அருண் பாண்டியன், பிரவீன், கீர்த்தி பாண்டியன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படத்தை கோகுல் இயக்கியிருக்கிறார். ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். ‘ஹெலன்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘ஹெலன்’. இப்படத்தை மகளுக்காக தமிழில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் அருண் பாண்டியன்.
கனடாவிற்கு வேலைக்கு சென்று சம்பாதித்து அப்பா அருண்பாண்டியனின் கடனை அடைத்து விட வேண்டும் என்று நர்சிங் படித்து விட்டு தனியார் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கும் கீர்த்தி பாண்டியன் முயற்சி செய்கிறார். சிறு வயதிலேயே தாயை இழந்த தன் மகளை எந்த குறையும் இல்லாமல் வளர்க்கும் அருண் பாண்டியன், தன் மகள் தான் வாங்கிய கடனை அடைக்க கனடா போவதை எப்படியாவது தடுக்க நினைக்கிறார் மகளை பிரிய மனமில்லாமல். இந்நிலையில், கீர்த்தி பிரவீனை காதலிக்கும் விஷயம் அருண் பாண்டியனுக்கு தெரிய வருகிறது. இதனால், கீர்த்தியுடன் பேசாமல் மௌனக் காக்கிறார் அருண் பாண்டியன். இறுதியில் கீர்த்தியின் காதலை ஏற்றுக் கொண்டாரா அருண்பாண்டியன்? கனடாவிற்கு சென்று அப்பாவின் கடனை அடைக்கிறாரா கீர்த்தி? என்பதே படத்தின் மீதிக்கதை.
அதிரடியான கதாபாத்திரங்களில் பார்த்து வந்த அருண்பாண்டியனை மகள் மீது மிகுந்த பாச உணர்வுபொங்கும் அப்பாவாக இப்படத்தில் காணலாம். முதல் படத்திலேயே தன் அப்பாவுடன் அதுவும் மகள் கதாபாத்திரத்திலேயே அப்பாவிற்கு மிகையாக, நடித்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன். அப்பாவின் கடனை அடைக்க முயலும் காட்சியில் பொறுப்பான மகளாகவும், அப்பா புகைப்பதைக் செல்லமாக கண்டிக்கும் காட்சியிலும் இயல்பாக நடித்திருக்கிறார்.
புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவிற்கு பிரவீன் சிறப்பாக நடித்திருக்கிறார். காதலி தான் முக்கியம் என்று வேலையை விட்டு விட்டு வரும் காட்சியில் நெகிழ செய்கிறார் பிரவீன்.
கதாபாத்திரங்கள் தேவைக்கேற்ப கொடுக்கப்பட்டிருக்கின்றது. இப்படம் மறு உருவாக்கமாக இருந்தாலும் திரைக்கதையை ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல். சில காட்சிகள் சினிமாத்தனம் கலந்திருந்தாலும் திரைக்கதை அதை மறக்கச் செய்கிறது. இரண்டாம் பாதி அனைவரையும் இருக்கை நுனியில் அமரவைத்து இதயத் துடிப்பை எகுற செய்கிறது. ஜாவித் ரியாஸின் இசை திரைக்கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு இமை கொட்டாமல் பார்க்க வைக்கிறது, பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு காட்சியினுடே நகர செய்கிறது. ஜெயராஜ் கோலிக்கோடு, அடிநாட் சசி, பூபதி ராஜா ஆகியோரும் தங்கள் பத்திரங்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ரவீந்திர விஜய் நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார். இயக்குநர் கோகுலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அன்பிற்கினியாள் – அன்பை செலுத்தி அன்பை பெறுகிறார்