சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலரின் நடிப்பில் பத்ரி இயக்கத்தில் அவனி டெலி மீடியா நிறுவனம் சார்பாக குஷ்பூ சுந்தர் தயரிப்பில் உருவான படம் “பட்டாம்பூச்சி”.
80 காலகட்டத்தில் நகரும் இக்கதை, விருமாண்டி படத்தில் வரும் காட்சி போன்று ஜெயிலில் ரிப்போர்ட்டர் பேட்டி எடுக்கும் வகையில் துவங்குகிறது. அதன்பின், தான் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஜெய் ரிப்போர்ட்டரிடம் பேட்டி கொடுக்கிறார். அப்போது விலங்கு தொடரில் வரும் கிச்சா போன்று நான் வேறு 7 கொலைகள் செய்துள்ளேன். சில வருடங்களாக போலீஸ் தேடிவரும் சைக்கோ கொலையாளி நான் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து. வழக்கை முற்றிலுமாக திசைதிருப்புகிறார் ஜெய்.
அதன்பின், சைக்கோ கொலை வழக்கை விசாரிக்கும் பணியில் நியமிக்கப் படுகிறார் சுந்தர் சி. சில பல ஏமாற்று வேலைகள் செய்து வழக்கில் இருந்து விடுதலையாகிறார் ஜெய்.
அவர் செய்த கொலைகளை தக்க ஆதாரத்துடன் நிரூபித்தாரா சுந்தர் சி? அவருடன் இருந்தவர்களை காப்பாற்றினாரா? ஜெய்யை என்ன செய்தார்? என்பது மீதிக்கதை…
முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதி அதற்கு எதிராகவே இருக்கும். இக்கதையை 80, 90 களில் வெளியான படங்களிலே நாங்கள் பார்த்துவிட்டோம் என்று நாம் சொல்லிவிட கூடாது என்று நினைத்து 80களில் படத்தை இயக்கியுள்ளர் இயக்குனர் என்றும் சொல்லலாம்.
காட்சிக்குக் காட்சி விருமாண்டி, விஸ்வரூபம், விலங்கு, சைக்கோ, அந்நியன், கடாரம் கொண்டான், மெர்சல் ஆகிய பல படங்களை இப்படம் நினைவு படுத்தும்.
சில ட்விஸ்ட்கள், சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருந்தால் படம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
சுந்தர் சி மிக அளவான நடிப்பை கொடுத்தும், தேவைப்பட்ட இடங்களில் படத்தை சிறிது தூக்கியும் சிறப்பான வேலையை செய்திருக்கிறார்.
வழக்கமாக இல்லமால் புதிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெய்க்கு தனி பாராட்டுக்க்ள். சைக்கோ கதாபாத்திரத்திற்கு அவர் எதிர்கொள்ளும் வியாதிக்கும் ஏற்ற ஒரு நடிகனாக நடித்துள்ளார்.
உடன் நடித்த மற்ற நடிகர்களும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பித்துவிட்டனர்.
ஒளிப்பதிவில் கிருஷ்ணசுவாமி அத்தனை காட்சிகளையும் அழகாக படமாக்கியுள்ளார்.
இசை நவநீத் சுந்தர் பாராட்டும் வகையறா.
முதல் பாதியை சிறப்பாக உருவாக்கிய இயக்குனர் பத்ரி இரண்டாம் பாதியில் திரைக்கதையில் கோட்டைவிட்டது தான் சிறு கவலை.
பட்டாம்பூச்சி – பல படங்களை நினைவூட்டும் திரைப்படம்.