இயக்குநர் ஜெ. ஜெஸ்வினி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர், ஆஹா தமிழ் தளத்தில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
அஷ்வின் குமார் மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரில், குரு லக்ஷ்மணன், பாடினி குமார், ஸ்ரீதுகிருஷ்ணன், ப்ரீத்தி ஷர்மா, செளந்தர்யா, ரவிவர்மா, பிர்லா போஸ், விஸ்வா மித்ரன், சுரேந்தர் விஜே, ரஞ்சனா, சுலைமான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதைச் சுருக்கம்
தூள்பேட் எனும் நகரில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு புதிய அசிஸ்டெண்ட் கமிஷ்னராக பொறுப்பேற்க வருகிறார் அஷ்வின் குமார். பதவியேற்கும் முன், அவர் இரவு நேரத்தில் ஒரு தனியார் லாட்ஜில் தங்குகிறார்.
இந்நகரில் காவல்துறை கான்ஸ்டபிளாக பணியாற்றும் பாடினி குமார் என்பவருக்கு, சில விசித்திரமான கனவுகள் தொடர்ந்து தோன்றுகின்றன. அந்த கனவுகளில் அவர் காணும் சம்பவங்கள், அப்படியே நிஜ வாழ்க்கையில் நடக்கப்போவதாக மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, ஒரே இரவில் மூன்று தலைகள் விழும் எனும் முன்னறிவிப்பு அவரை மனதளவில் பெரிதும் கலங்கச் செய்கிறது.
அந்த இரவு முடிவதற்குள், நகரின் பிரபல ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது தலை துண்டிக்கப்படுகிறது. தொடர்ந்து, குப்பைமேட்டில் ஒரு பெண்ணின் பாதி எரிந்த தலை, பின்னர் மீன் ஏற்றிச் செல்லும் வண்டியிலிருந்து விழும் பெட்டியில் மற்றொரு இளம் பெண்ணின் தலை என அடுத்தடுத்து கொடூரமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
பாடினி குமார் கண்ட கனவுகள் உண்மையாகி விட்ட நிலையில், மறுநாள் தூள்பேட் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கிறார் அசிஸ்டெண்ட் கமிஷ்னர் அஷ்வின்.
இந்த கொலைகள் யார் செய்தது?
ஏன் இப்படியான தலைகள் மட்டும் குறிவைக்கப்பட்டன?
இந்த மர்மத்தின் பின்னணி என்ன?
என்பதையெல்லாம் தனது தனித்துவமான விசாரணை பாணியில் ஆராய்கிறார் அஷ்வின். இறுதியில் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததா என்பதே தொடரின் மீதிக் கதை.
திரைக்கதை & இயக்கம்
இரண்டு எபிசோடுகள் வெளியான நிலையில், நடிகர் தேர்வு மிகவும் கவனமாகவும், கதைக்கு ஏற்றவாறும் செய்யப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், தூள்பேட் நகரம் குறித்த உயரதிகாரியின் அறிமுக பில்ட்-அப், காவல் நிலையத்தில் நடைபெறும் பூஜை ஆகியவை, தொடரின் ஆரம்பத்திலேயே பார்வையாளரை கதைக்குள் இழுத்துச் செல்கின்றன.
ஒவ்வொரு காட்சியும் நகர நகர, அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இயக்குநர், முதல் எபிசோடிலிருந்தே சஸ்பென்ஸை கட்டி எழுப்பி, பார்வையாளரை சீட்டின் நுனியில் அமர வைத்துவிடுகிறார்.
நடிப்பு & தொழில்நுட்ப அம்சங்கள்
அஷ்வின் குமார் கதாபாத்திரத்திற்கு வழங்கப்பட்ட பில்ட்-அப் காட்சிகள், அவரது உடல் மொழி, பார்வை, மற்றும் மெனக்கெடல்கள் ஆகியவை கதையின் நம்பகத்தன்மையை உயர்த்துகின்றன.
அவரது ஃப்ளாஷ்பேக் காட்சியில் மறைக்கப்பட்டிருக்கும் சஸ்பென்ஸ், தொடரின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.
பாடினி குமார் தனது பதற்றமான ரியாக்ஷன்களால் கதைக்கு வேகத்தை சேர்க்கிறார். இன்ஸ்பெக்டரின் போல்ட்னஸ், காதல் கோணம், ரவுடி கும்பல் என ஒவ்வொரு எபிசோடிலும் புதிய திருப்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஒளிப்பதிவாளர், மூன்று தலைகள் இடம்பெறும் காட்சிகளை காட்சிப்படுத்திய விதத்தில் தனது திறமையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
பின்னணி இசையும், காதல் பாடலும் கதையின் சூழலுக்கு ஏற்றவாறு அமைந்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது. இருப்பினும், வசனங்களில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில்
ஆஹா தமிழில் வெளியாகியுள்ள இந்த வெப் தொடர், கிரைம் – மிஸ்டரி ரசிகர்களுக்கு நிச்சயம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் தொடங்கியுள்ளது.
இன்னும் வெளிக்குவராத பல முடிச்சுகள், வரும் எபிசோடுகளில் எவ்வாறு அவிழ்க்கப்படப் போகின்றன என்பதே தொடரின் பெரிய எதிர்பார்ப்பு.



