இயக்குனர் கெளதம் மேனன் இயக்க வருண், கிருஷ்ணா, ராஹீ நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ஜோஷ்வா. எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய கார்த்திக் இசையமைத்துள்ளார்.
இப்படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்திருக்கிறார்.
ஜோஷ்வாவாக வருண் காண்ட்ராக்ட் கில்லர், அதாவது பணத்திற்காக பெரும் முதலாளிகளை ஷார்ப்பாக கொலை செய்வதே அவரது வேலை.
நாயகி ராஹீயைக் கண்டதும் அவர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. தனது காதலை சொல்லும் தருணத்தில் தான் என்ன வேலை செய்து வருகிறேன் என்று ராஹீயிடம் கூறுகிறார் வருண். இனி அந்த பணிக்கு செல்லப்போவதில்லை என்றும் கூறி விடுகிறார்.
இதனை ஏற்க மறுத்த ராஹீ வருணின் காதலை ஏற்க மறுக்கிறார். வருடங்கள் உருண்டோட, கொலை செய்யும் வேலையை விட்டுவிட்டு பெரும் பணக்காரர்களுக்கு செக்யூரிட்டி கார்ட்’ ஆக பணிக்கு செல்கிறார் வருண்.
அமெரிக்காவில் வக்கீலாக இருக்கும் ராஹீயை கொல்லத் துடிக்கிறது சில கும்பல். அவரை காப்பாற்றுமாரு வருணுக்கு ஒப்பந்தம் வருகிறது.
இதனை ஏற்றுக் கொண்ட வருண், அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறார். இறுதியில் வருணின் காதலை ராஹீ ஏற்றுக் கொண்டாரா.? ராஹீயை கொல்ல நினைத்தவர்களை வருண் பழி தீர்த்தாரா .?? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக வருண், மிடுக்கான உடல் கட்டோடு ஜோஷ்வா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி முழு நீள ஆக்ஷன் படத்திற்கு தேவையான அனைத்து எனர்ஜியோடும் முழுமையாக களமிறங்கி ஆடியிருக்கிறார் வருண்.
இப்படியெல்லாம் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்ட முடியுமா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அசத்தியிருக்கிறார் வருண். அதிலும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் பிரம்மிக்க வைத்துவிட்டார்.
கெளதம் மேனனின் படங்களில் நாயகியின் சின்ன சின்ன க்யூட்னஸ் ரியாக்ஷன்ஸ் பெரிதாகவே பேசப்படும். ஆனால், இந்த படத்தில் அது முழுவதுமாக இல்லாதது கெளதம் மேனனின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.
இருந்தாலும் வழக்கம் போல் தனக்கான முத்திரை பதிக்கும் ஷாட்’களை வைத்து ரசிகர்களுக்கு நாயகியின் முகத்தை மனதில் பதிய வைத்துவிட்டார் கெளதம்.
படத்தின் மிகப்பெரும் பலமே ஆக்ஷன் காட்சிகள் தான். ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளையும் அதிரடியாக கொடுத்திருக்கிறார் ஸ்டண்ட் இயக்குனர்.
எதிரி யார் என்பதை முடிவு செய்யும் இடத்தை இன்னும் தெளிவாக கூறியிருந்திருக்கலாம்.
திரைக்கதை வேகமாக நகர்வதால், எந்த இடத்திலும் லாஜிக் பார்க்க வேண்டிய தேவை இருக்கவில்லை.
கார்த்திக்கின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக கடந்து சென்றாலும், பின்னணி இசையை மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறது. ஒரு சில வசனங்கள் கவனம் ஈர்க்கிறது.
கெளதம் மேனனின் மேஜிக் இப்படத்தில் சற்று மிஸ் ஆன ஃபீலிங்…..
ஜோஷ்வா – சண்டை சாகசம்