*’தேவரா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில் பேசியதாவது, “இந்தப் படத்தில் பணிபுரிந்ததது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் எதிர்பார்த்தபடி நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி”.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, “’ரோபோ’, ‘லிங்கா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் ‘தேவரா’ மூலம் தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஜூனியர் என்.டி.ஆர். சிறப்பாக நடித்திருக்கிறார். தண்ணீருக்கு மேலும், கீழும் இவ்வளவு நீண்ட படம் வந்திருக்குமா என்பது சந்தேகம். அவ்வளவு சிறப்பான கதையை சிவா கொடுத்திருக்கிறார். அனிருத் இசை அற்புதம். இந்தப் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் ஜான்விக்கு வாழ்த்துக்கள்”.
நடிகர் கலையரசன், “இவ்வளவு பெரிய படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்ருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா சாருக்கு நன்றி. தெலுங்கு படம் என்ற பயத்தில்தான் போனேன். ஆனால், எல்லோரும் அங்கு தமிழில்தான் பேசி கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்”.
இசையமைப்பாளர் அனிருத், “இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பயம் என்ற விஷயத்தை வேறொரு கோணத்தில் சிவா சார் இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். தெலுங்கில் எனக்கு இது நான்காவது படம். இது ஒரு புது உலகமாக பார்வையாளர்களுக்கு இருக்கும். படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே எவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். இந்த உழைப்பை எல்லோரும் விரும்பியே கொடுத்திருக்கிறார்கள். படம் நிச்சயம் பேசப்படும் என்ற நம்பிக்கை இசையமைப்பாளராக எனக்கு இருக்கிறது. அமெரிக்காவில் முந்திய விற்பனையிலேயே படம் நல்ல கலெக்ஷன் பெற்றிருப்பதாக கேள்விப்பட்டேன். அதே வெற்றி தெலங்கானாவில் மட்டுமல்லாது, தமிழிலும் மற்ற மொழிகளிலும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமாகும் ஜான்விக்கும் வாழ்த்துக்கள்”.
நடிகை ஜான்வி, “சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னை என்றாலே அம்மாவுடன் இருந்த பல ஞாபகங்கள் இருக்கு. அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அந்த அளவுக்கு கடினமான உழைப்பையும் கொடுப்பேன். ‘தேவரா’ எனக்கு ஸ்பெஷல் படம். உங்களுக்கும் பிடிக்கும்”.
இயக்குநர் கொரட்டலா சிவா, “’தேவரா’ படத்தை ஸ்பெஷலாக மாற்றிக் கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி”.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். “சென்னையில்தான் நான் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாது. ’தேவரா’ எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. படம் சிறப்பாக வர உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் ஸ்பெஷலானதாக அமையும். திரையரங்கில் நிச்சயம் பாருங்கள். ஜான்வியின் சிறப்பான நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும். தமிழ் இயக்குநர்களில் வெற்றிமாறன் சாருடன் ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்றார்.