’கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இயக்குநர் வினோத்ராஜ்,

எனக்கு ஆதரவு கொடுத்து வரும் எல்லோருக்குமே நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணனால்தான் படம் இவ்வளவு தூரம் வந்தது. என்னுடைய டீம் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சூரி,

“நான் பல படங்களில் நடித்து பாராட்டுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால், இந்தப் படத்திற்கு கிடைத்த பாராட்டு எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்னுடைய அம்மா, அப்பா செய்த புண்ணியம்தான் இப்படியான நல்ல இயக்குநர்களையும் ரசிகர்களையும் எனக்குக் கொடுத்திருக்கிறது. ‘கூழாங்கல்’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த இயக்குநரது படத்திலேயே நான் கதாநாயகன் ஆகியிருப்பதற்கு இறைவனுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக அமெரிக்காவுக்கு செல்வதற்காக விசாவுக்காக நான் காத்திருந்த ஒரு வாரத்தில் பயந்து விட்டேன். இந்தந்த கேள்விகள் கேட்பார்கள் இப்படி பதில் சொல்ல வேண்டும் என எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், எனக்கு எல்லாமே பதட்டத்தில் மறந்து விட்டது. அதுபோலவே, இத்தனை இயக்குநர்கள் ‘கொட்டுக்காளி’ படத்தைப் பாத்தபோது எனக்கு பதட்டமாகி விட்டது. இப்படி ஒரு படத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் வினோத்ராஜ், தம்பி சிவகார்த்திகேயனுக்கு நன்றி. அன்னா பென் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

“நான் முதலில் ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். அதைப் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருந்தது. நான் அதிகம் உலக சினிமாக்கள் பார்த்ததில்லை. அறிமுக இயக்குநர்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள் ராட்டர்டம் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் தேர்வாகும். முன்பு கிறிஸ்டோபர் நோலன் தனது படத்திற்காக இந்த விழாவில் விருது வாங்கி இருக்கிறார். அந்த விருதை ‘கூழாங்கல்’ படத்திற்காக வினோத்ராஜ் வாங்கினார் என கேள்விப்பட்ட போது எனக்கு புல்லரித்தது. வினோத்ராஜை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவருடைய அடுத்தப் படத்தை நான் தயாரிப்பதாக சொன்னேன். இந்தப் படம் வெற்றியடைந்து நான் முதலீடு செய்ததுபோக எனக்கு லாபம் வந்தால், அதை முதலில் எடுத்து இயக்குநர் வினோத்தின் அடுத்தப் படத்திற்கு முன்பணமாகக் கொடுத்துவிடுவேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் போன்ற இரண்டு இயக்குநர்களுக்கு படம் செய்ய முன்பணம் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கைக் கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதைப் பார்க்கிறேன்.

நான் காலேஜ் படிக்கும்போது தான் அதிக சினிமா பார்த்தேன். அப்போது பாலாஜி சக்திவேல், கெளதம் மேனன் எனப் பலரது படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். இவர்களுக்கான ட்ரிபியூட்டாக ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்க்கிறேன். இந்தப் படத்திற்கு இசை இல்லை என்று வினோத்ராஜ் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. சூரி, அன்னா படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ’விடுதலை’ படத்தை விட ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரியின் நடிப்பு நிச்சயம் ஒரு மார்க் அதிகம் வாங்கும் என நம்புகிறேன். ’விடுதலை2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ என இந்த வருடம் சூரிக்கு ரொம்பவே ஸ்பெஷல். பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றிமாறன் என அனைவரும் இந்தப் படத்தை இவ்வளவு பாராட்டி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *