எல்லோரும் காதலியுங்கள் – அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை

உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் ஒரே நாள் ஒரே தினம் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில்,நாட்களில், மணி நேரங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல்! ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் உயிரோடு இருக்கிறது…

இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்கள் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்கு புதிய அடையாளம் கொடுத்துள்ளார். ஆம் தன் பேரனை தோளில் சுமந்து ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அளித்த பதில் தான் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

“பிப்ரவரி 14 என்பதை பலரும் காதலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அப்படின்னு நினைச்சிட்டு இருக்காங்க… அதுவல்ல அதற்கான அர்த்தம்.காதல் அப்படிங்கறது பொதுவானது உயிர்ப்பானது. மனுசங்க அடுத்த மனுஷங்க மேல காட்டுற அன்பும்,பரிவும், பாசமும், கருணையும் எல்லாமே காதலின் வடிவம் தான். அதனால காதலர் தினம் அப்படிங்கறத நாம தனிப்படுத்தி வேறுபடுத்திக் காட்ட முடியாது. எல்லா மனுஷங்களும் எல்லார்கிட்டயும் அன்பு காட்டி அனுசரிச்சு போனா இந்த உலகம் இன்னும் ரொம்ப அழகா ரம்மியமாக இருக்கும். மனுஷங்க இத புரிஞ்சுக்கணும்,அதுவும் குழந்தைகள் மேல நாம காட்டுற பாசம் அலாதியானது. உலகமே தெரியாத அந்த குழந்தைகள் நம்மள பார்த்து சிரிக்கிறது, மடியில் தவழ்ந்து விளையாடுறது தனி சுகம்… அதுமாதிரியான அன்புதான் காதலின் உண்மையான வடிவம். அதனாலதான் என் பேரனை தோளில் சுமந்தபடி எடுத்த போட்டோ இது, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று முடித்துக் கொண்டார்.

காதல் காதல் காதல் இந்த மூன்று எழுத்தால் தான் இந்த உலகம் இன்னமும் சுழன்று கொண்டிருக்கிறது. பூமிப்பந்தை அன்பும், காதலும் கொண்டு பொடி நடையாக நடந்து வருவோம். நம்மைச் சுற்றியுள்ள கவலைகள் யாவையும் கடந்து செல்வோம். ஆதலால் காதல் செய்வீர்..!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *