விவேகத்தால் வென்றார் – காட் ஃபாதர் திரைவிமர்சனம்
காட் ஃபாதர் இது தான் படத்தின் பெயர். அப்படியென்றால், கடவுளே அப்பாவாக தோன்றுகிறாரா?
இல்லை.
செல்வாக்குள்ள ரவுடி லாலுக்கு 13 வருடங்களுக்குப் பிறகு மகன் பிறக்கிறான். அவனை காப்பாற்ற வேண்டுமென்றால் அவன் வயது உள்ள இன்னொரு குழந்தையை உறுப்பை எடுத்து வைக்க வேண்டும் என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. தனது அடியாட்களை கொண்டு, காவல் துறையின் துணையுடன் அந்தக் குழந்தையைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். அந்தக் குழந்தை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நட்டி என்கிற நட்ராஜ் மற்றும் அனன்யாவின் குழந்தை அஸ்வந்த். இந்த விஷயம் அறிந்த நட்டி ரவுடிகளிடமிருந்து தன் மகனைக் காப்பாற்ற துடிக்கிறார். ரவுடி அப்பாவிற்கும், நடுத்தர வர்க்க அப்பாவிற்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமே காட் ஃபாதர்.
நட்டி இதுவரை செய்திடாத முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நட்டியின் முன்னைய படங்களை மனதில் வைத்துக் கொண்டு சென்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் அந்தளவுக்கு பக்குவமான, விவேகமான மனிதனாக திரையில் தோன்றியிருக்கிறார். தன் மகனின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு தந்தையாக; அல்ல! அல்ல! காட் ஃபாதராகவே இருக்கிறார்.
தன் குழந்தைக்காக இன்னொரு குழந்தையின் உயிரை எடுக்க துணியும் போது, லாலின் வில்லத்தனம் நெஞ்சத்தைப் பதற வைக்கிறது. இருப்பினும், தனது முக அலங்காரத்தில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனன்யா திரையில் தோன்றியிருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் அளவு மீறாமல், அம்மாவாக தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தன்னால் இயன்ற அளவு போராடியிருக்கிறார்.
மாஸ்டர் அஷ்வந்த் ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல’ இயக்குனர் கூறியதைக் கேட்டு அப்படியே நடித்திருக்கிறார்.
மகாபாரதத்தின் சகுனி சூதாட்டத்தில் பாண்டவர்களை வென்றது வீரத்தினால் அன்றி, விவேகத்தினால் மட்டுமே! இந்த ஒற்றை வரியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இப்படத்தில் நதியின் கதாபாத்திரத்தை விவேகத்தால் வெற்றிபெறச் செய்து தானும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர்.
படத்தின் 15 நிமிடங்களுக்கு பிறகு கதை ஆரம்பிக்கிறது தொடங்குகிறது. ஆனால் இறுதிவரை இருக்கை நுனியில் அமர செய்கிறது.
ஒரு சிறந்த இயக்குநருக்கு ஒரு திரைப்படத்தை விறுவிறுப்பாக கூறுவதற்கு பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த தேவையில்லை; ஒரே ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தாலே போதும் என்பது திரைப்படத்தைப் பார்க்கும் போது புரிகிறது.
அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்கள் அவரவர்கள் கற்பனைக்கு ஏற்ப யூகித்துக் கொண்டாலும், காட்சிகளை யதார்த்தமான திரைக்கதையை கொண்டு சாமர்த்தியமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
நவீன் ரவீந்திரனின் இசை திரைக்கதையின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு இசைக்கும் விறுவிறுப்பிற்கும் துணையாக இருக்கிறது.
மொத்தத்தில் சிங்கமாகவே இருந்தாலும் எலி வலைக்குள் செல்ல முன்னெச்சரிக்கை அவசியம் வேண்டும் என்ற கருத்தை கூறுகிறது இப்படம்.
– ஹேமா