ஆஹாவின் ‘இரை’ – பிரபலங்களின் பகிர்வு

ஆஹா ஆரம்பம், தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக தமிழில் பிரமாண்டமாக துவங்கியிருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் முதல் சிறப்பு வெளியீடாக ‘இரை’ தொடர் வெளியாகிறது.

Radaan Mediawoks நிறுவனம் சார்பில் திருமதி ராதிகா சரத்குமார் தயாரிக்க, இந்த இணைய தொடரில் நடிகர் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ராஜேஷ் M செல்வா இந்த இணையதொடரினை இயக்கியுள்ளார். ரசிகர்களை இருக்கையின் முனையில் கட்டிப்போடும், பரபர திருப்பங்கள் நிறைந்த க்ரைம் திரில்லராக இந்த இணைய தொடர் உருவாகியுள்ளது.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…
தயாரிப்பாளர் ராதிகா மேடமுக்கு நானும் ஒரு படம் இயக்கியுள்ளேன். ஜக்குபாய் அப்போதே திருட்டு விசிடியாக ஓடிடியில் தான் வெளியானது. ஆனால் இந்த தொடரை பணம் கொடுத்து வாங்கி ஒளிபரப்புவது மகிழ்ச்சி. ஓடிடியில் கதைகள் நிறைய ஒளிப்பரப்ப வேண்டுமெனில் சின்ன பட்ஜெட் கதைகள் தேவைப்படும். அது சினிமாவுக்கு நல்லது. கமல் சார் படங்களில் வேலைபார்த்த போதே ராஜேஷை தெரியும், இந்த தொடர் மிக விறுவிறுப்பாக இருந்தது. மிக நல்ல திரைக்கதை, நல்ல முறையில் இயக்கியுள்ளார். சரத்குமார் மிகச்சிறந்த உழைப்பாளி, அவருடன் நிறைய வேலை பார்த்திருக்கிறேன். பெரிய பழுவேட்டையரின் வேட்டை துவங்கியது போல் தெரிகிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் பூஜா சரத்குமார் பேசியதாவது…
நான் நல்ல முறையில் வேலை பார்த்திருக்கிறேன் என நம்புகிறேன், இயக்குநர் ராஜேஷ்க்கு நிறைய தலைவலி தந்துள்ளேன். ராதிகா ஆண்டிக்கு நன்றி. அப்பா நன்றாக நடித்துள்ளார். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் ராஜேஷ் M செல்வா பேசியதாவது…
கமல் சாருக்கு முதல் நன்றி. நான் இயக்கிய தொடர் நேரிடையாக ஓடிடியில் வெளிவருகிறது. ராடனின் முதல் வெப் தொடரை நான் இயக்கும் வாய்ப்பு வந்தது, கமல் சாரிடம் சொன்னபோது, உடனே போய் செய்யுங்கள் என்றார். சரத் சார் நடிக்கிறார் என்ற போது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. சரத் சார் ஹிரோவாக இல்லாமல் கதாப்பாத்திரமாக கலக்கியுள்ளார். ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள், எல்லோரையும் ரொம்பவும் கஷ்டப்படுத்தியுள்ளேன். ஆனால் தொடர் நன்றாக வந்துள்ளது. பேர்ட்ஸ் ஆஃப் பிரே படிக்கவே ரொம்ப கடினமாக இருந்த புக், உண்மையை அப்படியே சொன்ன புக், அதை தழுவி எடுப்பது கடினமாக இருந்தது எங்களால் முடிந்த அளவு உண்மையாக உழைத்துள்ளோம். இரை உங்களை கவரும் நன்றி.

தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் பேசியதாவது…
இந்த கமலா தியேட்டரில் நிறைய விழாக்களில் கலந்துகொண்டுள்ளேன். இப்போது மீண்டும் இங்கே, நிறைய பயணத்திற்கு பிறகு இப்போது ஓடிடியில் முதல் தயாரிப்பாக என் கணவர் நடிப்பில் உருவாகி இரை வந்திருப்பது மகிழ்ச்சி. ஆஹா நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. இந்தகதையை படித்த போது ரொம்பவும் மனதை பாதித்தது. இதை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. இதனை சரியான முறையில் திரையில் எடுத்து வந்தததற்காக ராஜேஷ், மனோஜ் இருவருக்கும் நன்றி. எங்கள் நிறுவனத்தில் இதை தயாரித்தது பெருமை. ராஜேஷ் மிக மிக அற்புதமாக இந்த தொடரை இயக்கியுள்ளார். இதன் வெற்றிக்கு இதில் நடித்த அனைவரும் தான் காரணம், அல்லு அர்விந்த் குறிப்பிட்டு பாராட்டினார். எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். ஆஹாவில் முதல் முறையாக ஒரு க்ரைம் தொடர். தமிழில் இது போல் வந்திருக்காது. என்பதை உறுதியாக சொல்கிறேன். பூஜா சரத்குமார் நான் டிரெய்ன் பண்றேன் கூட்டி வாருங்கள் என்றேன் பூஜா அவரது வேலையை அற்புதமாக செய்தார். என் கணவர் அவரை கன்வின்ஸ் செய்வது கடினம் ஆனால் அவர் கன்வின்ஸ் ஆகிவிட்டால் அவர் உழைப்பு பிரமிப்பாக இருக்கும், இரையில் ஒரு ஹீரோவாக இல்லாமல் பாத்திரமாக அட்டகாசமாக நடித்துள்ளார், உடல்நலம் நல்லா இல்லாத ஒரு நேரத்தில் நடித்தார் அவருக்கு நன்றி. எல்லோரும் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

நடிகர் சரத்குமார் பேசியதாவது…
இரை அந்த புக்கை படிக்கும்போது அதை கையில் இருந்து கீழே இறக்க முடியவில்லை, அப்படி மிக அழுத்தமாக, மனதை பாதிப்பதாக இருந்தது. அதே போல் இந்த தொடரையும் நீங்கள் இடைவேளை இல்லாமல் பார்ப்பீர்கள், இந்த தொடரை எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. நிறைய தடங்கல்களுக்கிடையில் தான் இந்த தொடரை எடுத்தோம். இந்த தொடரில் எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். அதற்கு காரணம் ராஜேஷ் தான், அற்புதமாக எடுத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எடுத்து சொல்லும் ஒரு தொடர் தான் இது. இந்த தொடர் இப்போது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. என் மனைவி என்னை பற்றி இன்று நிறைய பாராட்டி விட்டார். தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி.

“இரை” இணைய தொடருக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி கலை இயக்கம் செய்ய. சில்வா மாஸ்டர் சண்டைப்பயிற்சிகளையும், ஷான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *