சரத் குமார், சரத் பாபு, அசோக் செல்வன், நிகிலா விமல் மற்றும் சிலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “போர் தொழில்”. இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
கதைப்படி,
திருச்சியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் ஒரு பெண் கொடூரமாக கொல்லப்பட்டு கிடக்கிறாள். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் உள்ளூர் போலீஸாரால் இந்த வழக்கை சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக உருவாக்கும் ஸ்பெஷல் டீமில் அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரி எஸ்.பி. லோக்நாத்திடம் (சரத்குமார்) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அவரது டீமில் புதிதாக இணைந்துள்ள அனுபவமே இல்லாமல் படிப்பு அறிவை மட்டுமே கொண்டுள்ள பிரகாஷ் (அசோக் செல்வன்) மற்றும் அனுபவம் வாய்ந்த லோக்நாத் இருவரும் எப்படி அந்த சீரியல் கில்லரை கண்டு பிடிக்கின்றனர் என்பது படத்தின் கதைக்களம்.
சரத் குமார் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும். ரப் & டப் அதிகாரியாக, ஒரு காட்சியில் கூட சிரிக்காத ஒருவராக மிடுக்கான தோற்றத்தில், அசோக் செல்வனையும் நம்மையும் மிரட்டியுள்ளார் சரத் குமார்.
தெகிடி படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து க்ரைம் த்ரில்லர் பாணியில் நடித்துள்ளார் அசோக் செல்வன். இம்முறை, ஒரு போலீஸ் அதிகாரியாக விரைவில் பல விஷயங்களை புரிந்துக் கொள்ளும் ஒருவராக நடித்துள்ளார் அசோக் செல்வன். பெரிதாக ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் துப்பாக்கியை வைத்து விளையாடும் ஒரு சிறிய காட்சி. அசோக் செல்வனுக்கு பெரிய மாஸ் கொடுத்துள்ளது.
நிகிலா விமலுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்றாலும், வந்து சென்ற அனைத்து காட்சிகளிலும் சிறப்பு சேர்த்துள்ளார்.
தனது முதல் படத்தை க்ரைம் த்ரில்லர் பாணியில் அமைத்து, எதிர் பார்க்காத பல ட்விஸ்ட் காட்சிகளை வைத்து, இருக்கை நுனியில் அமரச் செய்து நம்மை வியக்க வைத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ்.
சீரியஸான ஒரு காட்சியில், பதை பதைக்கும் அளவிற்கு ஒரு உணர்வை கொடுத்துவிட்டு அதை காமெடியாக மாற்றி, அதையும் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ்.
க்ரைம் த்ரில்லர், சைக்கோ கதை என்றாலே நம் மனதில் வருவது “ராட்சசன்” படம் தான். அந்த படத்திற்கு இணையான ஒரு படம் தான் “போர் தொழில்” என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு க்ரைம் த்ரில்லர் படத்திற்கு இசைக்கு பெரும் பங்கு உண்டு. அதனை உணர்ந்து, திகிலான இசையமைத்து படத்திற்கு பலமாக அமைந்துள்ளார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.