‘களத்தில் சந்திப்போம்’ திரை விமர்சனம்

பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜீவாவும், அருள்நிதியும் சிறுவயது முதல் நண்பர்கள். கபடி போட்டியில் எதிரெதிர் அணியில் தான் எப்போதும் விளையாடுவார்கள். ஏனென்றால், இருவருக்குள் தோற்றுக் கொள்வோம். ஆனால், இருவரும் சேர்ந்து வேறு யாரிடமும் தோற்க மாட்டோம் என்பார்கள். ரேணுகா அவருடைய அண்ணன் பெண் மஞ்சிமாவை தன் மகன் அருள்நிதிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால், ஜீவா விளையாட்டாய் அருள்நிதியைப் பற்றி தவறாக பேச, மஞ்சிமாவை கொடுக்க மறுத்து வேறு ஒருவருடன் கல்யாணத்தை முடிவு செய்கிறார் வேலா ராமமூர்த்தி. தன் தவறை சரி செய்ய மஞ்சிமாவை தூக்கி வருகிறார் ஜீவா. ஆனால், திடீர் திருப்பமாக அருள்நிதி மஞ்சிமாவை திருமணம் செய்ய மறுத்து விடுகிறார். இதனால், வேலா ராமமூர்த்தி மற்றும் மஞ்சிமாவின் ஒட்டுமொத்த கோபமும் ஜீவாவின் மீது விழுகிறது. இந்நிலையில், ஜீவாவின் அப்பா இளவரசு பரம்பரை வீட்டை மீட்க அருள்நிதியை அனுப்புகிறார். இடையில் ஜீவா செய்த குழப்பத்தால் வீடு கை நழுவி போகிறது. இதனால், இளவரசு ஜீவா மீதும், அருள்நிதி மீதும் கோபம் கொள்கிறார். இறுதியில் மஞ்சிமா யாரைத் திருமணம் செய்து கொள்கிறார்? வீட்டை மீட்க ஜீவா என்ன முயற்சி எடுக்கிறார்? அருள்நிதி மஞ்சிமாவை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? பகைவர்களான இரு நண்பர்களும் இறுதியில் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக் கதை.

‘கோ’ படத்திற்குப் பிறகு சிறப்பாக நடித்திருக்கிறார் ஜீவா. தன்னுடைய தவறால் தன் உயிருக்கு உயிரான நண்பனின் திருமணம் நின்று விட்டதை நினைத்து அவருக்காக வேலா ராமமூர்த்தியிடம் பேசும் காட்சி, அருள்நிதியிடம் மஞ்சிமாவை ஏன் திருமணம் செய்ய மறுத்ததற்கான காரணம் தெரிந்ததும் நண்பனுக்காக வேதனைப்படும் காட்சியிலும், மஞ்சிமாவின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார். அருள்நிதி சண்டைக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் பட்டைய கிளப்புகிறார். குறிப்பாக டப்பிங் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். மஞ்சிமா அமைதியான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவருகிறார். சின்னத்திரை மூலம் ஆண்களையும் சீரியல் பக்கம் இழுத்து தனக்கென ரசிகர்களைப் பெற்றுள்ள பிரியா பவானி ஷங்கர் இப்படத்திலும் தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களைக் கவருகிறார். ‘ரோபோ’ ஷங்கர், ராதாரவி மற்றும் பாலசரவணன் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். இளவரசு, ரேணுகா இருவரும் வழக்கம்போல சிறப்பாக நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அருமை. இயக்குநர் என்.ராஜசேகர் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். கபடி போட்டி காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. காதல் காட்சிகள், நட்பு காட்சிகள் எதுவாக இருந்தாலும் சரி ஒரு காட்சிக்கு என்ன தேவையோ அதை அளவோடு இயக்கியிருக்கிறார் என்.ராஜசேகர். திரைக்கதையை யதார்த்தமாக கூறியிருக்கிறார். சண்டைப்பயிற்சியும், படத்தொகுப்பும் நேர்த்தியாக உள்ளது.

 

‘களத்தில் சந்திப்போம்’ – வெற்றி களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *