தமிழ் சினிமாவில் குருவி, ஆதவன் போன்ற வெற்றிப்படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வெற்றி பெற்றவர் தயாரிப்பாளர் உதயநிதி.
அவர் அதன் பின் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து மனிதன், நிமிர், சைக்கோ என வித்யாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து அதிலும் வெற்றியடைந்தார். தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்துவருகிறார். நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வந்தது. தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது.
ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதி தயாரித்து நடிக்கும் இப்படத்திற்கு மாமன்னன் என்று பெயரிட்டுள்ளனர். இசைப்புயல் AR ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில் உதயநிதியுடன், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடிக்கின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் கதைக்களம் கிராமத்து பின்னணியில் சமூகம் சார்ந்த விஷயங்களை மையமாக வைத்து இருக்கலாம் என தகவல் வந்தவண்ணம் உள்ளது.
மேலும் தற்போது உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக அரசியலில் சுறுசுறுப்பாக இயங்குவதால் அவர் நடித்தால் இப்படத்திற்கு எடுப்பாக இருக்கும் என்று படக்குழு கருதி இக்கதையை உருவாக்கியதாக தகவல்கள் வந்துள்ளது. மாமன்னன் படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படத்தின் மீது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.