அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக எங்கும் பயணம் செய்யலாம். எனவே, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தான் அரசு நகரப் பேருந்துகளின் உரிமையாளர்கள் என சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் தருணை ஆதரித்து, பி.நாட்டாமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்துக்கு வழங்க வேண்டி ஜிஎஸ்டி நிதியை பிரதமர் அளிக்க மறுத்து வருகிறார். ஜிஎஸ்டி மூலம் தமிழகத்தில் இருந்து மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றுள்ளது.
ஆனால், நிதி நெருக்கடியால் தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதியை பிரதமர் மோடி வழங்காமல், அவர் தான் பயணம் செய்ய ரூ.8 ஆயிரம் கோடியில் இரண்டு சொகுசு விமானங்களை வாங்கியும், ரூ.10 ஆயிரம் கோடியில் நாடாளுமன்ற கட்டிடம் கட்டவும் தனியே நிதி ஒதுக்கியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக எங்கும் பயணம் செய்யலாம். எனவே, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தான் அரசு நகரப்பேருந்துகளின் உரிமையாளர்கள். பிரதமர் மோடியை எதிர்க்கும் ஒரே தலைவராக நமது திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.