கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் புஷ்கர் – காயத்ரி கதையில் பிரம்மா, அனு சரண் இயக்கி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் தொடர் தான் “சுழல்”.
சாம்பலூர் என்ற மலைக் கிராமத்தில் 9 நாட்கள் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது. முதலாம் நாள் திருவிழாவில் அந்த ஊரில் இரு பெரும் சம்பவங்கள் நிகழ்கின்றன. சிமெண்ட் ஃபேக்டரி ஒன்று தீக்கிரையாகிறது. அதே நேரத்தில் அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் யூனியன் லீடர் சண்முகத்தின் (பார்த்திபன்) மகள் நிலா காணாமல் போகிறாள்.
காணாமல் போன மகள் கிடைத்தாளா? அவளுக்கு என்ன ஆனது? எதனால் சிமெண்ட் ஃபேக்டரி தீ பிடித்து எரிந்தது? என்ற பல கேள்விகளுக்கான விடை தான் இத்தொடரின் மீதிக்கதை…
போலீஸ் அதிகாரி சக்கரையாக கதிர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இருக்கும் பழைய லவ் டிராக், தன் தங்கைக்கு என்ன ஆனது என்பதை தேடும் ஆர்வம், சந்தேகிக்கும் நபர்கள் எல்லாம் கெட்டவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் என பல விஷயங்கள் சந்தேகிக்க வேண்டாம் என்று சொன்னாலும், கடைசியில் சொல்லும் கிளைமேக்ஸ் யாரையும் கண்மூடித் தனமாக நம்பி விடக் கூடாது என்பதை கனமாக மனதில் பதியவைக்கிறது.
பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி என பல முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு அத்தனையுமே படத்திற்கு பலம் தான். முகேஷ்வரனின் ஒளிப்பதிவில் அந்த மலை கிராமத்தின் அழகு. ஹெலிகேம் ஷாட்களை பயன்படுத்திய விதம். அந்த மயான கொள்ளையை காட்சிப்படுத்திய விதம். அதன் பின்னணி இசையில் பயமுறுத்தும் சாம் சி.எஸ் என பல கலைகள் இந்த வெப்சீரிஸில் உள்ளன. அனைத்திற்கும் மேலாக, ஒரு கட்டத்தில் இவர் தான் வில்லன் என சந்தேகிக்கப்பட்டாலும், மீண்டும் அவரை மறக்கடிக்க வைக்கும் திரைக்கதை மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பெண் பிள்ளைகள் அவர்களின் சிறுவயதில் அனுபவிக்கும் பாலியல் ரீதியான இன்னல்களை பேசும் வகையில் சமூக அக்கறையுடன் இக்கதையை எழுதியதற்கு புஷ்கர்-காயத்ரி அவர்களுக்கு தனி பாராட்டுகள்.
சுழல் – பெண்களை பெற்ற பெற்றோர்களுக்கான தொடர்.