பனி விழும் இரவு – திரை விமர்சனம் 3/5

பனி விழும் இரவு – திரை விமர்சனம

அமைதியான மலைப்பகுதிக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்தான மர்மம்!

கொடைக்கானல் என்றாலே காதல், குளிர், பனிமூட்டம், அழகான இயற்கைக் காட்சிகள் என்று நம் மனதில் ஒரு பிம்பம் இருக்கும். ஆனால் அதே பனிமூட்டத்துக்குள் ஒரு மர்மமும், பல கேள்விகளும் ஒளிந்திருந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் வந்திருக்கிறது ‘பனி விழும் இரவு’.

திருமணத்திற்கு முன்பான புகைப்படப் படப்பிடிப்பிற்காக கொடைக்கானலுக்குச் செல்லும் ஜேகே (அருண் கார்த்தி), தனது வருங்கால மனைவி சபிதா (எனாக்ஷி கங்குலி) காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இன்ஸ்பெக்டர் மதிமாறன் (சேரன்ராஜ்) விசாரணையைத் தொடங்குகிறார். ஆனால், விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் ஆரம்பத்தில் நாம் நினைத்துப் பார்க்காத பல சந்தேகங்களை உருவாக்குகின்றன.

ஜேகே கதாபாத்திரத்தில் அருண் கார்த்தி, பதற்றம், பயம், குழப்பம் என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எனாக்ஷி கங்குலி தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் சேரன்ராஜ் அனுபவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கருப்பு நம்பியார் விசாரணைக் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். சரவணசக்தி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். செ.ரா. ராஜேஷ், கஜராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதைக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

ஜெயக்குமார் தங்கவேலின் ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான பலம். கொடைக்கானலின் அழகை மட்டுமல்லாமல், அந்த அழகுக்குள் இருக்கும் ஒருவித அச்சத்தையும் காட்சிகள் வழியாகக் கடத்தியிருக்கிறார்.

சதா முருகனின் பின்னணி இசை மர்மக் காட்சிகளுக்கு ஓரளவு வலு சேர்க்கிறது. எம்.எஸ். செல்வா மற்றும் சி.ஆர். புவனேஷின் படத்தொகுப்பு கதையின் முடிச்சுகளைத் திறப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இயக்குநர் செ.ரா. ராஜேஷ் வழக்கமான பேய், பிசாசு கதையாக இல்லாமல், ஒரு காணாமல் போன பெண்ணைச் சுற்றி உருவாகும் சந்தேகங்களையும் காவல்துறை விசாரணையையும் மையமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

குறிப்பாக, ஒரே சம்பவத்தை வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாகப் பார்க்கும்போது உண்மை எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தகவல்களும் முந்தைய புரிதலை மாற்றுகின்றன. கதையின் பிற்பகுதியில் நவீன தொழில்நுட்பம் மற்றும் மனித மனம் தொடர்பான அம்சங்களை இணைத்திருப்பது வித்தியாசமான முயற்சி.

இருப்பினும், சில இடங்களில் விசாரணையின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம். குறிப்பாக முதல் பாதியில் சுருக்கமான காட்சியமைப்பு இருந்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

ஒரு மனிதர் சொல்லும் கதையை அப்படியே நம்பிவிட முடியுமா? ஒரு சம்பவத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் ஒரே உண்மையைத்தான் சொல்வார்களா? இந்த இரண்டு கேள்விகளையும் பார்வையாளர்களிடம் விட்டுவிட்டு நகர்கிறது படம்.

பனிமூட்டம் நிறைந்த கொடைக்கானலைப் பின்னணியாகக் கொண்டு, பார்வையாளர்களின் யூகங்களுடன் விளையாடும் ஒரு மர்மத் திரைப்படமாக ‘பனி விழும் இரவு’ அமைந்திருக்கிறது.

மர்மப் படங்களை விரும்புபவர்கள் பார்க்கலாம்.