இப்பட டிரைலர் வெளியான போதே தமிழகத்தின் மூலை முடுக்குகளில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார்.
அப்படி என்ன கதை..?
கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார் நாயகன் ரிச்சர்ட் (ருத்ர பிரபாகர்). இவரை சந்திக்க யார் வந்தாலும் சந்திக்க மறுக்கிறார்.
இவர் மீது உள்ள புகார் என்னவென்றால் இவர் மனைவி மற்றும் அவரது தங்கையை ஆணவக் கொலை செய்துள்ளார் என்பதுதான்.
6 மாதம் சிறையிலிருக்கும் ஜாமீனில் வெளிவரும் ரிச்சர்ட் தன்னை ஜெயிலுக்கு அனுப்பியவர்களை தேடி அலைகிறார். சென்னையில் தன் நண்பன் உதவியுடன் சைக்கிளில் கேன் டீ வைத்து விற்பனை செய்கிறார்.
அத்துடன் ரிஜிஸ்டர் ஆபிசில் வருபவர்களை நோட்டமிடுகிறார். அதன்படி ஒவ்வொருவரையும் போட்டுத் தள்ளுகிறார்.
இவரை போலீஸ் வலை வீசி தேடுகிறது.
ஆனால் தன் மனைவி திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றும் வரை போராடுவேன் என ஓடிக்கொண்டே இருக்கிறது.
அதன்பின்னர் என்ன ஆனது? திரௌபதியின் சபதம் என்ன? ரிஜீஸ்டர் ஆபிசில் இவருக்கு என்ன வேலை? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடித்தவர்கள் எப்படி..?
அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட்தான் படத்தின் நாயகன். சிலம்பம் கற்றுக் கொடுக்கும் மாஸ்டர், சிறைக்கைதி, பாசமுள்ள கணவன், வீரத்தமிழன் என தன் நடிப்பை மெருக்கேற்றியிருக்கிறார்.
திரௌபதி என்ற கேரக்டருக்கு ஏற்ப தீப்பிழம்பாக வெடிக்கிறார் நாயகி ஷீலா. இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும்.
இவரின் தங்கையாக வரும் லட்சுமி கேரக்டரும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தன் தங்கை இவர் வழி நடத்தும் விதம் அருமை.
ஜேஎஸ்கே கோபி மற்றும் போலீஸ் நிசாந்த் இருவரின் கேரக்டர்களில் இன்னும் அழுத்தமில்லை. இவரை போலீஸ் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஒரு ரவுடிக்கான லுக்கிலேயே இருக்கிறார்.
டாக்குமெண்டரி பெண் டைரக்டர் ரானியா, லேடீ டாக்டர் மற்றும் திரௌபதி ஆகியோர் அமைத்துள்ள கூட்டணி சூப்பர். இது பெண்களுக்கே உரித்தான ஒற்றுமையை உணர்த்தியுள்ளது. இவர்கள் எடுக்கும் முடிவுதான் படத்தின் ஆணிவேர்.
இவர்களுடன் வக்கீல் கருணாஸ், அம்பானி சங்கர், வக்கீல் கர்ணன் மற்றும் அரசியல்வாதி வில்லன் ஆகியோரின் கேரக்டர்கள் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
டெக்னீசியன்கள்..
இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. அவை பெரிதாக கவரவில்லை. பின்னணி இசை ஓகே ரகம்.
ஒளிப்பதிவாளர் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். எடிட்டர் படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் இந்த திரௌபதி கவனம் பெற்றிருப்பாள்.
க்ளைமாக்சில் வரும் அந்த கோர்ட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
என்னதான் ஒருவர் மீது நியாயம் இருந்தாலும் அரசு தரப்பு வக்கீல் சட்ட ஓட்டைகளை மறைக்க அவர் வாதாடும் காட்சிகள் அரசின் இயலாமையை காட்டுகிறது.
படத்தின் முக்கிமான வசனங்கள்…
நிர்வாணம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அவமானம் தான் என திரௌபதி கொடுக்கும் தீர்ப்பு சூப்பர்.
கொத்து வேலைக்கு கூட ஆட்கள் கிடைக்காமல் போனதற்கு ஒரே காரணம் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம்தான். ஆனால் அதிலும் அலட்சியம் காட்டுபவர்களை வீடியோ எடுத்து திரௌபதி யூடிப்பில் போடுவது எல்லாம் வேற லெவல்.
என்னைக்கு பெண்கள் எல்லாம் சானிடரி பேட் வைத்துக் கொள்ள ஆரம்பித்தாமே அப்போதே குழந்தை எப்போது பிறக்க வேண்டும் என்பதை கார்ப்பரேட்காரன் முடிவு செய்துவிடுகிறான் என்று லேடீ டாக்டர் பேசும் வசனம் பெண்களின் உணர்வை பிரதிபலிக்கிறது.
வீட்டுல நாய் வளர்க்குறோம்… மீன் வளர்க்க்குறோம்.. ஆனா யாரும் மரம் வளர்க்க வரது இல்ல… ஒரு குடம் தண்ணீர் ஒரு ரூபாய்தான். ஆனால் ஒரு வாட்டர் கேன் 30 ரூபாய். தண்ணீரை காசாகும் முதலாளி வர்க்கதை சாடுவதாகட்டும்.. இப்படி பல விஷயங்களை அலசியிருக்கிறார்.
முக்கியமாக லஞ்சப் பணத்தில் திளைத்திருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களால் எந்த மாதிரியான சமூக சீர்கெட்டை நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறார்.
ஒரு சாதியினரை உயர்த்தி காட்ட மற்ற சாதியினர் மட்டம் தட்டியிருப்பதும் தேவையில்லாத ஒன்று. ஆங்காங்கே காட்டப்படும் அரசியல் கட்சிகளின் குறியீடுகளையும் தவிர்த்திருக்லாம்.
பெண்களுக்கு எதிரான வசனங்கள் தேவையில்லாத ஒன்றுதான்.
பணக்கார பெண்ணை மயக்கி திருமணம் செய்தால் லைஃப் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணத்தை இளைஞர்களுக்கு விதைத்துள்ளனர். மேலும் ஒரு வேளை அவர்கள் ஒப்புக் கொள்ளாத சமயத்தில் அவர்களின் பதிவை எடுத்து போலியான திருமண சான்றிதழை தயார் செய்யும் கும்பலையும் அடையாளம் காட்டியுள்ளனர். இது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
மணப்பெண்ணே இல்லாமல், போலியாக நடத்தப்படும் திருமணங்கள், லஞ்சம் கொடுத்தால் உடனே கிடைக்கும் சான்றிதழ் என அனைத்தையும் அப்பட்டமாக காட்டியிருப்பதும் அருமை.
இனி ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்கும் போது அவை சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை நீதிபதி பிறப்பிப்பது இது போன்ற போலி திருமணங்களை தடுக்கும்.
நாடக காதலை காட்டியிருப்பது பெற்றோர்களுக்கும் பெண்களுக்கும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
ஓடிய காதலும்.. ஓட்டை சட்டமும்.. தான் இந்த திரௌபதி
Draupathi tamil movie review rating