8 வருட போராட்டத்திற்கு பதில் சொல்லும் விதமாக தரமான கதையோடு களம் இறங்கி இருக்கிறார் யுவராஜ் தயாளன். விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இறுகப்பற்று படத்தின் முழு விமர்சனத்தை இங்கு காண்போம்.
கல்யாணம் பண்ணுனாலே பிரச்சனை தான் என்ற வசனத்தை நாம் பல வீடுகளில் கேட்டிருப்போம். அதேபோன்று காதல், திருமணம் என்றாலே ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதற்கெல்லாம் விவாகரத்து, பிரேக் அப் என்று போனால் என்ன ஆவது. அப்படி ஒரு உளவியல் ரீதியான பிரச்சனைக்கு அழகாக தீர்வு சொல்வது தான் இப்படத்தின் கதை.
தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சனைக்கு உளவியல் ரீதியாக தீர்வு சொல்பவராக இருக்கும் ஷ்ரத்தாவிடம் விதார்த்-அபர்னதி, ஸ்ரீ-சானியா ஜோடி கவுன்சிலிங் பெற வருகின்றனர். அதில் விதார்த் தன் மனைவி குண்டாக இருக்கிறார், வாய் துர்நாற்றம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளை சொல்லி விவாகரத்து கேட்கிறார்.
அதே போன்று ஸ்ரீ தன் மனைவி தன்னிடம் காதலோடு இருப்பதில்லை என்ற பிரச்சனையை சொல்கிறார். இதற்கெல்லாம் ஆலோசனை சொல்லும் ஷ்ரத்தா தன் கணவர் விக்ரம் பிரபு உடன் சண்டையே போடாமல் வாழ்கிறார். இதுவே அவர்களுக்குள் ஒரு பிரச்சனையாக வெடிக்கிறது. இப்படி மூன்று தம்பதிகளும் சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை எதார்த்தம் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
Also read: சர்வ சாதாரணமாகும் விவாகரத்து, பிரேக் அப்.. இறுகப்பற்று ப்ரிவ்யூ ஷோ எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
படத்தைப் பார்க்கும்போதே அட நம்ம வாழ்க்கையிலும் இப்படி எல்லாம் இருக்குதே என்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் இன்றைய நாகரிக வாழ்வோடு ஒத்துப் போகும் படி இருக்கிறது. இதுவே படத்திற்கான மிகப்பெரும் பலமாக இருக்கிறது. அதை அடுத்து மூன்று ஹீரோக்களும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
அவர்களுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் ஹீரோயின்களும் அழகான உணர்வை ரசிகர்களுக்குள் கடத்துகின்றனர். பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும் பாடல்கள் சுமார் ரகம் தான். கதையில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திருமணமான மற்றும் காதலிக்கும் ஜோடிகளுக்கு இடையே இருக்கும் சிறு தவறுகளையும், அது எந்த அளவுக்கு விரிசலை உருவாக்குகிறது என்பதையும் அழகாக சொல்லி இருக்கிறது இப்படம். அந்த வகையில் இறுகப்பற்று மனதை இறுகப்பற்றி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.