கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார் – நம்ப முடியாத உண்மை!

கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார் – நம்ப முடியாத உண்மை!

திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருருந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் அந்த வரிகளில் தான் கோடிக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தி இருந்தார். அதேபோல இப்போது அமைச்சர் ஜெயக்குமார் தன் ராயபுரம் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வீடுதோறும் அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் இதோ!

என்னுடலின் உயிர்மூச்சாய் என்னை இயக்கிக் கொண்டிருக்கும் ராயபுரம் தொகுதி சொந்தங்களே!

1991 முதல் இதே தொகுதியில் உங்கள் பெருவாரியான ஆதரவோடு சட்டமன்ற உறுப்பினராக இப்போது வரை இருந்து கொண்டிருக்கிறேன். இதோ இந்த முறை ஏழாவது தடவையாக புரட்சித்தலைவர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் நல்லாசியுடன் உங்கள் வேட்பாளராக உங்களை தேடி வருகிறேன்.

நினைவிருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் எத்தனை தேர்தல் வந்தபோதும் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்க நான் வருகிறேன். யோசித்துப் பாருங்கள்,இராயபுரம் மக்களின் எல்லா சுக துக்கங்களிலும் பங்கெடுத்திருக்கிறேன். உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் என்னால் முடிந்த வரை அனைத்தையும் நிறைவேற்றி தந்திருக்கிறேன்.

தமிழகத்திலேயே தண்ணீர் தேங்காத ஒரு தொகுதியாக இதை மாற்றி இருக்கிறேன். மருத்துவ வசதி, குடிநீர் வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதி, சாலை வசதி, மின் வசதி, பள்ளிக்கூடங்கள், வேலைவாய்ப்பு மீன்பிடி தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள்,நிவாரணம் என எதுவாக இருந்தாலும் என்றைக்கும் உங்களுக்கு அதை செய்து தருவதில் நான் தயக்கம் காட்டியதில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். பெரும் கனவான மெட்ரோ ரயிலை வடசென்னைக்கு கொண்டு வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மற்ற கட்சி எம்எல்ஏக்களை போல தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி நான் வந்திருக்கிறேனா? உங்கள் வீட்டின் ஒருவனாக உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்திலும் நான் பங்கேற்று இருக்கிறேன். இதையெல்லாம் சொல்லிக் காட்டுவது எனக்கு விருப்பமில்லாத ஒன்று, ஏனென்றால் செய்ததை சொல்லிக் காட்டுவது பழக்கமல்ல… இருந்தாலும் நினைவு படுத்துவதற்காகவே இதை பகிர்ந்துகொள்கிறேன்.

எப்போதும் உங்கள் மனதில் எனக்கு இடமுண்டு என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன். கொரோனா காலத்தில் எதிர்க்கட்சிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த நேரத்தில் நான் ஒரு நாள் கூட வீட்டில் இல்லாமல் ஒவ்வொரு நாளும் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். அரசுப் பணம் மட்டுமல்லாமல் என் சொந்தப் பணத்தில் மருந்துகள்,மளிகை,அரிசி,அம்மா உணவத்தில் 3 முட்டை, வாழைப்பழத்துடன் கூடிய இரண்டு மாதங்களுக்கு தேவையான உணவுகள் என உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன்.

உங்களால் தான் நான், உங்களுக்காகத் தான் நான்… இப்போதும் ,எப்போதும் உங்களில் ஒருவனாய் வாழவே இந்த ஜெயக்குமார் ஆசைப்படுகிறேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆட்காட்டி விரலால் என்னை அடையாளம் காட்டுகிற போது உங்களுக்காய் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் என்னுடைய குரல். எப்போதும் போலவே இரட்டை இலைச் சின்னத்தில் அனைவரும் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, உங்களில் ஒருவன், உங்களுக்காகவே ஒருவன் டி.ஜெயக்குமார், அமைச்சர்.

இப்படி அச்சிடப்பட்ட கடிதத்தில் தன் கைப்பட அனைத்து பிரதிகளிலும் கையொப்பமிட்டு வீடுதோறும் வழங்கியிருக்கிறார் தேர்தல் களத்தில் ராயபுரம் தொகுதியில் இந்த கடிதம் மிக உருக்கமாக பரவலாகவும் ஒரு பேசு பொருளாக மாறி இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *