லைகா தயாரிப்பில் கமல், ஷங்கர் இணைந்துள்ள படம் இந்தியன் 2.
இந்த பட சூட்டிங் தற்போது சென்னை அருகே நடந்து வருகிறது.
இதற்காக செட் அமைக்கும் பணிகளும் நடந்தேறி வருகிறது.
அப்போது கிரேன் அறுந்து விழுந்தத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நசரத் பேட்டை போலீசார், கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அஜாக்கிரதையால் மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கிரேன் ஆபரேட்டர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார். இந்த நிலையில், தயாரிப்பாளரும் கிருஷ்ணாவின் உறவினருமான வெங்கட் சுபா விபத்து பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நடிகர் கமல், லைகா நிறுவனம் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகர்கள் தனுஷ், ஜிவி. பிரகாஷ் ஆகியோரும் தங்கல் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இறந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்திய பின் கமல் பேசியதாவது…
”நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். நான்கு நொடிகள் முன்பு வரை நானும் அங்கு தான் இருந்தேன்.
படப்பிடிப்பில் நடந்த இந்த விபத்தை என் குடும்பத்தில் நடந்ததாகக் கருதுகிறேன்.
சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும்.
கடைநிலை ஊழியர்களுக்கும் கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.
ரூ. 100 கோடி 200 கோடி என்று மார்தட்டுக்கொள்ளும் நம்மால் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளிக்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
Indian 2 shooting Accident Actor Kamal helps 1 crore