தீவிரமான இறுதிக் கட்ட பணிகளில் ‘அருண் விஜயின் பார்டர்’

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம். இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு தமிழ் திரை உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு, 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கிறது. பல புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களும், பார்வையாளர்களும் திரையரங்கத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் எதிர்வரும் மாதங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளியாக தயாராகிவருகிறது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்சன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் ‘அருண்விஜய்யின் பார்டர்’. ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அருண் விஜய்யின் பார்டர்’ திரைப்படமும் இணைகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் அருண் விஜயும் ஒருவர். ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்திலும் துணிச்சல் மற்றும் சவாலான புலனாய்வு துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையும், பயிற்சியும் செய்து சண்டைக்காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். அதிலும் கொரோனா தொற்று பரவல் இருந்த காலகட்டத்தில், படத்தின் பணிகளை நிறைவு செய்வதற்காக படக்குழுவினருக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார். குறிப்பாக டெல்லி, ஆக்ரா மற்றும் அஜ்மீர் ஆகிய நகரங்களின் வீதிகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு முழுமையான ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்.

 

இந்த படத்தில் அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல், நாயகன் அருண் விஜய்யின் காதலியாக – ஜோடியாக நடித்திருக்கிறார். அவருடைய திறமையான நடிப்பு, இப்படத்தின் வெற்றிக்கு உதவும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இப்படத்தில் நாயகன் அருண் விஜயுடன் பணியாற்றும் புலனாய்வு துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரும் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றார். பிரபல நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் அறிவழகன் மற்றும் அவரது குழுவினர், கொரோனா பாதிப்பு காலகட்டத்திலும் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, படத்தின் இறுதிகட்ட பணிகளை நிறைவு செய்தனர். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகியிருக்கும்  ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் மூலம் இயக்குனர் அறிவழகன் மீண்டும் ஒரு திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த திரைப்படம் தணிக்கைக்குச் செல்லும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கிறது.

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படத்தை, 11 :11 புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் வெளியிடுகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகக்கூடும். இந்நிலையில் ‘அருண் விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *