குழலி விமர்சனம் – (4/5)

 

“காக்கா முட்டை” விக்னேஷ் மற்றும் ஆரா நடிப்பில், கலையரசன் இயக்க டி.எம்.உதயகுமார் இசையமைத்திருக்கும் படம் குழலி. இப்படம் 16 விருதுகளை குவித்துள்ளது.

மன்னர் காலத்தில் தீண்டாமை என்பது இல்லை. இந்தப் பிரிவினர் இந்த வேலை செய்வார்கள் என்று மட்டுமே இருந்தது. ஆனால், ஆங்கிலேயன் நம் நாட்டை ஆட்சி செய்யும் போதுதான் இந்த சாதி பிரிவினையையும் தீண்டாமையின் கொண்டு வந்தான். அதன்பின் இன்றுவரை தீண்டாமையும் ஜாதியையும் ஒழிக பலரும் போராடி வருகிறார்கள். ஆனால், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட எதார்த்தமான கேள்விகளோடும், குழலியின் காதலோடும் இப்படம் வெளியாகியுள்ளது.

கதைப்படி,

நாயகனுக்கும் நாயகிக்கும் பள்ளி பருவத்தில் இருந்த நட்பு காதலாக மலர்கிறது. ஆனால், இருவருக்கும் மருத்துவராகி தங்களுடைய கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பது காதலை விட முதன்மையாக இருக்கிறது.

இவர்களின் காதலை விட கல்விக்கே ஜாதி பெரும் தடையாக இருக்கிறது. அது எப்படி என்பதை சொல்ல வருவதே படத்தின் மீதி கதை.

கிராமத்தின் ஓடைகள், சாரல் மழை, பச்சை போர்த்திய வயல்வெளிகள், தோட்டங்கள் என்று அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அவற்றின் உரிமையாளர்கள் அங்கே வேலை செய்வதற்காக தாழ்த்தப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தும் நடைமுறையில் கோவில் விழாக்கள் மற்றும் திருமண உறவுகளில் அவ்வப்போது வெடித்துக் கொண்டிருக்கிறது பகை. இவை அனைத்தையும் நேர்த்தியாக கொடுத்து முதலாவது வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

காதலை வழக்கம் போல் அல்லாமல், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அழகான பள்ளிப்பருவ காதலைக் கொடுத்து அடுத்த வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

வாலிப வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் ‘காக்கா முட்டை ‘ விக்னேஷுக்கு இந்தப் படம் சிறப்பான வாய்ப்புத் திறந்து விட்டிருக்கிறது. வயலில் ஆரா மயக்கம் போட்டு விழுந்ததைப் பார்த்ததும் தங்கள் கிராம கட்டுப்பாட்டுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அவளைத் தோளில் தாங்கி வைத்தியரிடம் வண்டியில் கொண்டு வரும் வேகத்தில் திகைக்க வைக்கிறார்.

பருவம் கொப்பளிக்கும் பள்ளி இறுதி மாணவியாக வளம் வரும் ஆராவும் அந்தப் பாத்திரத்தில் கன கட்சிதமாக பொருந்தியுள்ளார். அப்பாவித்தனமான முகமும், வெள்ளந்திச் சிரிப்புமே, அழகியாக அவரைக் காட்டுகிறது. கள்ளமில்லாத முகமும், களங்கமில்லாத மனமுமாக வரும் ஆராவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆங்காங்கே அவரின் குரல் உடைவதால், அடுத்த படம் முதல் டப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடுவார் என்பது கருத்து.

விக்னேஷின் அப்பாவாக வரும் அலெக்ஸும் ஆராவின் தாயாக வரும் செந்தியும் கொடுத்த பாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துவிட்டனர்.

பிற பாத்திரங்களில் வரும் யாவரும் புதுமுகங்களே ஆனாலும் அவர்களது இயல்பான நடிப்பு நம்மை அந்த கிராமத்துக்குள்ளேயே அழைத்துச் செல்கிறது.

விக்னேஷின் நண்பர்களாக வரும் இளைஞர்களும் அற்புதமாக செய்திருக்கிறார்கள். அதுவும் உயரத்தில் மாற்றுத்திறன் கொண்ட அந்த இளைஞர் வரும் காட்சிகள் எல்லாம் அவரது குறைவில்லாத நகைச்சுவைத் திறனை எடுத்துக் காட்டுகின்றன. அவருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

சமீரின் ஒளிப்பதிவும், டி.எம்.உதயகுமாரின் இசையும் படத்திற்கு முதன் முக்கிய பலம், இசையை ரசிப்பதா? ஒளிப்பதிவை கண்டு வியப்பதா? என்று காட்சிக்கு காட்சி குழப்பம். இவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் அங்கீகாரம் காத்திருக்கிறது என்பது உறுதி.

பதைபதைக்கும் கிளைமாக்ஸ், அப்படி நடந்து விடக்கூடாது என்ற உணர்வை தந்தது.

எதிர்மறையான கருத்துகளுடனும், வேறொரு முடிவையும் இப்படத்தின் கிளைமாக்ஸாக வைத்திருக்கலாமோ? என்று எண்ணம் வந்தாலும், அப்படி இருந்தால் இது படமாக இருந்திருக்கும். உண்மையான உணர்வை நமக்கு தந்திருக்காது என்பது நிதர்சனம்.

அதேபோல் தங்களுக்குள் இருக்கும் காதலை விட கல்வியே பெரிது என்பதை விக்னேஷும் ஆராவும் தங்கள் பெற்றோரிடமோ, ஊர் உலகத்திடமோ, நம்மிடமே கூட இன்னும் அழுத்தமாக தெரிவித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

எல்லா சாதிய கொடுமைகளும் நடந்து கொண்டிருந்தும் பள்ளிகளில் இன்னும் சாதிகள் இல்லையடி பாப்பா என்று ஆசிரியை சொல்லிக் கொடுக்க அதை கோரசாக மாணவர்களும் சொல்லிக் கொண்டிருப்பது எத்தனை கேலிக்குரியது என்று விளக்கி இருப்பது இயக்குனரின் குரலாக ஒலிக்கிறது.

மொத்தத்தில் இத்தனை விருதுகளைக் குவித்ததில் வியப்பில்லை.

குழலி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *