி தொகையிலிருந்து 80 சதவீத தொகை மாமூலாக கரூர் டீம் வசூலித்து வந்தது.
இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பார் உரிமையாளர்களிடமும் வசூல் நடைபெற்றது மாமுல் கொடுக்காத பார் உரிமையாளர்களுக்கு பல கட்டங்களில் கரூர் டீம் நெருக்கடி கொடுத்தது. குறிப்பாக பார் உரிமையை வேறு நபருக்கு மாற்றி விடுவோம் என்று மிரட்டி வசூலித்தனர். கரூர் டீம் வசூலில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை தலைமைக்கு கொடுத்து வந்துள்ளனர்.
கரூர் டீம் வசூல் இல்லாமல் திருச்சி தெற்கு மாவட்டத்தில் கூடுதலாக ஒரு டீம் வசூலில் இறங்கியது. டாஸ்மாக் மதுபான கடைக்கு ஏற்றவாறு பார் உரிமையாளர்களிடம் டிடி தொகையிலிருந்து 70% தொகையை மாதந்தோறும் வசூலித்து வந்துள்ளனர். இவர்களும் பார் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தே வசூலித்து வந்தனர். பார் கைநழுவி போய்விடும் என்ற அச்சம் காரணமாக பார் உரிமையாளர்களும் பெரும் சிரமப்பட்டு மாதாந்திர மாமூல் திருச்சி, கரூர் என 2 டீமுக்கும் கொடுத்து வந்தனர்.
இந்த வகையில் டிடி கட்டணத்தில் இருந்து 150 சதவீதம் மாமூலாக மட்டும் பார் உரிமையாளர்கள் கொடுத்து வந்தனர். திருச்சி டீம் வசூலித்தது போல் ஒரு சில மாவட்டங்களில் கரூர் டீம் அல்லாத உள்ளூர் டீம் மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இலாக்கா மாற்றப்பட்டவுடன் கரூர் டீம் கலைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தலைமையில் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு உத்தரவு பறந்துள்ளது. அதில் கரூர் டீம் வசூலித்து கொடுத்த பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு பார் உரிமையாளர்களிடமிருந்து டிடி கட்டண அடிப்படையில் 70 சதவீதம் வசூலிக்க வேண்டும். அதில் 30 சதவீதம் உள்ளூர் கட்சி செலவுக்கு வைத்துக் கொண்டு, 40 சதவீதத்தை தலைமைக்கு செலுத்தி விட வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர வேறு எந்தவித மாமூல் வசூலிலும் ஈடுபடக்கூடாது என்று தலைமை கராராக தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு நேர் மாறாக திருச்சி டீம் பார் உரிமையாளர்களை அழைத்து மிரட்டியுள்ளனர். தலைமை உத்தரவிட்ட 70% மாமூல் மட்டுமின்றி ஏற்கனவே செலுத்தப்பட்டு வந்த உள்ளூர் மாமூலையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஒவ்வொரு டாஸ்மாக் மதுபான கடை நம்பரை கூறி இவ்வளவு தொகை மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்று அந்த கூட்டத்தில் திருச்சி டீம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் டிடி தொகையிலிருந்து 170 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதாவது 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மாமூல் செலுத்த வேண்டிய நிலை திருச்சி தெற்கு மாவட்டத்தில் செயல்படும் பார் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரின் உதவியாளர் சேகர் அருண் உள்ளிட்டோர் இந்த திருச்சி டீமை அமைத்து பார் உரிமையாளர்களை மிரட்டி நெருக்கடி கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் கூறும் மாமூல் தொகையை செலுத்தாத பார் உரிமையாளர்களிடம் இருந்து பார் உரிமையை பறிக்க திருச்சி டீம் காய்களை நகர்த்தி வருகிறது.
இதன் மூலம் திருச்சி மாநகரில் மட்டும் 4 பார்களை திருச்சி டீம் தனது உறவினர் ஒருவர் மூலம் எடுத்து நடத்த தொடங்கி விட்டனர். புறநகரில் எத்தனை கடைகள் இப்படி பினாமி மூலம் நடத்தப்படுகிறது என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. பார் உரிமையாளர்கள் மாமூல் தரவேண்டும் இல்லையென்றால் நாங்களே பார் நடத்துவோம் என்ற ரீதியில் திருச்சி டீம் செயல்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசூல் மாவட்ட பொறுப்பில் உள்ள அமைச்சருக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தலைமை உத்தரவை மீறி எப்படி அதிக மாமுல் வசூலில் திருச்சி டீம் தைரியமாக ஈடுபடுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.